........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                                      
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர்கட்டுரை-3- பகுதி.1

கம்பனிடம் கலந்த சக்தி!

-சக்தி சக்திதாசன், லண்டன்

1. இராமன் தனியாகத் தூங்கினானா?

விசுவாத்திர முனிவருடனும், தம்பி இலக்குவனுடனும் இராமர் மிதிலை நகர வீதியில் நடந்து கொண்டிருக்கிறார். கன்னிமாடத்திலே நின்றிருக்கும் கயல்விழி மாதுவின் விழிகளும், அயோத்தி இளவரசன் இராமனின் விழிகளும் ஒன்றையொன்று கவ்விக் கொள்கின்றன.

இரண்டு இளநெஞ்சங்கள் ஒன்றுடன் ஒன்று பூப்பந்து விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டன. முற்றும் துறந்த முனிவனும் இதை முக்காலும் உணர்ந்து கொள்ளத் தவறவில்லை.

மிதிலை மன்னன் ஜனகனின் விருந்துபசாரத்தில், அவர்களது விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்கள். இரவு வந்தது, காதலில் விழுந்த உள்ளங்களுக்கு இந்த இரவு ஒரு கொடுமையான பொழுதல்லவா?

முனிவரும், தம்பியும் படுத்துறங்க தன்மையான் இடத்தைத் தேடி பாய் விரித்துப் படுக்கிறான் ராகவன். நாமெல்லோரும் அவன் அப்போது தனிமையில் வாடுகிறான் என்று எண்ணுகிறோம்.

இங்கேதான் கம்பன் தனது கற்பனைச் சிறகை அழகாய் விரிக்கிறான்.

அவன் தனியனாக இல்லை என்பதை எப்படி விளிக்கிறான் பாருங்கள் !

முனியும் தம்பியும் போய்
தமக்கு
இனிய பள்ளிகள் எய்திய பின், இருட்
கனியும் போல்பவன், கங்குலும்,
திங்களும்
தனியும், தானும், அத் தையலும்,
ஆயினான்

-என்ன சொல்கிறான் கம்பன் ?

முனிவரும், தம்பியும் தமக்கென இனிமையான தூக்கத்திற்கு உகந்த இடத்தைத் தேடியதும், கருமை நிறம் கொண்ட இராமன் தனியனாகத் தூங்கவில்லையாம்.

அவனுடன் ஜந்து இருந்ததாம். எவை அந்த ஜந்துகளாம் ?

கங்குல் - இருள்
திங்கள்
- வெண்ணிலா
தனிமை
- தனிமை உணர்வு
தான்
- தன்னைப்பற்றிய உணர்வு (இந்த உணர்வு இல்லாதவனால் காதலைப் பரிபூரணமாக எப்படி உணர்ந்து கொள்ள முடியும்?)
அத்தையல் -
அவனது உள்ளத்தைக் கவர்ந்த அந்தக் கனிகையும் அங்கே மனத்தளவில் அவனுடன் இருந்தாளாம்.

தனியனாக தன்னுடைய காதல் நினைவுகளில் அழுந்தியவாறு படுத்திருக்கும் அயோத்தி இளவரசனாக எமது கண்ணுக்குப் புலப்படும் இராமனுடன் ஐந்து இருக்கின்றன என்னும் கற்பனை வளத்தைக் கொண்டு கவி சொன்ன கவிச்சக்கர்வர்த்தியின் கற்பனைச் சக்தியை என்னவென்று சொல்வது?

(கம்பனின் சக்தி இங்கு தொடரும்)

பகுதி-2

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு