........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 283

யாதுமாகி நிற்கிறது உலகு!

 

யாதுமாகி நிற்கிறது உலகு!
எல்லாம் இழந்து
ஏதிலி ஆனது - என்
தமிழ்சாதி !!

நாட்டையளித்தவனே
நடுநிலமை பேசுகின்றான்
கொலைஞனே இன்று
தீர்ப்பாளியாகின்றான்
அகதியாக்கிய உலகே - இன்று
அகதியந்தஸ்து கொடுக்கிறதாம்!

தமிழர்க்கு முதுகுத் தோலையும்...
வேண்டும் போதெல்லாம் - அதில்
விளாசவென....
உலகத்தின் கைகளில் சாட்டையையும்
கொடுத்துப் போயிற்று
அந்தக் கடவுள்.
பிறகு பிசாசுகள்
நிலவையுடைத்துச்
சூரியனைச் சிறைப்பிடித்தன..

இருள் சூழ நிலம் தவித்தது !
பச்சைவயல்களும் நீலவானும்
குண்டுகளால் சிதிலமாக்கப்பட்டன !
நிலங்களிருந்து நிறங்கள் சிதைந்தது !
எங்கும் எதிலும் சிவப்பு மட்டுமே
மீதமாய் ஒட்டப்பட்டது... ... ...

வழியெங்கும் நிணவாடை
மூக்கைத் துளைக்கும்...
பிணங்கள் இடறுப்படும்...
முண்டங்கள் முனகும்... ...
பாதுகாப்பென்று
மூடிவைத்த பிணத்தையும்
இழுத்தெடுத்தன குறுநரிக்கூட்டம்.

குட்டிகளைக் காப்பாற்றத்
தங்களையே பலியாக்கின
பாசத்தாய்மைகள் !!
செத்துக்கிடக்கிற தாயின்
அசைவறியாது,
அசைத்தாட்டிக் கொண்டது
பச்சிளம் பிஞ்சு !!

அம்மா, அப்பா, அண்ணா, தங்கை
சித்தப்பன், பெரியப்பன்
என்று திரும்புகிற
பக்கமெல்லாம் உறவுகள் விழவிழ
ஊர் அழிகிறது.

துப்பாக்கிச் சனியனும்
இலக்கில்லா எறிகணைகளும்
மிஞ்சிக்கிடக்கிற அபலைகளைக்
குறிபார்த்து நெருப்புமிழும்.

அச்சக்கூண்டிற்குள்
அசையாது உட்கார்ந்திருக்கிறது உடல்.
பேதலித்த உடம்பைப் பேய்கள்
புரட்டிப் புரட்டிப் புணர்கின்றன !

கால், கையிழந்து
இரத்தச்சேற்றுள்
அமிழ்கிற சனங்களுள்
தங்களின் விறைத்த குறியைப்
புதைக்கத் துடிக்கின்றன - தன்
இனத்தையே சூறையிடும்
இரத்தக் காட்டேரிகள்.

பூக்களற்ற அப்பூமியில்
நெருப்பே மண்ணாயிருந்தது!!
குழந்தைகளையும்,
குற்றுயிராய் கிடந்தோரையும்
மிதித்து மிதித்து
இலக்கில்லாமல் ஓடின உயிர்
எஞ்சியிருந்த ஜடங்கள்.

கால்கள் இரண்டும் போன
கர்ப்பிணியின்
"என்னைக் கொன்றுவிட்டுப் போங்கள்"
என்கிற குரல் ஒலியை
எவரும் சட்டை செய்யாமலேயே
ஓடினார்கள்!
உணவில்லை, உடையில்லை
மருந்தில்லை, உறவில்லை
உறங்க ஒரு இடமில்லை.
ஓடினார்கள்! ஓடினார்கள்!!
இலக்கின்றி ஓடினார்கள்!!!

பிறகு
ஓடியவர்களுக்காக
கம்பிகளுக்குள் எல்லை போட்டார்கள்.
கால் விறைக்க நிற்க வைத்தார்கள்.
துப்பாக்கிகள் அங்கே
தொண்டைகளுக்குக் காவலாயிருந்தது

“மனிக் பாமில்” நின்ற படியே
சாமாதானம் வருமென்றான்
சமாதானகாலச் சூத்திரன்.

இது சரியான பாடம் எனச் சாப்பாடின்றிப்
பட்டினி கிடந்து பரிதவித்தவர்க்குப்
பத்திரம் காட்டினான்
நலன் புரித்தொண்டன்.

கதிர்காமர் முகாம்
அப்பாவிகளை வதைத்தது.
குழந்தைகளினதும்
முடமானோரினதும்
தலைகளில்
அவர்கள் போர் வெற்றியைக்
குத்தினார்கள்.
குரல்களைப் பிடுங்கி
அவர்கள் ஊமையாய்ப் போக
இலவச மருந்தளிக்கப்பட்டது.

உலகில் மனிதரைப் புதைக்க
மனித உரிமைகள் சபையே
முண்டியடிக்கிற
நாட்கள் இது.

இன்று
யாதுமாகி நிற்கிறது உலகு !!
எல்லாம் இழந்து
ஏதிலி ஆனது - என்
தமிழ்சாதி !!

-கவிஞர். மா. சித்திவினாயகம்,
கனடா.
 

 

 

 

 

 

m

 

 முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.