........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-1. பகுதி-10 நல்ல பெயர் வாங்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி.
10. பிறரைக் கேலி, கிண்டல் செய்யலாமா?
பிறரை வேடிக்கையாகப் பேசுவது, பிறரைக் கேலி கிண்டல் செய்வது என்று சிலரது செயல்பாடுகள் இருக்கின்றன. இது அவர்களுக்குச் சந்தோசமாக இருக்கும். ஆனால், அதைக் கேட்பவர்களுக்கு சங்கடமாக இருக்கும் என்பதை மட்டும் இவர்கள் உணர்வதில்லை. உண்மையை அறிவதுமில்லை. அவர்களுக்குத் தெரிந்த அரைகுறையான செய்திகளை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை மட்டம் தட்டிப் பேசுவதில் சிலர் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இவர்களிடம் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் தங்கள் குறைகளை மறந்து , அடுத்தவர் குறைகளில் பெரும் அக்கறை காட்டுகிற இவர்கள், பிறரைக் கேலி, கிண்டல் செய்து கடைசியில் அவர்களே கேலிக்குரியவர்களாகி விடுகிறார்கள். அதன் பின்னால் அவர்களுக்கு இருந்த பெயரையும் இழந்து விடுகிறார்கள். தனக்கு இயலாத ஒன்றை இயன்றவர் செய்யும் போது அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஏமாற்றத்தில் இருப்பவர்களிடம்தான் இந்த ஏளனப் பேச்சுக்கள் ஏராளமாக வலம் வருகிறது. தங்களின் முயலாமை, இயலாமை போன்றவைகளால் வெற்றியைப் பெற முடியாமல் ஏமாற்றமடையும் இவர்களின் ஏமாற்றங்கள் இவர்களுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்களால் பிறரைக் கேலி, கிண்டல் செய்வதில் ஆறுதல் அடைகிறார்கள். இந்த கேலி கிண்டல் பேச்சுக்கள் அந்த இடத்தில் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் உள்ளுக்குள் உடைந்து போய்விடுகிறார்கள். இவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை அப்படியே தங்கிப் போய் விடுகிறது. இந்த நிலையில் அவர்கள் தொடர்ந்தால் மனநிலையே பாதிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர்கள் தங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை விட்டுவிட்டு புதிய மனநிலைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். தங்களால் முடியாத ஒன்றை பிறர் செய்து விட்டால் முதலில் அவர்களைப் பாராட்ட வேண்டும். அவர்களிடம் அதை எப்படி செய்வது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் உண்மை நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மையை உணர்ந்தாலே நமக்கு நன்மை தானாக வந்து சேரும். நல்ல பெயரும் நம்மைத் தேடி வரும். சிறுவன் ஒருவன் ஆமையும், நத்தையும் மெதுவாக நகர்ந்து செல்வதைப் பார்த்தான். "என்ன இப்படி அசைந்து அசைந்து வருகிறீர்கள்? உங்களைப் போன்ற சோம்பேறியை நான் பார்த்ததே இல்லை. சுறுசுறுப்பாக இருக்க வேண்டாமா? என்று அவற்றைக் கேலி செய்தான். அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர் அவனின் கேலிப் பேச்சைக் கேட்டார். "சிறுவனே! இந்த ஆமையையும், நத்தையையும் பார்த்து நீ பொறாமைப்பட வேண்டும். அவற்றைப் போல் நம்மால் செய்ய முடியவில்லையே என்று ஏக்கம் கொள்ள வேண்டும்." என்றார். சிறுவன், "இந்த ஆமையும், நத்தையும் என்னைப் போல் ஓட முடியவில்லையே... இப்படி மெதுவாக நடந்து போகிறதே... இதைப் பார்த்து நான் ஏன் பொறாமைப்பட வேண்டும்?' என்றான். "உன்னால் உன் வீட்டைச் சுமக்க முடியுமா? சுமந்து நடக்கத்தான் முடியுமா? வீடு உன் மேலிருந்தால் நீ அப்பொழுதே நசுங்கிச் செத்து விடுவாய். அரிய செயல்கள் செய்யும் அவற்றைப் பாராட்டாமல் கேலி செய்கிறாயே, இது சரியா?" என்று கேட்டார். "அய்யா, என்னை மன்னியுங்கள். இனி யாரையும் கேலி செய்ய மாட்டேன். உண்மையை உணர்ந்து அதன்படி நட்ப்பேன்" என்று தலையைக் கவிழ்ந்தான். இந்த சிறுவனைப் போல்தான் பலரும் அறியாமையால் பிறரைக் கேலி செய்கிறார்கள். சிலர் பெரியவர்கள் சொல்லும் போது தங்களைத் திருத்திக் கொள்கிறார்கள். சிலர் அவர்களையும் கிண்டல் செய்கிறார்கள். தங்களைத் திருத்திக் கொள்பவர்கள் நல்ல பெயர் வாங்குவதுடன் நல்ல நிலைக்கும் வருகிறார்கள். மற்றவர்கள்...? (வழிமுறைகள் வளரும்.)
|
முகப்பு |