........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-7

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

7. வரட்டு கவுரவத்தை விரட்டி விடுங்கள்!

ஒரு சிலர் இருக்கிறார்கள். ஒரு சில விஷயங்களை மட்டும் தெரிந்து கொண்டு தனக்கு அது பற்றி முழுவதும் தெரியும் என்பது போல் காட்டிக் கொள்வார்கள். இவர்கள் தனக்கு மட்டும் அதிகமாக அறிவு வேலை செய்கிறது என்பது போல் எல்லோரிடமும் சொல்லிக் கொள்வார்கள். இவர்களால், சுயமாக ஒன்றைக் கூட செய்ய முடியாது. ஆனால், எல்லாவற்றையும் நான் ஒருத்தனாகத்தான் செய்கிறேன் என்று அலுத்துக் கொள்வார்கள். இவர்கள் தங்களுக்கு ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம்தானா? அது தனக்கு போதவில்லையே... என்று வருத்தப்பட்டுக் கொள்வார்கள். இவர்கள் நாள் முழுக்க தனக்கு அதிகமான வேலை இருந்து கொண்டே இருப்பதாகச் சொல்லி யாரிடமாவது பீற்றிக் கொண்டு திரிவார்கள். உண்மையில் இவர்கள் ஒரு வேலைக்கும் லாயக்கற்றவர்கள். இவர்களால் தகுந்த துணையில்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது. இதை வரட்டுக் கவுரவம் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் இது ஒருவிதமான மனநோய்தான்.

தங்களை அனைவரும் பாராட்ட வேண்டும். அனைத்து இடத்திலும் தன்னை மதிப்பாக வைக்க வேண்டும். தங்களை எல்லோரும் உயர்வாக நினைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் வரட்டுக் கவுரவத்தால் இவர்கள் செய்யும் செயல்கள் பல முட்டாள்தனமாக இருப்பதுடன் இவர்களை பல இடங்களில் தலைகவிழ வைத்து விடுகிறது.  ஆனால், ஏற்கனவே உள்ள பெயரையேக் காப்பாற்ற முடியாமலிருக்கும் இவர்கள் நல்ல பெயர் எப்படி வாங்குவது?  வேறு வழியே இல்லை... தங்களிடமுள்ள வரட்டுக் கவுரவத்தை விரட்டி (விட்டு) விட வேண்டும். அப்போதுதான் நல்ல பெயருக்கு ஏதாவது வழி கிடைக்கும்.

வங்கதேசத்திலுள்ள ஒரு சிறு கிராமத்திலுள்ள ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய நல்ல உடை அணிந்த இளைஞன் ஒருவன், "கூலி...கூலி..." என்று கூவி அழைத்தான். அவன் கையில் சிறிய பெட்டி ஒன்று இருந்தது.

கிராமத்து ரயில் நிலையத்தில் கூலி எங்கே கிடைப்பான்? அப்போது நடுத்தர வயதிலான கிராமவாசியைப் போலிருந்த ஒருவர் அவனருகே வந்தார்.

உடனே அந்த இளைஞன், "நீங்களெல்லாம் சோம்பேறிகள்... ரயில் வரும் போது ரயில் நிலையத்தில் சரியாக இருப்பதில்லை. எங்கேதான் போவீர்களோ... இந்தப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு நட..." என்றான்.

அந்த மனிதர் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அமைதியாக நடந்தார்.

வீடு வந்ததும் அந்த இளைஞன் பெட்டியைக் கீழே வைக்கச் சொன்னான். கூலி கொடுக்கப் பணத்தை எடுத்தான். அந்த மனிதர், " நன்றி. எனக்கு இதெல்லாம் வேண்டாம்" என்று மறுத்தார்.

"ஏன்? வாங்க மாட்டீர்கள்... இதைக் காட்டிலும் அதிகமான கூலியை எதிர்பார்க்கிறீர்களா?" என்றான் அந்த இளைஞன்.

அந்த நேரத்தில் அந்த இளைஞனின் சகோதரர் வெளியே வந்தார். வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த அவர் பெட்டி தூக்கி வந்தவரைப் பார்த்து வணங்கினார். தனது பெட்டியைத் தூக்கி வந்த மனிதர் வங்காளத்தில் புகழ் பெற்ற அறிஞர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என்பது தெரிந்து அவரது காலில் விழுந்து வணங்கினான். தவறுக்கு மன்னிப்பு கேட்டான்.

விதயாசாகர், "நம் நாட்டு மக்களுக்கு இந்த வரட்டுக் கவுரவம்தான் பல வேலைகளைக் கெடுத்து விடுகிறது. தம் வேலைகளைத் தாம் செய்வதே கவுரவமான விஷயம் என்பதை உணர வேண்டும். அவர்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும். இதுதான் எனக்குக் கூலி..." என்றார்.

ஒவ்வொருவரும் முதலில் தங்களிடமிருக்கும் வரட்டுக் கவுரவத்தை விட்டுவிட வேண்டும்.  இல்லையென்றால் இது நமக்கு பெரும் கெட்ட பெயரைத் தேடித்தரும். இந்த வரட்டுக் கவுரவத்தை விட நமக்குத் தெரிந்த சில யோசனைகள்.

  • தங்களுக்குத் தெரிந்த விஷயமாக இருந்தாலும் அதைப் பிறர் சொல்லும் போது கவனித்துக் கேளுங்கள். தனக்கு அது முன்பே தெரியும் என்று தட்டிக் கழிக்காதீர்கள்.

  • தங்களால் முடியும் வேலைகளுக்கு பிறரைத் தேடாதீர்கள். சற்று கடினமாக இருந்தாலும் முயற்சித்துப் பாருங்கள்.

  • தனக்கு மட்டும் அடுத்தவர்களை விட அதிகமான யோசனைகள் தோன்றுகிறது என்று சொல்லி அந்த யோசனையை அடுத்தவர்கள் விரும்பாத நிலையில் அவர்களிடம் சொல்லி அவர்களைக் கஷ்டப்படுத்தாதீர்கள்.

  • பொது இடங்களில் எல்லோரையும் போல் சாதாரணமாக இருங்கள்.  தங்களை முக்கியத்துவப் படுத்துகிறேன் என்று முன்னால் போய் நின்று தேவையில்லாதவவைகளைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

  • தங்கள் முன்னோர்கள் கவுரவமாக இருந்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட தாங்கள் கவுரவமாக இருப்பதற்கு வழி தேடுங்கள்.

இப்படி நாம் வழிகளைத் தேடத் துவங்கி விட்டாலே... வரட்டுக் கவுரவம் தானாகவே ஓடத் துவங்கி விடும்.  இது ஓடி விட்டால் உங்களுக்கு நல்ல பெயர் தானாகத் தேடி வரும்.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-6                                                                                                                                              வழிமுறை-8

                                                                                                  

 
                                                                                                                                                                                                                 முகப்பு