தொடர்கட்டுரை-3-
பகுதி.3
கம்பனிடம் கலந்த
சக்தி!

-சக்தி சக்திதாசன்,
லண்டன்
3.
நாடு எப்படி இருக்க வேண்டும்?

மகாகவி பாரதியார் ரசித்த முதன்மையான கவிஞர்களில்
முன்னிற்பவர் கம்பர். கம்பரின் கவித்திறனை ஆழமாய் ரசித்தார் பாரதியார்.
மகாகவியின் " நான் " என்னும் கவிதையை எடுத்துக் கொண்டால், அதிலே அவர் தன்னுடைய
மனதின் விரிவளவை, பரந்த தன்மையைக் குறிப்பிடுவதற்கு,
விண்ணில் திரிகின்ற மீனெல்லாம் நான்
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
என்று அத்தனை பிரமாண்டமான விடயங்களைக் கூறிவிட்டு அடுத்ததாக,
"கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்"
என்கிறார்.
இத்தனை அண்டப் பிரம்மாண்டமான விடயங்களோடு
கம்பனின் கவிதைகளை ஒப்பிட்டுக் கூறுமளவிற்கு கம்பனின் கவிதைகளை மாகாகவி
பாரதியார் ரசித்திருந்திருக்கிறார். மகாகவி பாரதியாரின் தமிழ்ச் சாதி என்னும்
கவிதையில் ஒரு பகுதி,
"சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்,
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்,
'எல்லையன் றின்மை' எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிக்கோளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச்
சாதியை "அமரத் தன்மை வாய்ந்தது" என்று
உறுதிகொண் டிருந்தேன். "
இங்கே அவர்,
"எல்லையன் றின்மை எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிக்கோளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும்"
என்று கம்பனின் கவிகளின் எல்லையற்ற தன்மையை
எண்ணி வியக்கிறார்.
கம்பனின் எல்லையற்ற தன்மையைக் காட்டும் திறமை. அவர் தனது கவிதைகளிலே கையாண்ட
வழிமுறைகள் பல. தான் மதிப்புக் கொண்டு, மிகவும் பெருமையாகச் சொல்லப்போகும்
விடயத்தை மிகவும் எதிர்மறையாக ஆரம்பித்து அதற்கு ஒரு விளக்கத்தைக் கொடுக்கும்
ஆற்றல் கம்பனுக்கு மிகையாக இருந்தது.
கம்பனுடைய கபராமாயணத்தின் காவிய நாயகனாம் இராமனின் சொந்த நாடானா கோசல நாட்டைப்
பற்றிக் கூறும்போது,
"வரம்பெலாம் முத்தம்"
- வயல் வரம்புகளிலெல்லாம் முத்துக்களாய்ச்
சிதறிக் கிடக்கின்றனவாம்
"தத்து மடையெலாம் பணிலம்"
-தாவிப் பாய்ந்தோடும் தனை படைத்த
மதகுகளிலெல்லாம் சங்குகளாம்.
"மாநீர் குரம்பெலாம் செம்பொன்"
-வயலுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால்களில்
செய்யப்பட்டுள்ள செய்கரைகளில் பொன் கட்டிகள் இருக்கின்றனவாம்
இப்படியாக இராமனின் கோசல நாட்டை வர்ணிக்கத் தொடங்கி... கோசல நாட்டில் தானம்
செய்வோர்கள் இல்லையாம்... அதுமட்டுமா கோசல நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வீரமும்
இல்லையாம். அந்நாட்டில் உண்மை பேசுவோர்களும் இல்லையாம், அறிவுடைமை உடையோரும்
இல்லையாம்.
திகைத்துப் போகும் நம்மைச் சிந்திக்க வைத்து விடை தருகிறார்.
"வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை ஓர் பொய் உரை இலாமையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்"
இராமனின் நாட்டுப் பெருமைகளை விளக்கும் தன்மை.
தானம் கொடுப்போர் இல்லை ஏனெனில் அங்கே வறுமையே இல்லையாம். வீரம் மிகுந்த
பாராக்கிரமரங்கள் செய்ய வேண்டிய தேவை இல்லை ஏனெனில் அவர் மீது போர் தொடுக்கும்
அளவிற்கு வீரம் கொண்ட எதிரிகள் இல்லையாம். உண்மை பேசுவோர் இல்லை ஏனெனில் அங்கே
பொய் உரைப்போர் யாருமேயில்லையாம். மேலும் கோசல நாட்டு மக்கள் எல்லோரும் கேள்வி
கேட்டு அனைத்தையும் அறிந்து விடுவார்களாம். அதனால் அங்கே அறிவுடமை என்னும் சொல்
உபயோகமற்றுப் போய் விடுகிறதாம்.
எத்தனை அழகான விளக்கத்துடன் இத்தனை கருத்துக்களை எடுத்தியம்பும் கம்பனில்
கவிபுனையும் சக்தியை வியக்காமல் இருக்க முடியுமா?
ஒரு உண்மையான, நிறைவான நாடு எப்படி இருக்க
வேண்டும் என்பதனை மனித தர்மத்தின் அடிப்படையில் வகுத்து,
தண்டலை மயில்கள் ஆட
தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏங்க
குவளைகண் விழித்து நோக்க
தெண்திரை எழினி காட்ட
தேம்பிழி மகரயாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம்வீற் றிருக்கும் மாதோ
மயில்கள் சோலையிலே ஆடிக்கொண்டிருக்க, விளக்குகளைத் தாமரைகள் தாங்குகின்ற போது,
மேகங்கள் மத்தளம் போல முழங்க மெதுவாய்த் துளசி கண் திறந்து பார்க்கையில்,
தெளிந்த அலைகள் நாடகத்திரை போட மதுரகீதம் பொழியும் மகரயாழ் போல வண்டுகள்
ரீங்காரம் இட, மருத நாச்சியார் கொலுவீற்றிருப்பதைப் போல அந்த நீர் கொழிக்கும்
வயல் அவ்வூரில் செழித்து இருக்கிறாம்.
இந்நாட்டின் மக்கள் எப்படி இருப்பார்கள்? என்று
நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது
பொருந்திய மகளி ரோடு
வதுவையில் பொருந்து வாரும்
பருந்தொடு நிழல்சென்(று) அன்ன
இயல் இசைப் பயன் துய்ப் பாரும்
மருந்தினும் இனிய கேள்வி
செவிஉற மாந்து வாரும்
வருந்தின் முகம் கண் (டு) அன்ன
விழாவணி விரும்பு வாரும்
தமது வயதை ஒத்திருக்கும் மகளிரோடு திருமணத்தில் இணைந்து கொள்வோர் ஒரு பக்கத்தில்
ஆரவாரத்தில் திளைக்கிறார்களாம். பருந்து ஒன்று மதிய வெய்யிலில் பறக்கின்றது போல
பாட்டோடு இசைந்து இசையும் போகின்றதாம். அப்படியான கச்சேரியை இசைக்கும் அரிய
கலைஞர்கள் ஒருபுறத்தில் இசைக்கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். அமுதம்
அருந்தித் திளைப்பவர்கள் போல இனிமையான் சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டு ஒருபுற
மக்கள் ஆனந்தமடைகிறார்களாம்.
கம்பன் கோசல நாட்டில் ஆனந்தமான வாழ்க்கையுடைய மக்கள் வாழுகின்றார்கள் என்பதனை
எளிமையாகவும் அருமையாகவும் எடுத்துச் சொல்லும் திறனில் அதைப் படிப்பவர்கள்
அசந்து போகிறார்கள். கம்பனின் சக்தி கவிதையில் விளையாடி நம்மை மேலும் மேலும்
படிக்கத் தூண்டுகிறது.
(கம்பனின் சக்தி இங்கு தொடரும்)
பகுதி-2
பகுதி-4 |