........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-44

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

44. சுயமாகச் சிந்திக்க வேண்டும்.

தாங்களாக சுயமாகச் சிந்திக்கத் தெரியாமல் சிலர் இருப்பார்கள். மேலும் இவர்கள் குறிப்பிட்ட ஒரு சிலர் சொல்வதை மட்டும் வேதவாக்காகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தக் குறிப்பிட்ட சிலரும் தனிப்பட்ட திறனுடையவராக இல்லாவிட்டாலும் பிறரைக் குறை கூறுவதில் மட்டும் வல்லவராக இருப்பார்கள். இந்த வல்லவர்களின் பேச்சைக் கேட்டு செயல்படுபவர்கள் நல்லது எது? கெட்டது எது? என்பதையெல்லாம் சிந்திப்பதில்லை. சொன்னதைச் செய்வதில் மட்டும் அக்கறையாயிருப்பர். இந்தச் செயல்பாட்டால் சில ஆபத்துகள் வந்து தனக்கு கெட்ட பெயர் ஏற்படும் போதுதான் நாம் அப்படி செய்திருக்கக் கூடாதோ என்று கவலைப்படுகிறார்கள். இந்தக் கவலையில் நியாயமிருக்கிறதா?

ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு சிலரிடம் ஆலோசனைகள் கேட்பதில் தவறில்லை. ஆலோசனை அளிப்பவர்கள் அதற்குத் தகுதியுடையவர்கள்தானா என்று சிந்திக்க வேண்டும். மேலும் அளிக்கும் ஆலோசனைகளை தாமும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக அதனால் ஏற்படும் விளைவுகளையும் முன்கூட்டியே சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நாம் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றியையும் அதன் மூலம் நல்ல பெயரையும் பெற முடியும்.

சீதாதேவி, "நான் வளர்த்து வரும் என் ஆசைக்கிளிக்கு ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும். என்ன பெயர் வைக்கலாம்?" என்று ராமனிடம் கேட்டாள்.

புன்முறுவல் செய்த ராமன், "என் பிரியமான அன்னையாகிய கைகேயின் பெயரை ஆசைக்கிளிக்கு வைத்து விடு" என்றான்.

கிளிக்கு இராமன் இந்தப் பெயரை ஏன் சூட்டினான்?

கிளிக்கு ஒரு பழக்கம் உண்டு. அதற்குத் தானே சிந்தித்துப் பேசத் தெரியாது. அது மற்றவர்கள் சொல்வதைத்தான் திருப்பிச் சொல்லும்.

அதுபோல் ராமன் வனவாசம் மேற்கொள்ளக் காரணமான வரங்களைக் கைகேயி தானாகக் கேட்கவில்லை. மந்தரை சொல்லித்தான் அப்படி ஒரு வரத்தைக் கேட்டாள்.

மந்தரை கைகேயின் மகன் பரதன் இந்நாட்டை ஆள வேண்டும் என்கிற ஒரு நோக்கத்தில் மட்டுமே கைகேயிக்கு ஆலோசனையை வழங்கினாள். அவளுக்கு அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிந்திக்கத் தெரியவில்லை. மேலும் கைகேயிக்கும் தான் கேட்கும் வரத்தால் என்னெவெல்லாம் நடக்கும் என்பது குறித்து சிந்திக்கத் தெரியவில்லை.

இப்படித்தான் வாழ்க்கையில் பலரும் சுயநலத்துடன் தனக்கு ஆதரவாகச் சொல்லப்படும் ஆலோசனைகளை எவ்வித சிந்தனையுமில்லாமல் செயல்படுத்திப் பின்னால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு ஆலோசனையாக இருந்தாலும், யார் தெரிவித்த ஆலோசனையாக இருந்தாலும் அது குறித்து முழுமையாகச் சிந்தித்து தாமாக ஒரு நல்ல முடிவை எடுக்கத் தெரிய வேண்டும். அப்போதுதான் நல்ல பெயரையும் நல்ல நிலையையும் அடைய முடியும். 

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-43                                                                                                                             வழிமுறை-45 

                                                                                                                                                                                           

 
                                                                                                                                                                                                                 முகப்பு