தொடர் கட்டுரை-1.
பகுதி-11

நல்ல பெயர்
வாங்கலாம்.
-தேனி.எம்.சுப்பிரமணி.
11.
என்னை விட்டுப் போகாதே...!

"நம்ம என்னதான் செய்தாலும் நம்மை விட்டுப் பலரும் ஒதுங்கிப் போய் விடுகிறார்களே...!" என்று ஒரு சிலர் புலம்பிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் "நான் ஒன்னும் சொல்லவில்லை, ஆனால் அவங்களாவேப் போயிட்டாங்க..." என்று சொல்லி மற்றவர்களிடம் தங்கள் நிலைக்கு ஆதரவு வேறு தேடிக் கொண்டிருப்பார்கள். உண்மையில் இவர்களை முட்டாள்கள் என்றுதான் சொல்லவேண்டும். உண்மையை உணராத இவர்களை வேறு எப்படி சொல்வது? இவர்கள் உண்மையிலேயே நன்மைகள் செய்திருந்தால் அவர்கள் ஏன் ஒதுங்கிப் போகப் போகிறார்கள்.
பிறர்தங்கள் தவறுகளைச் சுட்டிக்
காட்டுவதும், தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளச் சொல்வதும் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. மேலும் இவர்கள் தங்கள் தவறைத் திருத்திக் கொள்ளவே முன் வருவதில்லை.
ஒருவர் நம்மை விட்டு ஒதுங்குகிறார் என்றாலே நம்முடைய செயல்பாடு அவருக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கலாம். ஆனால் நம்மை விட்டுப் பலரும் ஓடிவிடுகிறார்கள் என்றால் நம்முடைய செயல்பாடு எவருக்குமே பிடிக்கவில்லை என்பதுதானே உண்மை. இந்நிலையில் நாம் நம்மை ஏன் மாற்றிக் கொள்ளக்கூடாது?
நம்மை ஒருவர் தவிர்க்கத் துவங்குகிறார் என்றால் அவரிடம் வலியச் சென்று பேசுங்கள். ஏன் அவர் நம்மை விட்டு ஒதுங்க நினைக்கிறார்? அவர் சொல்லும் குறைபாடுகள் நம்மிடம் இருக்கிறதா? அந்தக் குறைபாடுகளை மாற்றி நல்லுறவிற்கு வழி வகுத்துக் கொள்ளலாமா? அவரிடமே பேசி ஒரு நல்ல முடிவுக்கு வந்து விடுங்கள். நம்மை விட்டு ஒருவர் ஒதுங்குகிறார் என்றால் நமக்குத் துணையாக இருந்த ஒன்றை இழக்கப் போகிறோம் என்பதை உணர வேண்டும்.
நம்மை விட்டு ஒவ்வொருவராக தொடர்ந்து விலகிக் கொண்டேயிருந்தால் நாம் முற்றிலுமாக நம்மையே இழக்கப் போகிறோம் என்பதை உணர வேண்டும். யார் போனாலும் நான் கவலைப்பட மாட்டேன். யாரிருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்கிற எண்ணத்துடன் ஒரு சிலர் இருப்பார்கள். இவர்கள் ஒதுங்கிச் செல்பவர்களையும் வலியச் சென்று எதிரிகளாக்கிக் கொள்கிறார்கள். நம்முடைய சிறு எதிர்பார்ப்புகளுக்காக பெரும் உறவுகளைக் கூட இழக்கத் தயாராகி விடுகிறோம்.
இவர்களெல்லாம் நல்ல பெயரை வாங்குவது எப்படி? நல்ல நிலையை அடைவது எப்படி?
ஒரு காட்டில் வானம்பாடி ஒன்று இருந்தது. அது உணவு தேட போவதைச் கஷ்டமாக நினைத்தது.
அந்த வழியாக ஒருவன் வந்தான். அம்மரத்தின் கீழ் அமர்ந்து ஓய்வு எடுத்தான். அவன் கையில் பெட்டி ஒன்று இருந்தது.
அவனைப் பார்த்து ஒரு வானம்பாடி,"பெட்டியுடன் எங்கே செல்கிறாய்?" என்று கேட்டது.
"இந்தப் பெட்டியில் புழுக்கள் உள்ளன. இவற்றைச் சந்தையிலே விற்றுவிட்டு அதற்குப் பதில் பறவையின் இறகுகளை வாங்கப் போகிறேன்" என்றான் அவன்.
"இதற்காக நீ எதற்கு சந்தைக்குப் போய் துன்பப்பட வேண்டும்? அந்தப் புழுக்களில் சிலவற்றை எனக்கு உண்பதற்குக் கொடு. என் இறகுகளில் ஒன்றை உனக்குத் தருகிறேன்." என்றது அது.
அதன்படியே அவன் தன் பெட்டியிலிருந்த புழுக்களை அதனிடம் தந்தான்.
வலியைப் பொறுத்துக் கொண்ட அது தன் இறகுகளில் ஒன்றைப் பிய்த்து அவனிடம் தந்தது.
"நீ இனி சந்தைக்குச் செல்ல வேண்டாம். புழுக்களுடன் இங்கே வா. என் இறகுகளில் ஒன்றை உனக்குத் தருகிறேன்." என்றது அந்த வானம்பாடி.
அதன்படியே அவன் புழுக்களுடன் அடிக்கடி அங்கு வந்தான். புழுக்களைப் பெற்றுக் கொண்ட வானம்பாடியும் தன் இறகுகளில்
ஒவ்வொன்றாகத் தந்தது.
இப்படியே தொடர்ந்து நடந்தது.
வானம்பாடி தன் இறகுகள்
அனைத்தையும் இழந்தது. அதனிடம் இறகுகள் இல்லாததால் புழுக்களுடன் வருபவன் அடுத்து வரவில்லை.
இறகுகள் இல்லாததால் வானம்பாடியால் பறக்க முடியாமல் போனது.
கடைசியில் பசியால் வாடிய அது அங்கேயே செத்து மடிந்தது.
-இப்படித்தான் நாம் எதையாவது எதிர்பார்த்து
, நம்மிடையே இருக்கும் நல்லுறவுகள் ஒவ்வொன்றையும்
இழந்து கடைசியில் நம்மையே அழித்துக் கொள்கிறோம்.
நம்முடன் இருப்பதைக் காத்து நம்மையும் நம் நல்ல பெயரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர ஒவ்வொன்றாக இழந்து ஒன்றுமில்லாமல் போய்விடக் கூடாது.
(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-10
வழிமுறை-12
|