கவிதை:162
இளைய தலைமுறையே
! புரட்சி செய்யடா!

முழிச்சிருந்தும் தூங்குகின்ற
தூக்கமென்ன தூக்கமோ? -உன்னை
முழுசாகத் தின்பவர் முன்
முடங்கிக் கிடக்கலாகுமோ?
ஒழச்சு ஒழச்சு ஒடம்பு நமக்கு
ஓடாய்ப் போனதடா - வயிறு
ஒட்டியும் போனதடா - வாழ்வு
நெனச்சு நெனச்சுப் பார்க்கும் போது
நெஞ்சு கொதிக்குதடா - புலன்கள்
அஞ்சும் கொதிக்குதடா!
ஒழைக்கும் போது ஒடையும் உருவம்
ஓஞ்சு போகுதடா - தொழிலின்
உறவும் போகுதடா!
முதலாளிக்கு இந்த மொதலு போவது
மறந்து போகுதடா - அதனால்
மன்மும் வேகுதடா
ஒனக்கு வந்தது எனக்கு இல்லேனு
ஒதுங்கி நிக்காதடா - நாளை
ஒனக்கும் வந்திடும்டா - இந்தக்
கணக்குப் பாக்க மறப்பதால்தான்
கொடும தொத்துதடா - நம்ம
குலமும் கத்துதடா
சொகத்துடனே எல்லாரும் வாழ
சொதந்திரம் அடஞ்சோம் - அந்தச்
சுவையையும் படிச்சோம் - பொதுச்
சொகத்த மனுசன் பிரிச்சு வச்ச
சோதனை கண்டோம் - அதிலே
வேதனை கண்டோம்!
ஒண்ணு பத்தாம ஊரையே வளச்சு
ஒசந்த வீடுகளாய் - கட்டியதும்
வசந்த வீடுகளாய் - அந்த
விண்ணைத் தொடுகிற வீடுகள் கட்டி நீ
வீதியில் நிற்பதோ - இந்த
மேதினி ஏதுக்கடா?
சத்தியமா நானும் சொல்லுறேன் நாம
சோம்பலின் கூட்டமடா - இரத்தம்
சோரமும் போச்சுதடா - சொந்தப்
புத்தியெல்லாமே அடிமை! அடிமை!!
சொன்னது கோபமடா - ரோசம்
உண்டுனா எந்திரிடா!
நீதான் இங்கே செத்துச் செத்துமே
பொழைக்கக் கத்துக்கிட்ட - ஒனது
பொழப்பும் வித்துபுட்ட -ஆனால்
மேதினியில் இளம்தலிமுறைக்கு
மேன்மை செய்யாட்டா - ஒன்ன
மென்னுடும் வெளையாட்டா!
இடி எரிமலை மின்னல் நெருப்பு
எல்லாம் நீதானடா -பெரிய
இலக்கும் நீதானடா - நீ
விடியவில்லை எனில் சூரியனும்
விடிவதெதற்கடா - நீ பொருள்
விளைக்கும் வர்க்கமடா
உனது சக்தி உணரும் வலிமை
உனக்கே இல்லையடா! - நெஞ்சில்
உறமும் இல்லையடா! - விடிவிலா
நமது தெசம் பொதுவுடமையில்
நிற்கும் நாளெதுடா? - இன்றே
நிகழ்த்த தோள் கொடடா!
விழியில் இருந்து விழுந்த கண்ணீர்
வீணாய்ப் போனதடா! - கண்களும்
வீங்கிப் போனதடா! - அழுது
இளகும் கோழை எண்ணத்தை விடடா
எழுச்சி கொள்ளடா! - கொடுமையை
எதிர்த்து நில்லடா!
எருமப் பொறும பொறுத்து நின்னோம்
என்ன ஆச்சுடா? - பொறுமைக்கும்
எல்லை உண்டுடா! - மண்ணில்
உரிமை கேளுடா உறக்கம் என்னடா
உறுதி கொள்ளடா! - இதிலே
ஓய்வு என்னடா?
நாட்டில் நடக்கும் நாச சக்திகளை
நசுக்கிப் போட்டிட - முரசு
நாளும் கொட்டடா! - கைகளைப்
பூட்டிவிட்டு உனை ஆட்டுவிக்கின்ற
போக்கை வெட்டிட - பூமியில்
புரட்சி செய்யடா!
-கவிஞர்.வி.எஸ்.வெற்றிவேல்.
|