........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-1. பகுதி-45 நல்ல பெயர் வாங்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி.
45. பணத்தின் பின்னால் ஓடலாமா?
இன்று பணம் ஒன்றுதான் வாழ்க்கை. பணமில்லா விட்டால் வாழத் தகுதியற்றவன் என்பதாக ஒரு மாயத் தோற்றம் அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. பலரும் பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தங்களுக்குப் பணத்தின் மீது சிறிது கூட ஆசையில்லை என்று சொல்லிக் கொண்டாலும் அவர்களின் பயணம் பணம் என்கிற ஒரு வழிப்பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பணத்தை அவர் யாருக்கெல்லாம் தேடிக் கொண்டிருக்கிறாரோ, அவர்களே வேண்டாமென்று சொன்னாலும் விடாமல் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றனர். இதனால் குடும்பத்தில் அவருக்கும் அவரின் செயலுக்கும் எதிர்ப்பே இருக்கிறது. மேலும் குடும்ப உறவுகளில் இடைவெளி அதிகரிக்கிறது. இதனால் அவர் எதனால் நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாரோ அதனாலேயே அவப் பெயரைப் பெற வேண்டியதாகி விடுகிறது. பணத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அதைப் பாதுகாக்க வேண்டும், தற்போது இருப்பதை விட மேலும் அதிகமாகச் சேர்த்து விட வேண்டும் என்கிற எண்ணத்துடன் தங்களின் அன்றாட வாழ்க்கையின் சுகங்களைத் தொலைத்து, உறவுகளை இழந்து, கடைசியில் மனம் போன போக்கிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முல்லாவின் நண்பர் ஒருவர், மாடு ஒன்றினைக் கயிற்றால் கட்டி இழுத்தபடிப் போய்க் கொண்டிருந்தார். எதிரே வந்த முல்லா, "மாடு உங்களை எங்கே இழுத்துச் செல்கிறது?" என்று அவரிடம் கேட்டார். "என்ன முல்லா, உனக்கென்ன கண் குருடா? நானா மாட்டின் இழுவைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்? மாடு என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது" என்றார். முல்லா, "அப்படியா, உங்கள் கையிலிருக்கும் கட்டினை சிறிது அவிழ்த்து விடுங்கள்; அதன்பிறகு நீங்கள் மாட்டுக்குப் பின்னால் ஓடுகிறீர்களா, உங்களுக்குப் பின்னால் மாடு ஓடி வருகிறதா என்று தெரிந்து விடுமே" என்றார். இப்படித்தான் வாழ்க்கையில் பலரும் பணத்தின் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இல்லையேல் குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஓடிவிடும், வாழ்க்கையும் ஓடிவிடும். அப்புறம் நம் குடும்பத்தில் கூட நல்ல பெயர் வாங்க முடியாது. (வழிமுறைகள் வளரும்.)
![]() |
முகப்பு |