........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-46

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

46. நம்பிக்கையில்லாமல் செயல்படலாமா?

சிலருக்கு நம்பிக்கை என்பதே இருப்பதில்லை. எந்தச் செயலைச் செய்ய வேண்டுமென்றாலும் அதில் ஏதாவது குறை கண்டு நம்பிக்கையின்மையுடன் இருப்பார்கள். இதனால் எந்தச் செயலையும் செய்ய முடியாமல் பலரிடமும் இவன் உதவாக்கரை, ஒன்றுக்கும் உதவமாட்டான் என்கிற வசைச் சொற்களையும் கெட்ட பெயரையும் நிறைய தேடி வைத்திருப்பார்கள். இவர்களுக்கு நல்ல பெயர் என்பது கேள்விக்குறியாகத்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எந்தச் செயலையும் செய்வதற்கு முன்பும் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். நம்பிக்கையற்ற செயல்பாடுகள் நம்முடைய செயலின் வேகத்தைக் குறைக்கின்றன. எந்த ஒரு செயலிலும் நம்பிக்கையின்மை ஏற்படும் பொழுது, முதலில் ஆர்வம் குறைகிறது. ஆர்வமில்லாமல் செய்வதால் அந்த செயலில் முழுமையிருப்பதில்லை. இதனால் அந்தச் செயலில் வெற்றியைப் பெற முடியாமல் தோல்வியையேச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய பாவங்களைப் போக்க கங்கையில் ஸ்நானம் செய்து திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் பார்வதி பரமசிவனைப் பார்த்து, "சுவாமி, கங்கையில் ஸ்நானம் செய்தால் பாவங்கள் அனைத்தும் போய்விடும் என்பார்களே, ஆனால் இங்கு கங்கா ஸ்ஞானம் செய்து வரும் ஒருவருக்குக் கூட அவர்களுடைய பாவங்களோ, கஷ்டங்களோ மறைந்ததாகத் தெரியவில்லையே?" என்றார்.

"கங்கையில் ஸ்ஞானம் செய்திருந்தால் இவர்களுடைய பாவம் தொலைந்திருக்கும். இவர்கள்தான் ஸ்ஞானம் செய்யவேயில்லையே..." என்றார்.

"என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? இவர்கள் உடலும் உடையும் கூட இன்னும் காயவில்லை; ஸ்ஞானம் செய்யவில்லை என்று சொல்கிறீர்களே?"

"இவர்கள் யாரும் ஸ்ஞானம் செய்யவில்லை. கங்கைத் தண்ணீரில் உடலை நனைத்துவிட்டு வருகிறார்கள். அதனால்தான் இவர்களுடைய பாவங்கள் போகவில்லை. நாளை இதை உனக்கு நிரூபித்துக் காட்டுகிறேன்." என்றார் பரமசிவன்.

அன்று இரவு நல்ல மழை பெய்தது. கங்கைக்குச் செல்லும் வழி முழுவது சேறாகிப் போய் விட்டது. வழியில் ஒரு பள்ளம் வேறு ஏற்பட்டது.

அடுத்த நாள் காலை. பரமசிவன் ஒரு வயோதிக அந்தணர் வேடத்திற்கு மாறி அந்தக் குழியில் விழுந்து கிடந்தார். மேலே ஏற முடியாதவராய்த் தவித்தார். பார்வதி ஓர் இளம்பெண் வேடத்திற்கு மாறி அந்தப் பள்ளத்திற்கு அருகில் அமர்ந்து கொண்டார்.

பரமசிவன் முன்பே சொல்லிக் கொடுத்ததைப் போல் பார்வதி, "இங்கு என் வயதான கிழவர் பள்ளத்தில் விழுந்து விட்டாரே! யாராவது கைகொடுத்து இவரைத் தூக்கிவிட மாட்டீர்களா?" என்று கதறினாள்.

கங்கையில் முழுகிவிட்டுப் பலர் திரும்பிக் கொண்டிருந்தனர். ஆனால் கிழவரைத் தூக்கிவிட வேண்டும் என்கிற எண்ணம் யாருக்கும் வரவில்லை.

"இந்தக் கிழவனைப் பற்றி இந்த இளம் பெண் ஏன் வேதனைப்படுகிறார்? கிழவன் செத்தால் சாகட்டுமே!" என்று பலர் நினைத்தனர்.

கடைசியில் சிலர் கிழவரை அந்தப் பள்ளத்திலிருந்து தூக்கிவிட முன் வந்தார்கள். ஆனால் பார்வதி அவர்களைப் பார்த்து, "என் கணவர் ஒரு பாவமும் அறியாதவர். எனவே பாவமற்ற ஒருவர்தான் இவரைத் தொட வேண்டும். பாவம் செய்தவர் இவரைத் தொட்டால் அவர்கள் சாம்பலாகி விடுவார்கள்" என்று சொன்னாள்.

இதைக் கேட்டதும் கிழவரைக் காப்பாற்ற முன்வந்த பலரும் அங்கிருந்து நகன்று விட்டார்கள்.

அன்று முழுவதும் அந்த வயதான அந்தணரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.

கடைசியாக கங்கையில் ஸ்நானம் செய்து திரும்பிக் கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன். அவனைப் பார்த்த பார்வதி, "இங்கு என் வயதான கிழவர் பள்ளத்தில் விழுந்து விட்டார். தாங்கள் கொஞ்சம் தூக்கிவிட மாட்டீர்களா?" என்று கேட்டாள்.

அந்த இளைஞனும், "அதனாலென்ன, இதோ தூக்கிவிடுகிறேன்" என்றான்

உடனே பார்வதி, "அய்யா, இவரைத் தொடாதீர்கள். நீங்கள் பாவமற்றவராக இருந்தால்தான் இவரைத் தொட முடியும். இல்லா விட்டால் சாம்பலாகப் போய்விடுவீர்கள்" என்றாள்.

"நான் பாவமற்றவன் என்பதில் என்ன சந்தேகம். இப்பொழுதுதானே கங்கையில் ஸ்நானம் செய்து, என் பாவங்களை நீக்கி விட்டு வருகிறேன். ஆகவே நான் சாம்பலாக மாட்டேன் என்று சொல்லி, அந்த இளைஞன் கிழவரைத் தூக்கி விட்டான்.

உடனே அவனுக்குப் பரமசிவனும் பார்வதியும் காட்சியளித்து அருள் புரிந்தனர்.

பரமசிவன் பார்வதியைப் பார்த்து, "கங்கையில் நம்பிக்கையோடு ஸ்நானம் செய்தால் பாவங்கள் விலகும்; தெரிந்ததா? என்றார். 

-இப்படி எந்த ஒரு செயலிலும் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதுடன், அந்த நம்பிக்கையில் நம் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் நமக்கு வெற்றியும் நல்ல பெயரும் நிச்சயம் கிடைக்கும்.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-45                                                                                                                             வழிமுறை-47                                                                                                        

 
                                                                                                                                                                                                                 முகப்பு