........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-13

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

13. தகுதிக்கு மதிப்பு கொடுங்கள்

ஆள் பாதி ஆடை பாதி என்பது பழமொழி ஆனால் இப்போது இதுவும் மாறிப் போய் விட்டது. ஆளுக்கு மரியாதை கொடுப்பதை விட அவர்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்களை வைத்துத்தான் மரியாதை கொடுக்கிறார்கள். ஒருவர் அணியும் ஆடை, ஆபரணங்கள் அவர்களுடைய உடலை மட்டுமில்லைமனதிற்குள்ளிருக்கும் அனைத்தையும் கூட மறைத்து விடுகிறது. வெளியில் காணும் தோற்றம் அவர்கள் மேல் ஒரு மரியாதையை வர வைத்து விடுகிறது. ஒருவர் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்கள் அதிக மதிப்புடையதாக இருந்தால்அவர் கெட்டவராக இருந்தாலும்கூட அவரை நல்லவராக ஆக்கி விடுகிறது. ஆடை அணிகலன்கள் உண்மையைக் கூட மறைத்து விடுகிறது.

ஒருவருடைய தகுதி கூட அவருடைய ஆடை அணிகலன்களை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஒன்றும் தெரியாத சிலர் தரம் உயர்ந்த ஆடைகளை அணிந்து தங்களை தகுதி மிக்கவர்களாகக் காண்பித்துக் கொள்கிறார்கள். அவர்களுடைய உண்மையான தகுதி எனும் நிலை வெளிப்படும்வரை அவர்கள் உயர்ந்தவர்களாக நினைக்கப்படுகிறார்கள். உண்மையில் இது நல்லதா? போலியாக இருப்பவர்களிடையே உண்மையானவர்கள் நல்ல பெயரைப் பெற முடியுமா?

ஒருவரின் உண்மையான தகுதியும் திறமையும் இந்த ஆடை ஆபரணங்கள் மட்டுமில்லை, எந்தப் பொருளாலும் மறைக்க முடியாது. உண்மையான திறமையும் தகுதியும் எப்படியும் வெளிப்பட்டே தீரும். எனவே ஆடை ஆபரணங்களில் நம்மை உயர்த்திக் கொள்வதை விட நம்முடைய தகுதியையும் திறமையையும் உயர்த்திக் கொள்வதுதான் நமக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும். 

மாவீரன் நெப்போலியனை ஒரு இளம் ஓவியர் பேட்டி காணச் சென்றிருந்தார். ஏழ்மையான நிலையிலிருந்த அந்த ஓவியர் சரியான ஆடைகளில்லாமல் கிழிந்து போன பழைய ஆடையை அணிந்திருந்தார். நெப்போலியன் சற்று அருவருப்புடன் அந்த ஓவியருக்குப் பேட்டி அளித்தார்.

ஓவியர் அறிவும், பண்பும், கலைத்திறனும் உடைய சிறந்த கலைஞர் என்பதை அவருடன் பேசிக் கொண்டிருக்கையில்தான் நெப்போலியனுக்குத் தெரிந்தது. 

பேட்டி முடிந்து ஓவியர் எழுந்தார். நெப்போலியன் அவருடனே எழுந்தார். 

ஓவியர் விடை பெற்றுக் கொண்டு வாசலை நோக்கிச் சென்றார். நெப்போலியனும் அவருடன் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

முதலில் தன்னிடம் பேசுவதற்கே அருவருப்பு காட்டியவர், பிறகு இவ்வளவு பரிவு காட்டுகிறாரே என்று ஓவியர் வியப்படைந்தார். 

பின்பு நெப்போலியனிடமே இதைப் பற்றிக் கேட்டார்.

நெப்போலியன் அமைதியாக, "ஓவியக் கலைஞரே முன்பின் தெரியாதவர்களுக்கு அவரவர்கள் வெளித் தோற்றத்துக்கு ஏற்ப வரவேற்பு. ஆனால் அவர்களுடன் பழகிப் பிரியும் போது அவர்களின் தகுதிக்கு ஏற்ப விடை கொடுக்கிறோம்" என்றார்.

இதைக் கேட்டு ஓவியர் மகிழ்ச்சி அடைந்தார்.

நெப்போலியனைப் போல் திறமையுடையவர்களுக்கு மற்றவர்களின் தகுதியும் திறனும் தெரிந்தது. ஒரு சிலர் இருக்கிறார்கள் யாருக்கு என்ன திறன் இருக்கிறது? என்ன தகுதி இருக்கிறது? என்பது தெரியாமல் நல்ல திறனுடையவர்களை எல்லாம் இழந்து வாழ்க்கையில் பெரும் பள்ளத்துக்கேப் போய் விடுவார்கள். 

உண்மையான தகுதியும் திறனும் என்றும் நிலைத்து நிற்கும். அந்தத் தகுதியுடையவர்களைத் தேடிப்பிடித்து நம்முடன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் நல்ல பெயரையும் நல்ல முன்னேற்றத்தையும் காண முடியும்.. 

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-12                                                                                                                                 வழிமுறை-14        

                                                                                                  

 
                                                                                                                                                                                                                 முகப்பு