........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                                      
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர்கட்டுரை-3- பகுதி.4

கம்பனிடம் கலந்த சக்தி!

-சக்தி சக்திதாசன், லண்டன்

4. தாமரை மலர்கள் அகழிக்குப் போனது ஏன்?

கம்பனின் இலக்கியம் சுந்தரமானது, சுகந்தமானது, சுவையானது. கரும்பில் அடிக்கரும்பு சுவை கூடியது என்பார்கள். கம்பராமாயணம் என்னும் அவனது இலக்கியத்தில் அவன் தனக்குத்தானே வகுத்துக் கொண்ட கற்பனை எல்லைகளை விரித்துத் தன் திறமைக்கு தானே சவால் விடுகின்றான். மனதிலே பூத்து நின்ற அற்புதமான நகரின் வனப்புகளை, அந்நகரிலே வாழும் மக்களின் குணாதிசயங்களை கோபுரமாக்குகின்றான்.

எத்தகைய ஒரு அற்புதமான, ஆனந்தமான, அமைதியான நாட்டிலே வாழவேண்டும் என அனைவரும் எண்ணுகிறோமோ, அத்தகைய ஒரு கற்பனை நாட்டைத் தனது கதாநாயகனின் நாடாக்கி படிப்பவர்களையும் அவனோடு சேர்த்து மகிழ்விக்கிறான்.

நகரப் படலம்

அந்தமா மதில்புறத்து, அகத்து எழுந்து அலர்ந்த, நீள்
கந்தநாறு பங்கயத்த கான(ம்)மான மாதரார்
முந்துவாள் முகங்களுக்கு உடைந்துபோன மொய்ம்பு எலாம்
வந்துபோர் மலைக்க, மாமதில் வளைந்தது ஒக்குமே. 16


கம்பனுடைய கதாநாயகன் ராமனுடைய நாட்டிலே அமைந்துள்ள அழகிய கோட்டையைச் சுற்றி அகழியாம். அந்த அகழியில் குவிந்து பூத்திருக்கும் அழகிய தாமரைகள் எப்படி அங்கு வந்தது?

 இராமனுடைய நாட்டிலே உள்ள பெண்கள் அத்தனை பேரும் அழகில் சிறந்தவர்களாம். அவர்களின் அழகைக் கண்ட தாமரைகள் இந்த நாட்டின் பெண்களின் அழகிற்கு எம்மால் ஈடு கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டு ஓடிச் சென்று, அந்நகருக்கு வெளியேயுள்ள கோட்டையைச் சுற்றியுள்ள அகழிக்குள் கூட்டமாய் மலர்ந்து விட்டதாம்.

அந்த அகழிகள் எங்கே அமைந்திருக்கின்றன? கோட்டையைச் சுற்றி. அந்தக் கோட்டை நகரின் எல்லைப்புறத்தில் அமைந்திருக்கிறது. கம்பனுடைய கதாநாயகனின் ஊரிலுள்ள பெண்களின் அழகு எப்படிப்பட்டது என்று. அந்த பெண்களின் அழகின் வீச்சத்தோடு தமது அழகை ஒப்பிட முடியாத தாமரை மலர்கள் ஊரின் எல்லைக்கப்பால் ஓடி விட்டதாம். இங்கு கம்பனின் கவிச்சக்தியை விட அவனின் கற்பனைச் சக்தி எப்படி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.

உபயோகிக்கப்பட்ட சில சொற்களின் பொருள்

கந்தநாறு
- நறுமணம் கமழ்கின்ற,

வாள் - ஒளி,

மொய்ம்பு - வலிமை

மலைக்க - போரிட

(கம்பனின் சக்தி இங்கு தொடரும்)

பகுதி-3                                                                                                                                                                         பகுதி-5

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு