தொடர்கட்டுரை-3-
பகுதி.2
கம்பனிடம் கலந்த
சக்தி!

-சக்தி சக்திதாசன்,
லண்டன்
2.
அணுவைப் பிளக்க முதல் அறிவுரை?

உலகின் அனைத்து பொருட்களின் கடைசித் துகள் அணு
என்கிறது விஞ்ஞானம். அந்த அணுவைப் பிளக்க முடியாது என்னும் கருத்துப் பல
காலங்களாய் நிலைப்பட்டு இருந்தது.
ஆனால் இன்றைய அதிவேக விஞ்ஞான உலகத்தில் அணுவைப் பிளந்து அதன் சக்தியைப்
பயன்படுத்தும் உத்தியைக் கண்டு விட்டார்கள் மனிதர்கள்.
ஆனால் பல நூற்றாண்டு காலங்களுக்கு முன்னால் கவிச்சக்கரவர்த்தி கம்பனோ அணுவைப்
பிளப்பது ஆகக்கூடியது ஒன்றே என்னும் கருத்தை வலியுறுத்தி தனது கவியின் மூலம்
கருத்தை இயம்பியுள்ளான்.
ஆமாம்.
"இரணிய வதை படலம்" என்னும் கம்பனின் ஆக்கத்தைப் பலரும் அறிந்திருப்பீர்கள்.
இரணியன் என்றொரு அரசன் இருந்ததாகச்
சொல்கிறது இதிகாச வரலாறு.
இதில் அவனுக்குப் பிரகலாதன் என்னும்
மகன் இருந்தான்.
பிரகலாதனோ அரியின் மீது அளவில்லாப் பக்தி கொண்டிருந்தான். அல்லும் பகலும்
அரியின் நினைவினிலே, அரியின் பக்தியிலேயே கழிக்கலானான்.
அவனது தந்தை இரணியனுக்கோ இது ஆத்திரமூட்டியது. தனதி மைந்தனின் செய்கையை
வெறுத்தான். அவனை நிந்தித்தான். ஆத்திரம் தாள மாட்டாமல் மகனைப் பார்த்து,
" உன் கடவுள் அரி எங்கேயிருக்கிறான்?" என்று உறுமுகிறான்.
அதற்கு அவன் பிரகலாதனோ,
" என் கணால் நோக்கிக் காண்டற்கு எங்கனும் உளன்காண்! எந்தை"
-என் கண்ணால்
காணும் காட்சிகள் அனைத்திலும் என் இறைவன் அரி நீக்கமற
நிறைந்திருக்கிறான் தந்தையே!" என்கிறான்.
அதற்கு இரணியனோ விடாமல்,
"ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன் என்றாய்;
தூணில் நின்றுளன் எனின் கள்வன், நிரப்புதி நிலைமை!"
எங்கும், எதிலும் உன் அரி நிறைந்திருக்கிறான் என்கிறாயே அப்படியானால் அவன்
இங்கிருக்கும் இந்தத் தூணில் இருக்கிறானா என்று காட்டு பார்க்கலாம் என்கிறான்.
அதற்கு அவன் மைந்தன் பிரகலாதன் சொல்லும் விடையாகக் கம்பன் தந்த கவியிலே தான்
அவனது விஞ்ஞான அறிவு துலங்குகிறது.
"சாணிலும் உளன் ; ஓர் தன்மை
அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன் ; மாமேருக் குன்றினும்
உளன் ; இந் நின்ற
தூணினும் உளன் ; நீ சொன்ன
சொல்லினும் உளன்"
அங்குலத்தின் ஒரு பாகமாகிய சாண் என்னும் மிகவும் சிறிய பகுதியிலும் உள்ளான்.
ஒரு ரூபாயை நூறு பகுதிகளாகப் பிரித்தால் ஒரு சதம் வருகிறது. அதே போல அனைத்துப்
பொருட்களிலும் கடைசி அந்தமாகிய அணுவினை நூறு கூறுகளாகப் பிரித்தால்
வருவது
கோண் என்னும் சிறு துளியாம் அதில் கூட அரி இருப்பான் என்கிறான் பிரகலாதன்.
இது கம்பனின் நுண்ணறிவுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
அணு என்னும் பகுதியை உடைத்தால் கூட அதிலும் இறைவன் இருக்கிறான் என்று அன்றே
எழுதத் தூண்டிய கம்பனின்
கற்பனை சக்தியை என்னெவென்று சொல்வது?
(கம்பனின் சக்தி இங்கு தொடரும்)
பகுதி-1
பகுதி-3 |