தொடர் கட்டுரை-2
பகுதி-4
உண்மை
என்ன?
-வேந்தன் சரவணன்.
4. பாத்திரம் அறிந்து பிச்சை இடு...

தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில்
இதுவும் ஒன்று. வழக்கம் போல இந்தப்
"பாத்திரம் அறிந்து பிச்சை இடு..."
என்கிற பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன்
பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது.
பழமொழிகள் என்பவை பல காலங்களாக வெறும்
வாய்வழக்காகவே இருந்து வந்ததால், அவை எழுத்து வடிவம் பெறும்போது அவற்றில்
தவறுகள் நேர்ந்திருக்கக் கூடும் என்பது ஆய்வாளர்களின் பொதுவான கருத்து ஆகும்.
அன்றியும் பழமொழிகள் எப்போது தோற்றம் பெற்றன என்பதையோ அவற்றில் என்னென்ன
மாற்றங்கள் காலங்கள்தோறும் உண்டாயின என்பதைப் பற்றியோ இங்கே யாரும்
அறுதியிட்டுக் கூற இயலாது. எனவே இப்போதுள்ள பழமொழிகள் நடைமுறைக்கு ஒத்துவராத
பொருளைக் கொண்டிருந்தால் அதனை திருத்தி செம்மை செய்யவேண்டியது நமது கடமை ஆகும்.
அந்த வகையில் மேற்காணும் பழமொழியிலும் எழுத்துப்பிழையால் பொருள் குற்றம்
நேர்ந்துள்ளது. முதலில் இந்தப் பழமொழிக்கு என்ன பொருள் என்பதைப் பார்ப்போம்.
"பிச்சைக்காரன் வைத்திருக்கும் பாத்திரத்தின் தன்மை அறிந்து அதற்கேற்ப
அவனுக்குப் பிச்சை இடு." - இதுவே அதன் பொருள் ஆகும்.
இந்த கருத்து சற்றேனும் ஏற்புடையதாக இருக்கிறதா?. பிச்சைக்காரன் கையில்
வைத்திருக்கும் பாத்திரம் பெரியதா? சிறியதா? அலுமினியமா? வெள்ளியா? பித்தளையா?
திருவோடா? என்றெல்லாம் பார்த்து பிச்சை இடுங்கள் என்று கருத்து சொன்னால் அது
நகைப்புக்கு இடமளிப்பதாய் இருப்பதுடன் அதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வளவு கீழான பொருளுடன் ஒரு பழமொழி ஏன் இயற்றப்பட வேண்டும்?. தமிழுக்கு
இருக்கும் மரியாதையை குறைப்பதற்காகவா?. இல்லை. ஒருபோதும் இல்லை.
பழமொழியை இயற்றியவர்களை என்றுமே நாம் குறை கூறக்கூடாது. ஏனென்றால் எந்தத் தமிழ்
ஆசிரியரும் தமிழுக்குப் புகழ் சேர்க்கும் வண்ணமாகத் தான் பாடல்களை இயற்றுவாரே
ஒழிய அதற்கு இழுக்கு சேர்க்க ஒருக்காலும் நினைக்கமாட்டார். ஒவ்வொரு பழமொழியும்
முத்தான கருத்துக்களைத் தான் கொண்டிருக்கின்றன. சிலவற்றில் வரலாற்றுச்
செய்திகள் கூட கூறப்பட்டுள்ளன. இந்த பழமொழியிலும் அப்படி ஒரு வரலாற்றுச் செய்தி
தான் சொல்லப்பட்டுள்ளது.
சங்கத் தமிழர்களின் சமுதாய அமைப்பில் முக்கிய இடம் பெற்றவர்கள்
தமிழ்ப்புலவர்கள் என்பது நாம் அறிந்த செய்தியே. சிலர் அரசவைப் புலவர்களாக
இருந்த அதே நேரத்தில் பலர் வறுமைக்கோட்டின் கீழ் பிச்சைக்காரர்களாய் வாழ்ந்து
வந்தனர். புலவர்கள் வறுமையாலும் பட்டினியாலும் வாடி வதங்கிய செய்திகள்
புறத்திணை நூல்களில் காணக்கிடக்கின்றன. அவற்றைப் படிக்கும்போது நமது நெஞ்சம்
நெகிழ்ந்துவிடும். தமிழை வளர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்தப் புலவர்களை
சிற்றரசர்களும் மூவேந்தர்களும் போற்றிப் பாதுகாத்து வந்தனர் என்றாலும்
பட்டினிச்சாவு புலவனுக்கு புதியதாய் இருந்ததில்லை. தமிழைக் கற்றுப் புலவனானால்
பட்டினியே மிஞ்சும் என்று அறிந்தும் தமிழ் மீது கொண்ட காதலால் துணிந்து
தலைப்பட்டோர் பலர்.
இப்போது நாம் பயன்படுத்தும் "பிச்சை" என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் "பரிசு"
என்று பொருள். ஏன் தெரியுமா? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான்
புலவனுக்குக் கிடைக்கும் பரிசு ஆகும். அதைப் பெறுவதற்கு அந்தப் புலவன் மன்னனைப்
புகழ்ந்து பாடவேண்டும். எவ்வளவு உயர்வாக புகழ்ந்து பாடுகிறானோ அதற்கேற்ப
அவனுக்குப் பரிசுகள் கிடைக்கும். இப்படிப் புகழ்ந்து பாடுவது தான் புலவர்களின்
"திறமை" யாகக் கருதப்பட்டது. புலவனின் பாடும் திறம் அதாவது திறமையை அறிந்தே
அக்காலத்தில் அவனுக்கு பிச்சை அதாவது பரிசுகளைக் கொடுத்தனர் மன்னர்களும்
சிற்றரசர்களும். இதன் அடிப்படையில் தான் இந்தப் பழமொழியும் உண்டானது.
காலப்போக்கில் ஒரே ஒரு எழுத்து மாற்றத்தால் அதாவது "ற" கரத்திற்குப் பதிலாக "ர"
கரத்தைப் போட்டதால் பொருளே மாறிப்போய் ஒரு வரலாற்றுச் செய்தியே அதற்குள்
முடக்கப்பட்டு விட்டது. உண்மையான பழமொழி இது தான்:
பாத்திறம்
அறிந்து பிச்சை இடு.
(பாத்திறம்
= பா+திறம்
=
பாடும் திறமை)
(மேலும் பல உண்மைகள் இங்கே சொல்லப்படும்)

வேந்தன் சரவணன் அவர்களது மற்ற படைப்புகள்

முந்தைய உண்மை காண

|