கவிதை: 281
இறகுப்பந்துவிடு தூது!

காற்றில் எழுந்து கணக்காய் நனிவிரைந்து
மாற்றார்க்குத் தப்பிவிடின் மண்வீழ்ந்து - தோற்றாராய்
ஆக்கத் தெரிந்த அழகிறகுப் பந்தே!என்
ஏக்கமறிந் தென்னவள்கண் ஏகு!
ஏகும் முனமென் இளநெஞ்சைத் தொட்டுப்பார்!
வேகும் அவள்நினைவின் வெப்பத்தால்; -ஆகம்*
இழைபோல் இளைத்த இவன்னிலையைச் சொல்லி
அழைப்பாய் அவளைச்சென் றாங்கு! (ஆகம்-உடல்)
ஆங்கவளைக் கண்டார்த் தருங்கதைகள் பேசிப்பின்
தேங்குவளைக் கண்ணாட்குச் சேவைசெய்! - பாங்காய்ப்பின்
என்னிலையைச் சொல்க! எழுங்காதல் மிக்குடையாள்
தன்னிலையைச் சொல்வாள் தளர்ந்து!
தளர்ந்து தனித்துத் தவிக்கின்றேன் நீபோய்
வளர்ந்தமுலை மாதை வரச்சொல்! - குளம்வாழ்
மரைமுகத் தாளும் மறுப்பாள் எனிலோ
இறப்பான் இவனென் றியம்பு!
இயம்புங்கால் அன்னவளின் இன்முகத்தை நோக்கு!
மயங்கும் விழிகள்; மருள்வாள்; - தயங்காதே!
நண்டோடு நீர்த்துறையில் நானுள்ளேன்; என்னுயிரோ
ஒண்டோடித் தன்சொல்லில் உண்டு!
உண்டா எனக்கேள் உறுகாதல் என்மீதிற்
பெண்டாள் இலையென்னாள்; பின்பென்ன?-பண்டென்
உளங்கல வாடி உவந்தாள்தன் மேனி
வளங்கல வாடுகிறேன் வந்து!
வந்தாறக் கட்டி வளஞ்சேர்க்கச் சொல்தன்னைத்
தந்தாலே என்னுயிர் தங்குமெனும் - அந்தப்பேர்
உண்மையினைச் சொல்லி உளமறிந்து வா!இந்த
நன்மையினைச் செய்க நயந்து!
நயந்தேன்; அவளின் நறுந்தேன் உடலை
வியந்தேன்; இதனை விளம்பத் - தியங்குமென்
ஆவியுண் கண்ணாள் அருகிருந்தென் னையணைக்கத்
தூவிறகுப் பந்தே!போ தூது! (தியங்குதல்-கலங்குதல்)
தூதாக உன்னையத் தோகை இடஞ்செல்லத்
தோதாவாய் என்பதினால் சொல்லிவைத்தேன் - போதாயோ?
மெல்லபோ கின்ற மிறல்*பந்தே! பெண்நெஞ்சை
வெல்லப்போ கொஞ்சம் விரைந்து! (மிறல் -பெருமை)
-அகரம் அமுதா.
|