கவிதை: 255
அடையாளம்
அழிந்த....

அது என்ன...அழுகுரலா???
நாங்கள் யார்?..?
யார் நாங்கள்..?
எம் தொடர்பும்
தொடக்கமும் எங்கே?
ஆம்...
வர்ணம் இழந்த வரைபடமாய்
வாழத் தொடங்கிய வாழ்க்கையின்
வரலாற்று விளைவா...?
எச்சிலை உண்டு
ஏப்பம் எக்காளமிடும்
எதிர்கால அடிமைகளின்
எதிரொலியா...?
அது...மேற்கிலே
தாய்மொழி தமிழென்பதை மறந்து
தலைபோன தலைவிதி கொண்ட
மழலைகளின் மறுதலிப்பு...!
தொப்புள் கொடி அறுமுன்னர்
தானம் கொடுக்கப்பட்ட
எம்தமிழ்க் குழந்தைகளின்
விழுமிய விம்மல்கள் ....!
தத்தெடுத்த மொழியே
தாய் மொழியாய்
தரணியெங்கும் தவறிப்போன
எம் புதிய தலைமுறைகள்
!
பெற்றவளை மறந்து
மற்றவள் மடியினுள்
மண்டியிட்டுக் கொண்ட
மமதை காணும் மாமனிதர்கள்!
போர்பேயின் வெறியாட்டத்தால்
வீசியெறியப்பட்ட விதைகள்...
வேரிழந்த விழுதுகள்...!
கறுப்பு என்று வெறுக்கும் போதுதானே
வேரையும் விதையையும்
தேட விளைகின்றனர்.
விழாது இருக்க
விழுது என்றாலும்
வைரிப்பற்ற
வேரிழந்த மரங்கள் தானே...இவர்கள்!
இம்மண்ணில்
உரமுண்டாயினும்- எமக்கு
உறுதியும்...
உத்தரவாதமும் இல்லையே...
இதயத்தில் எழுதி
எரிந்து கொண்டிருக்கும்
தம் அடையாளத்தை
எடுக்க முடியாது தவிக்கும்,
சொல்ல முடியாது துடிக்கும்,
கட்டுப்பற்களாலேயே
கடிக்கப்பட்ட நாக்குகளுடன்
வெளிநாடுகளில்
வேகிக் கொண்டிக்கும் தமிழினம்தான் இது...!
விடிவென்பதையே விளங்காது
விழுந்து கிடக்கப்போகும்
வீரியமிழந்த சமூகம்தான்
இது....!
அழட்டும்
நன்றாய் அழட்டும்
அழ வேண்டியவர்கள் தானே
அவர்கள்...!
உன் காதுகளை
மடித்து வைத்துக் கொண்டு
உன் பயணத்தை
நீ தொடர்வாயாக...
நாளை நீ தேடிப் பிடித்த
சூரியனைச் சூறையாட
இவர்களும் வருவார்கள்
கவனமாக இரு...!
தோழனே கவனமாயிரு..
காசைக் கொடுத்துவிட்டு
கருவறுக்க நிற்பார்கள்
கவனமாகவே இரு...!
-திலீபன்.
|