........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 238

நாசமாகப் போவுது...!

 

துள்ளிப் பாயும் வாலிபன்-உழைப்பால்
தோலுறிந்த கிழவன்
பல்லிலித்து மனமகிழ-இங்கு
பவனிவந்த தேர்தல் விழா.

ஐந்தாண்டிற்கு ஒருமுறை-நாட்டில்
ஆர்ப்பரிக்கும் திருவிழா
கொள்ளையடிக்க உரிமைப்பெற-மக்களைக்
கூட்டிப் பார்க்கும் பெருவிழா.

கைநிறையப் பொட்டலம்-கையில்
காந்திபடக் கலர்க் காகிதம்
காது காது வைத்தார்போல்-மக்களுக்கு
கப்பம் கட்டிய பெருமிதம்.

ஊர்த் திருவிழா-ஆண்டுபூரா
உழைத்தக் காசு மிஞ்சல
உறவோடு உறவாடி-வாழ்வில்
உளம்மகிழ நடைபோட்டேன்.

தேர்தல் திருவிழா-இன்று
தேடிவந்த வண்ணக்கூட்டம்
தெருவில் நின்று வணங்கி நிற்க-ஒரு நிமிடம்
திகைத்து நின்றேன் மெய் மறந்தேன்.

கேளாத மொழிக் கேட்டேன்-அவர்கள்
கீழ்ப்படிய, கூச்சப்பட்டேன்
கேட்டபடி ஓட்டு என்றேன்-அவர்கள்
கெஞ்சிக் குனிந்து போகப் பார்த்தேன்.

பக்கத்தில் நின்ற தாத்தா-ஏளனமா
பார்த்து முகம் சுளிக்க
பளிச்சென்று எடுத்துரைத்தார்-நான்
பணிவுடனே அவரைக் கேட்க.

கொலையாளி கொள்ளையாளி-மற்றவர்கள்
குடிகெடுக்கும் கோமாளி
கொஞ்சி குனிந்து நடிக்க-மனம்
கொந்தளிக்கப் பார்த்தேன் என்றார்.

கோடி கோடி சேர்த்தக் கூட்டம்-மனதில்
கொலைவெறி கொண்ட கூட்டம்
சாராயப் பணம் பண்ணி-தன்படத்தை
சந்தி சந்தி நிறுத்தும் கூட்டம்.

என் நலமே உன் நலமென-பிறரை
எப்போதும் எண்ணச் செய்யும்
எந்நாளும் தானே ஆட்சிசெய்ய-வலிந்து
ஏற்ற சூழ்ச்சிச் செய்யும் கூட்டம்.

கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிக்க-அமைந்த
கோமாளிகள் கூட்டணி
தனிப்பட்ட கொள்கைதனை முன்னிறுத்தி-தினம்
தனக்கு கோடி சேர்க்கப் பேரணி.

எதிலும் பங்கு கேட்பார்-நாட்டில்
ஏற்றம் என்று தினம் பாடிடுவார்
எதிர்ப்பவரை இடுப்பொடிக்க-ஏதுவா
ஏற்றப் பட்டம் தீவிரவாதி என்பார்.

ஐந்தாண்டில் கறந்தப் பணம்-இன்று
அடைமழையாய்க் கொட்டுது
அடுத்ததற்குப் பணம் பண்ண-இனி
அனைத்து ஊழலும் பண்ணப் போவுது.

நல்லோர்கள் உளம்குமுற-அவர்கள்
நாவோ சாபம் கொட்டுது
நன்றிக் கெட்ட கூட்டத்தால்-தமிழகம்
நாசமாகப் போவுது...!

-பொன்பரப்பியான்.

 

 

 

 

 

m

 

பொன்பரப்பியான் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.