........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-9

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

9. முட்டாளையும் முன்னிலைப் படுத்துங்கள்.

ஒரு சிலர் இருக்கிறார்கள். அனைத்து விசயத்திலும் தன்னை முன்னிலைப் படுத்திக் காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். எஜமான் படத்தில் நெப்போலியன் ஒரு வசனம் பேசுவார். அந்த வசனத்தில்,  "கல்யாண வீடாயிருந்தால் அதில் நான்தான் மணமகனா இருக்கனும். இழவு வீடாயிருந்தால் அதில் நான்தான் பிணமாக இருக்கனும். மாலையும் மரியாதையும் எனக்கு மட்டுதான் இருக்கனும்..." என்பதாக இருக்கும். இதுபோல் சிலர் தன்னை மட்டுமே எல்லோரும் மதிக்க வேண்டும். மரியாதை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பார்கள். பிறர் செய்த காரியத்தைத் தானே கஷ்டப்பட்டு செய்ததாகச் சொல்லிக் கொள்வதில் இவர்களுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி. இவர்களிடம் அவருக்குத் தெரிந்த யாராவது ஏதாவது ஒரு காரியத்தைச் சிறப்பாக செய்திருக்கிறார் என்று சொல்லி விட்டால் போதும். அந்த காரியத்தைத் தன்னுடைய உதவியால்தான் செய்ய முடிந்தது என்பார். இது போல் எல்லா இடங்களிலும் தன்னை முன்னிலைப் படுத்துகிறேன் என்று முன்னால் சென்று அடி வாங்கினாலும் கூட அதுவும் தன்னால் மட்டுமே முடிந்தது என்று சொல்லிக் கொள்வார்கள். இவர்களிடம் என்னதான் செய்தாலும் நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம். இந்த மாதிரி ஆட்களிடம் நாம் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த முட்டாள்களுக்கு உண்மையின் மதிப்பு தெரியாது.

இவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்று நினைத்து விட்டால், முதலில் அவர்களிடம் பேசும் போது நாம் செய்த எந்தக் காரியத்தையும் இந்தக் காரியம் உங்களுடைய அறிவுரைப்படி நடந்ததால்தான் வெற்றியடைந்தது. இல்லாவிட்டால் பெரும் பிரச்சனையாயிருக்கும் என்பது போல் பேச வேண்டும். எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு முன்பு இவர்களை பெயருக்கு முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காரியத்தை இவர்கள் எப்படியாவது தடை செய்து விடுவார்கள். எனவே அவர்களை முன்னிறுத்தி எல்லாக் காரியத்தையும் செய்யத் துவங்குங்கள்.

தவசீலரான அயோத தௌமியரும் அவரைப் பின்பற்றி நடக்கும் சீடர் ஆருணீயும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

இடையில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது.

உடனே ஆருணீ தனது குருவை முந்திக் கொண்டு ஆற்றிலே இறங்கி நடக்கலானார். அவரைப் பின்பற்றியே குருவும் செல்ல வேண்டியதாயிற்று.

அவர்கள் அக்கரையை அடைந்ததும் குரு கோபமாக ஆருணீயைப் பார்த்துக் கேட்டார், "குருவாகிய நான் வழிகாட்ட சீடனான நீ பின்னால் வரவேண்டியவன். இப்போது நிலை பிறழச் செய்து விட்டாய்! இது முறையல்ல...!"

"குருவே! என்னைப் பொருத்தருள வேண்டுகிறேன் தங்களுக்கு முன்னால் நான் ஆற்றிலே இறங்கி நீரின் ஆழம், சுழி, நெளிவு, விரைவு ஆகியவற்றைக் கண்டு சென்றதாலேயே தாங்கள் எளிதாக என் பின்னால் வர இயன்றது. மேலும் முன்னால் சென்ற இந்த ஆருணீயை ஆற்று நீர் அடித்துச் சென்றிருந்தால் கேடு ஒன்றுமில்லை. என்னைப் போன்று பல ஆருணீகளை நீங்கள் உருவாக்க முடியும். ஆனால் தங்களை ஆற்று நீர் அடித்துச் சென்றிருந்தால் நாட்டிற்கும் இறை பணிக்கும் எவ்வளவு பெரிய இழப்பு? எவ்வளவு ஆருணீகள் சேர்ந்து முயன்றாலும் தங்களைப் போன்ற தவசீலர்களைப் படைத்துவிட முடியும்?" என்று கேட்டு கண்ணீருடன் பணிந்து நின்றார் ஆருணீ.

குருவான அயோத தௌமியரும் அதன்பின் பேசவில்லை.

இப்படித்தான் சிலர் உண்மை தெரியாமல் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறார்கள். கோபமுமடைகிறார்கள். இவர்களிடம் நல்ல பெயர் வாங்க அவர்களைப் பற்றி பெருமையாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.  முட்டாளாயிருந்தாலும் முன்னிலைப் படுத்துங்கள்... முட்டாளிடமும் நல்ல பெயர் வாங்கலாம். 

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-8                                                                                                                                           வழிமுறை-10

                                                  

 
                                                                                                                                                                                                                 முகப்பு