........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                                      
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர்கட்டுரை-3- பகுதி.6

கம்பனிடம் கலந்த சக்தி!

-சக்தி சக்திதாசன், லண்டன்

6. காந்தி காண விரும்பிய ராமராஜ்யம்?

கம்பராமாயணத்தில் கம்பன் மிகவும் முக்கியமாக கைக்கொண்டது தனது கதாநாயகன் இராமனின் நாடான கோசலை நாட்டின் வளங்களையும், மக்களையும் பற்றிய வர்ணமையும், விபரிப்புமே ஆகும்.

தன்னுடைய கதைக்கு ஏற்ற காட்சிகளை, கருத்துக்களின் ஆழத்தை அழகுறச் சொல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தான் கம்பன்.

கம்பனின் ஆக்கத்தை, அவனது படைப்புக்களின் வீரியத்தைப் படித்து வியக்காமல் இருக்க முடியாது. கம்பனின் விளக்கங்கள், அதை விளக்குவதற்கு அவன் கையாளும் வழி முறைகள் அனைத்துமே அற்புதமானவை. கம்பனின் கற்பனையில் விரிந்திருந்தது இராம ராஜ்ஜியம். கம்பன் இராமனுடைய நாட்டைப் பற்றி என்ன கூறுகிறார்?

அனைத்தையும் கற்று முடித்து விட்டோம் என்று கூறும் அறிஞர்கள் அங்கு இல்லையாம். ஏனெனில் இருப்போர்கள் அனைவரும் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கிறார்களாம்.

கல்விச் செல்வம் தான் இந்நாட்டில் அனைவருக்கும் பொதுவாக இருக்கிறது என்று எண்ணி விடாதீர்கள் ஏனெனில் பொருட்செல்வம் கூட அனைவர்க்கும் பொதுவாகத்தான் இருக்கிறதாம். பொதுவுடமைக்கு அன்றே கம்பன் வித்திட்டு விட்டான் என்பதை அறிய முடிகிறது.

இத்தகைய அற்புத நாட்டிலே கற்றவன், கல்லாதவன், இருப்பவன், இல்லாதவன் என்னும் பாகுபாடே அங்கு கிடையாதாம்.

இதற்குரிய பாடலைப் பாருங்கள்...

கல்லாது நிற்பர் நேர் இன்மையின் , கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவைவல்லரல் லாரும் இல்லர்
எல்லாரும் எல்லப்பெரும் செல்வமும் எய்த லாலே
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ


இங்கே கம்பன் இல்லை.... இல்லை ... இல்லை என்று எதிர்மறையான சொற்பிரவாகங்களைப் உபயோகித்து அந்நாட்டில் இருக்கும் வளத்தை விளக்கும் அவனது தனிப்பட்ட ஆற்றலும் சக்தியும் அனைவரையும் வியக்க வைக்கிறது.

      a

நீரே வந்து காலில் விழுந்தால்....

கம்பரின் சமகாலப் புலவரான ஒட்டக்கூத்தருக்கும், கம்பருக்கும் இடையே புலவர்களுக்கே உரித்தான பொறாமை சிறிது இருந்ததுவாம். ஒரு முறை கம்பரும், ஒட்டக்கூத்தரும் ஒரே சுனையில் கை கால், முகம் அலம்பிக் கொண்டிருந்தார்களாம்.

ஒட்டக்கூத்தர் இருந்த பகுதி மேட்டுப்பகுதியாக இருந்த படியால் நீர் அங்கிருந்து கம்பர் இருந்த பகுதிக்கு ஓடிக் கொண்டிருந்ததாம்.

அப்போது ஒட்டக்கூத்தர் கம்பரைப் பார்த்து, "ஓய் கம்பரே ! நான் கழுவிய கழுநீர் தான் உம்மை வந்தடையுது பார்த்தீரா?" என்றாராம்.

அதற்கு கம்பரோ, "அட நீரே வந்து என் காலில் விழுந்தால் நான் அதற்கு என்ன செய்வது?" என்றாராம்.

      a

ராம நாமத்தை அடிக்கடிச் சொல்லிக் கொண்டேயிருந்த காந்தியடிகள் இப்படிப்பட்ட ஒரு நாடைத்தான்  ராமராஜ்யமாக, சர்வோதய நாடாக உருவாக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாரோ என்கிற ஜயப்பாடு நம் நெஞ்சில் துளிர்க்கிறது. இவையெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியம்தானா? என்று ஒரு கேள்வியும் எழுகிறது.

இந்தக் கேள்விக்கு முடியும் என்கிற விடையையும் தருகிறார் கவிச்சக்கரவர்த்தி. இங்கேதான் அவரது தீர்க்கதரிசனமும் ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் அடிப்படை எதுவென்று அவர் கொண்டிருந்த அபிப்பிராயமும் நமக்குத் தெரிகிறது, தெளிவாகிறது.

கம்பன் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுகிறார். கல்வியில் முன்னேற்றம் காணுங்கள் அது ஒன்றுதான் உங்கள் நாட்டை மேலே கூறியது போல இன்பம் கொழிக்கும் நாடாக மாற்றும் என்கிறார் கம்பர்.

மனம் என்னும் தோட்டத்திலே கல்வி என்னும் விதையை நாட்டுங்கள். அது தன்பாட்டுக்கு நாலாபுறமும் விரிந்து கேள்வி என்னும் கிளைகளை விரிக்கும். அற்புதமான அந்தக் கிளைகளிலே நல்ல முயற்சி என்னும் பச்சிளந்தளிர்கள் துளிர்க்கும். அப்போது அன்பு அங்கே மொட்டுக்களாக அரும்பும். அம்மொட்டுக்கள் நல்ல அறம் மலர்ந்து மணம் வீசும். அந்த அற மலரே உங்களுக்கு போகக் கனியைக் கொடுக்கும்.

கல்விதான் அனைத்துக்கும் அடிப்படை என்பதை அழகுறச் சொல்கிறான் கம்பன். எப்படி?

ஏகம் முதற்கல்வி முளைத்(து) எழுந்து எண்இல் கேள்வி
ஆக முதல்திண் பணைபோக்கி அருந் தவத்தின்
சங்கம் தழைத்து அன்(பு) அரும்புத் தருமம் மலர்ந்து
போகம் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே !

கம்பன் கவிதையில் காட்டும் கல்வியின் மகத்துவம் இன்றைக்கும் தேவையாயிருக்கிறது.

(கம்பனின் சக்தி இங்கு தொடரும்)

பகுதி-5                                                                                                                                                                    

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு