தொடர் கட்டுரை-2
பகுதி-3
உண்மை
என்ன?
-வேந்தன் சரவணன்.
3. கனி இருப்பக் காய் கவர்ந்தற்று...?

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
இனிய சொற்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதற்காக வள்ளுவர்
எழுதிய அழகான குறள் இது. ஆனால் இதன் பொருளில் பிழை இருப்பதாகத் தோன்றுகிறது.
திருவள்ளுவரை நம்மில் யாரும் பார்க்காவிட்டாலும் அவர் எவ்வளவு புலமை மிக்கவர்;
சான்றாண்மை நிறைந்தவர் என்று அறிவோம். அவர் பொருட்பிழையுடன் கூடிய ஒரு குறளை
இயற்றுவாரா? என்பதே கேள்வி. அப்படி என்ன பொருட்பிழை இருக்கிறது இந்த குறளில்?.
அதை முதலில் பார்ப்போம்.
இந்தக் குறளுக்கு கூறப்படும் பொருள் விளக்கமானது "இனிய சொற்கள் இருக்கும்போது
கொடிய சொற்களைக் கூறுவது பழம் இருக்க காயைத் தின்பதிற்கு ஒப்பாகும்." என்பதே
ஆகும்.
இதில் இருந்து என்ன தெரிகிறது? பழம் இருக்க காயை உண்பது தவறு என்று தானே?. ஆனால்
இது தவறான கருத்து ஆகும். ஏனென்றால் மாங்காயின் அருகே மாம்பழம் வைக்கப்பட்டு
இருந்தால் ஒருவர் மாங்கனியையும் ருசிக்கலாம். விரும்பினால் மாங்காயையும்
கடிக்கலாம். இதில் தவறு என்ன இருக்கிறது?. அதே போல கொய்யாக்காய், கொய்யாக்கனி.
இவற்றையும் ருசிக்கலாம். எனவே பழம் இருக்க காயை உண்பது ஒருபோதும் தவறாகாது.
இது தவறில்லை என்றால் வள்ளுவர் ஏன் அவ்வாறு கூற வேண்டும்?. ஆராய்ந்து பார்த்தால்
வள்ளுவர் இக்கருத்தை கூறவில்லை என்று புரியும். நாம் தான் எழுத்துப் பிழையால்
பொருளைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். காழ் என்ற சொல்லை தவறாக காய் என்று
எழுதியதின் விளைவு தான் இது. 'காழ்' என்ற தமிழ்ச் சொல்லுக்கு "கொட்டை" என்பது
பொருள் ஆகும். பழத்திற்குள் இருக்கும் கொட்டை உண்பதற்குக் கசப்பாக இருப்பதுடன்
கடினமாகவும் எளிதில் செரியாமலும் இருக்கும். பழத்தை விட்டுவிட்டு கொட்டையை
சாப்பிடுவது எவ்வளவு மடத்தனமான செயல் என்று நம் அனைவருக்கும் தெரியும். வள்ளுவர்
கூற வந்த கருத்தும் அதுவே ஆகும்.
"இனிய சொற்கள் இருக்க கொடிய சொற்களை ஒருவன் பயன்படுத்துவது, பழத்தை விட்டுவிட்டு
கொட்டையை சாப்பிடுவது போல மடத்தனமான செயலாகும்." - இதுவே வள்ளுவர் கூற வரும்
கருத்து ஆகும்.
பழம் உண்பதற்கு எளிமையாகவும் இனிப்பாகவும் எளிதில் செரிவதாகவும் இருக்கும்.
ஆனால் அதனுள் இருக்கும் கொட்டை உண்பதற்கு கடினமாகவும் கசப்பாகவும் எளிதில்
செரியாததாயும் இருக்கும். இனிய சொற்கள் பழத்தைப் போல பேசுவதற்கு எளிமையாகவும்
கேட்போருக்கு இனிமையைத் தருவதாய் கேட்போரின் உள்ளத்தால் விரைந்து ஏற்றுக்கொள்ளக்
கூடியதாகவும் இருக்கும். ஆனால் கொடிய சொற்கள் பேசுவதற்கு கடினமாய் இருப்பதுடன்
கேட்போருக்கு மனக் கசப்பைத் தருவதாய் ஏற்றுக்கொள்ள இயலாததாயும் இருக்கும்.
இப்படி பல பண்புகளால் ஒத்திருப்பதால் தான் வள்ளுவர் பழத்தையும் சொல்லையும்
ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.
எனவே வள்ளுவர் கூறிய சரியான குறள் இது தான்:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காழ்கவர்ந் தற்று.
(மேலும் பல உண்மைகள் இங்கே சொல்லப்படும்)

வேந்தன் சரவணன் அவர்களது மற்ற படைப்புகள்

முந்தைய உண்மை காண

|