........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                                      
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர்கட்டுரை-3- பகுதி.5

கம்பனிடம் கலந்த சக்தி!

-சக்தி சக்திதாசன், லண்டன்

5. அழகான பெண்கள் பரிமாறும் இனிய விருந்து

நெஞ்சத்திலே தோன்றிய நினைவலைகளை ராகத்தோடு மீட்டி நம்மை மயக்கி இசையாக்கித் தரும் இசைக்கலைஞனைப் போல, நாகத்தை மயக்கும் மகுடி இசை போல, இலக்கியம் என்னும் தந்திரோபாயத்தால் நம்மை மயக்கி ஆட்கொள்ளும் கவிப்பெருந்தகையின் சக்தியை எப்படிச் சொல்வது?

ஒவ்வொரு காலகட்டத்திலும் கவிஞர்கள் தம்முடைய காலத்தோடு சேர்ந்த நிகழ்வுகளைக் கவிதையில் பதிவு செய்வதைக் காண்கிறோம். ஆனால் கம்பனோ ஒரு உண்மையாக மகிழ்ச்சியில் திளைக்கும் சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று தனது கற்பனையில் சிருஷ்டித்து அந்தக் காட்சிக்கு தனது கவிதை மூலம் உயிரூட்டுகிறான்.

நகரத்தின் பெருமைகளை விளம்பிய கவித்தலைவன் அந்நகரத்து பெண்களின் பெருமையை விளக்குகிறான். எப்படி?

ஈகையும் விருந்தும்

பெருந்தடங் கண் பிறைநுதலார்க்கு எலாம்,
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்,
விருந்தும், அன்றி, விளைவன யாவையே?
-36

கம்பன் பெண்களின் கல்வியறிவை அந்தக் காலத்தில் கூட எவ்வகையில் உயர்த்திப் பார்க்கிறான்? அவனது கற்பனை நகரத்தில் வாழும் பெண்கள் எத்தகைய முகவமைப்புக் கொண்டவர்களாம் ?

பெரிய, அகன்ற கருவிழிகளையும், பிறை போன்று அழகிய நெற்றியையும் உடைய பெண்களாம், அந்நகரத்தே வாழும் பெண்கள்.

அது மட்டுமில்லையே! வீட்டுக்கு பசி கொடுத்த வருத்தத்துடன் நுழைவோரைக் கடுஞ்சினத்துடன் அவ்வீட்டுப் பெண்கள் எதிர்கொண்டார்களேயானால், அவ்வீட்டில் விருந்துபசாரம் எவ்வகையில் நடைபெறும்?

ஆனால் அவன் கண்ட நகரப் பெண்கள் அப்படி இல்லையாம்! அவர்கள் தகுந்த கல்வியறிவு கொண்டவர்களாம். அக்கல்வியறிவுடன் பொருட்செல்வமும் கொண்டவர்களாம். அத்தகைய அறிவுள்ள பெண்கள் தமது இல்லத்துக்கு வரும் விருந்தினரின் களைப்பைப் போக்குவதற்காக விருந்து படைத்து உபசாரம் செய்வார்களாம்.

இத்தகைய பெண்களைக் கொண்ட நகரத்தே இவை தவிர வேறு என்ன நிகழக்கூடும் என்று அறிவுப்பூர்வமாக நம்மைப் பார்த்து வினவுகிறான் கவிச்சக்கரவர்த்தி.

சில சொற் பொருள் விளக்கம்

பொருந்து செல்வம்: நிலைபெற்ற எப்போதும் நீங்காத செல்வம்
பூத்தலால் :
உண்டாவதினால்
வைகல்:
அன்றாடம்
விளைவன :
நிகழ்வன

மேலும்;

அன்ன சாலைகள்

பிறைமுகத் தலை பெட்பின் இரும்பு போழ்,
குறைகறித் திரள் குப்பை, பருப்பொடு,
நிறைவெண் முத்தின் நிறத்து அரிசிக் குவை,
உறைவ கோட்டமில் ஊட்டிடம் தோறுமே.
-37


இத்தகைய பெண்கள் நிறைந்த நகரத்தே வருவோரின் பசி தணிக்கும் அன்னசாலைகள் நிறைந்து காணப்படுகின்றனவாம். அவை என்ன சாதாரண அன்னசாலைகளா? இல்லையே அமுதம் போன்ற சுவை நிறைந்த உணவை அள்ளியிறைக்கும் அற்புதமான அன்னசாலைகளாம் அவை.

அந்த அற்புத அன்னசாலைகளில் எந்தவிதமான உணவு பரிமாறப்படுகிறதாம்?

பிறையைப் போல வளைந்திருக்கும், கடினமான இரும்பினால் உருவாக்கப்பட்ட அரிவாள் கொண்டு அறுக்கப்பட்ட சுவையான காய்கறிகளை கொண்டு ஆக்கப்பட்ட அறுசுவை விருந்தாம். பருப்போடு சேர்த்து அவை குப்பை கொட்டப்பட்டது போல குவித்துப் பரிமாறப்படுகிறதாம்.

முத்துப் போல வெண்மையாக இருக்கும் சோற்றின் மேல் இத்தகைய காய்கறிகளும், பருப்பு வகைகளும் குப்பை போல கொட்டிக் குவிக்கப்பட்டுள்ளனவாம்.

அற்புதமான விளக்கம் அருமையான சொற்பதங்கள் யாக்கப்பட்டிருக்கும் கவிதை இது.

சில சொற் பொருள் விளக்கம்

பிறைமுகத் தலை இரும்பு:  பிறை போன்ற முகம் கொண்ட இரும்பிலான அரிவாள்
கறி :
துண்டாக வெட்டப்பட்டது
குப்பை:
குவியல்
கோட்டம்:
வஞ்சனை
ஊட்டிடம்:
அன்னசாலை

(கம்பனின் சக்தி இங்கு தொடரும்)

பகுதி-4                                                                                                                                                                         பகுதி-6

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு