........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-8

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

8. சொன்ன சொல்லைக் காப்பாற்றுங்கள்!

முந்தைய காலத்தில் பெரியவர்கள் நாம் கொடுத்த வாக்கு தவறக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை காட்டினார்கள். இப்பொழுதெல்லாம் இது வேடிக்கையாகப் போய் விட்டது. இன்று பலரும் தனக்குக் கீழுள்ளோரை ஏமாற்றுவதற்காக ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். அரசியல்வாதிகள் அரசியல் லாபத்துக்காக அவிழ்த்து விடும் வாக்குறுதிகள், காதலர்கள் காதலிகளிடம் சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் இன்று பலரது அன்றாட வா(ழ்க்கை)யில் தாராளமாக ஓடி வருகிறது.  தனக்கு ஏதாவது ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் போதும் உனக்கு அதைச் செய்து தருகிறேன், இதைச் செய்து தருகிறேன் என்று பல ஆசை வார்த்தைகளை அள்ளி விடும் பலர் அந்த வேலை முடிந்த அடுத்த நிமிடமே அவர்களைக் கழற்றியும் விட்டு விடுகிறார்கள். எல்லோரையும் விட தான் மட்டும் வாழ்க்கையின் உச்சிக்குச் சென்று விட வேண்டும். தனது தலைமுறைக்கு மட்டுமில்லை தனக்குப் பின்னால் வரும் பத்து தலைமுறைக்கும் தானே சொத்துக்கள் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்பது போன்ற எண்ணத்தில் இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் பேராசையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு எல்லாம் நல்ல பெயர் எங்கே கிடைக்கும்?

மனிதனுக்கு மட்டுமே பேச்சு எனும் மாபெரும் சக்தி இருக்கிறது. இந்தப் பேச்சை நல்ல வழிக்குப் பயன்படுத்தாமல் பிறரை ஏமாற்றி தான் மட்டும் வாழ்ந்து விட வேண்டும் என்பதாகவே பலரும் இருக்கிறார்கள். வணிகத்திற்குப் பயன்படுத்திய வார்த்தைகளை எல்லாம் வாழ்க்கைக்கும் பயன்படுத்தி பலரை ஏமாற்றி சிலர் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காலையில் சொன்ன சொல்லை அப்படியே மாலையில் (ஏ)மாற்றி விடுகிறார்கள். தம்முடைய சொல்லுக்குத் தாமே மதிப்பளிக்காத இவர்களுக்கு எப்படி நல்ல பெயர் கிடைக்கும்?

நாம் ஒருவருக்கு ஏதாவது செய்வதாகச் சொல்லிவிட்டால் அதை எப்பாடுபட்டாவது செய்து கொடுக்க முன்வர வேண்டும். அதை விட்டுவிட்டு "நான் அப்போது சொன்னேன்... இப்போ என்னால் செய்ய முடியாது..." என்று பின் வாங்குவது நல்லதல்ல. நம்மை நம்பி வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும். முதலிலேயே முடியாது என்றால் சொல்லி மறுத்து விடலாம். ஆனால்  செய்து கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டு கடைசியில் ஏதாவது சொல்லி மறுத்தால் அது அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். நம்மை நம்பி வந்தவர்களை நமது காரியம் முடிந்து விட்டது என்கிற அகந்தையில் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து, அவர்களுக்கு நம்பிக்கைக்குத் துரோகம் செய்வது மிகப்பெரும் குற்றமாகும். இதுபோல் நம் தேவைகளுக்காக மற்றவர்களது உழைப்பைப் பெற்ற நாம் அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும். அவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்வது நல்லதல்ல.

பிரான்சு நாட்டில் செயிண்ட் பாய்க்ஸ் எனும் கவிஞர் ஒருவர் இருந்தார். அவருக்குப் போதுமான வசதிகள் இருந்த போதும் அடிக்கடி கடன் வாங்கியே வாழ்ந்து வந்தார்.

ஒரு முறை கவிஞர் முகச்சவரம் செய்து கொள்ள கடைக்குச் சென்றிருந்தார். அவர் முகத்தில் சோப்பு போடப்பட்ட சமயத்தில், அவருக்குக் கடன் கொடுத்த ஒருவர் வந்து கடனைத் திருப்பித் தரும்படி கத்தினார்.

உடனே கவிஞர் செயிண்ட் பாய்க்ஸ், "வீணாகக் கத்தி என் மானத்தை வாங்காதீர்கள். நான் முகச்சவரம் செய்து முடிக்கும்வரை பொறுத்துக் கொள்ள முடியுமா?" என்று கேட்டார்.

கடன் கொடுத்தவர், "ஓ...! முடியும் பொறுத்துக் கொள்கிறேன்!" என்றார்.

"சொன்ன சொல் தவற மாட்டீர்களே?" என்று மீண்டும் கவிஞர் கேட்டார்.

"உறுதியாக சொன்ன சொல்லைத் தவற மாட்டேன்" என்றார் கடன் கொடுத்தவர்.

உடனே கவிஞர் அந்தக்கடையில் ஒரு துணியை வாங்கிச் சோப்பைத் துடைத்துவிட்டு, வாழ்நாள் முழுவதும் தாடி வளர்க்கத் துவங்கினார்.

கடன் கொடுத்தவர் தனது சொல்லைக் காப்பாற்ற அவரிடம் கடனை அதற்குப் பிறகு திருப்பிக் கேட்கவே இல்லை.

அந்தக்கடனைக் கவிஞராக ஒரு நாள் திருப்பிக் கொடுத்தாராம்.

-இப்படி தாம் சொன்ன சொல்லுக்காகத் தன் பணத்தைத் திருப்பிக் கேட்காமல் இருந்த நிலை போய் இன்று வாழ்க்கையில் பணத்துக்காக தாங்கள் சொன்ன சொல்லையே மாற்றிக் கொள்ளும் பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு நல்ல பெயர் தேவையில்லை, நல்ல நட்புகள் தேவையில்லை, நல்ல உறவுகள் தேவையில்லை. நாம் அப்படி இருக்க முடியுமா?

நல்ல பெயர் நமக்கு நட்புகள் மற்றும் உறவுகளை மட்டுமில்லை நாம் நல்ல நிலையை அடையவும் உதவும் என்பதை மனதில் கொண்டு சொன்ன சொல்லைக் காப்பாற்றுங்கள்.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-7                                                                                                                                               வழிமுறை-9

                                                                                                  

 
                                                                                                                                                                                                                 முகப்பு