........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-12

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

12. தவறாகும் செயல்கள் வலிமையாகுமா?

தன்னை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களை அழித்து விடவேண்டுமென்று பலரும் நினைக்கிறார்கள். எதையும் அழிப்பது என்பது சுலபம். உருவாக்குவது என்பது மிகவும் கடினம் என்பதை அவர்கள் உணர்வதில்லை. தன்னுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர் யாராக இருந்தாலும் சரி அவர்களை எதிரிகளாக்கிப் பார்க்கிற இவர்களது தவறான மனோபாவமே இவர்கள் உயர்வுக்கு தடையாக இருக்கிறது. இருந்தாலும் இவர்கள் தங்கள் நிலையிலிருந்து தங்களை மாற்றிக் கொள்வதில்லை. 

இவர்களிடம் தங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருந்தவர்களை அப்படியே தூக்கி வீசுவதும், அவ்வப்போது தங்களுக்குத் துணையாக யாரையாவது தேடிக் கொள்வதும் அதன்பின்பு அவர்களிடம் மாட்டிக் கொண்டு விடுபட முடியாமல் விழிப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கும். இருப்பினும் இவர்கள்  தங்கள் எண்ணத்தையோ, செயல்களையோ மாற்றிக் கொள்வதில்லை. தாங்கள் தூக்கி எறிந்தவர்கள் தன்னை விடக் கீழாகவே இருக்க வேண்டும் அவர்கள் தங்களை விட எங்கே முன்னே போய்விடுவார்களோ என்கிற அச்சத்தில் அவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருப்பதுடன் அவர்களை ஒழித்துக்கட்டி விடவேண்டும் என்று காத்துக் கிடப்பார்கள். இதற்குக் காரணம், நம்மால் தேவையில்லை என்று ஒதுக்கப்பட்டவர்கள் வளர்ச்சியை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. 

அடுத்தவரை அழிக்கும் எண்ணம் வந்து விட்டாலே தவறான செயல்களும் தானாகவே வந்து ஒட்டிக் கொள்கிறது. இந்தத் தவறான செயல்களையே தங்களுடைய வலிமையாகவும், வெற்றியாகவும் நினைக்கத் துவங்குகின்றனர். கடைசியில் கெட்டவர்களாகவேப் போய் விடுகின்றனர். இந்த நிலையை இவர்கள் எப்போது மாற்றிக் கொள்கிறார்களோ அப்போதுதான் அவர்கள் நல்லவர்களாக மாறுகின்றனர்.

கெட்ட எண்ணமும் கெட்ட செயல்களுமுடைய ஒருவர் நல்லவராவது எப்படி?

புத்த பெருமான் காட்டு வழியாக வந்து கொண்டிருந்தார்.

கொடிய திருடனான அங்குலிமால் என்பவன் அவரை வழிமறித்து, "உன்னைக் கொல்லப் போகிறேன்... உன்னுடைய கடைசி ஆசை ஏதாவது இருந்தால் சொல்..." என்றான்.

புத்தபெருமான் பதற்றமில்லாமல் அருகிலிருந்த மரம் ஒன்றைக் காட்டி "இந்த மரத்தின் ஒரு கிளையை வெட்ட வேண்டும்" என்றார்.

அவனும் தன் கையிலிருந்த கத்தியால் அம்மரத்தின் கிளை ஒன்றை வெட்டி வீழ்த்தினான். பின், "உன் கடைசி ஆசை நிறைவேறி விட்டதல்லவா?" என்று கேட்டான்.

"இல்லை. மீண்டும் அந்தக்கிளையை அந்த மரத்தில் முன்பிருந்தபடி வைக்க வேண்டும்" என்றார் புத்தபெருமான்.

"உனக்கென்ன பைத்தியமா? வெட்டப்பட்ட மரக்கிளையை மீண்டும் மரத்தில் ஒட்ட வைக்க முடியுமா? முட்டாள்தனமாகப் பேசாதே..." என்றான் அவன்.

"நான் பேசுவது முட்டாள்தனமில்லை... அடுத்தவர்களைக் கொடுமைப்படுத்துவதும், கொல்வதும்தான் மிகுந்த வலிமை என்று உன்னைப் போல் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான வலிமை என்பது ஒன்றை உருவாக்குவதும் அதைக் காப்பாற்றுவதும்தான் அழிப்பதல்ல" என்றார்.

இதைக் கேட்ட அவன் மனம் திருந்தி புத்தபெருமான் காலில் விழுந்து தன்னை மன்னித்து சீடராக ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டினான். 

புத்தரும் அவனை மன்னித்து தனது சீடனாக்கிக் கொண்டார்.

எல்லோர் தவறையும் திருத்த புத்தபெருமான் வருவதில்லை. ஆனால் அவரைப் போன்ற மகான்கள் பலர் தெரிவித்த கருத்துக்களை நாம் படிக்கும் போதோ, கேள்விப்படும் போதோ நம் மனதில் ஆழமாகப் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுபோல் நம்முடைய தவறுகளை யார் சுட்டிக் காட்டினாலும் அதன் உண்மையை உணர்ந்து நம்மைத் திருத்தி நல்லவர்களாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நம்மை நாமே அழித்துக் கொள்ள வேண்டியிருக்கும். 

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-11                                                                                                                        வழிமுறை-13               

                                                                                                  

 
                                                                                                                                                                                                                 முகப்பு