கவிதை:
320
காதல் என்றாய்...

தெருவோரத்தில்
மரத்தடியில்
இருட்டில்
மனந்திறந்து பேசினோம்...
காதல் என்றாய்!
இன்று
வெளிச்ச மழையில்
வெண் சிரிப்புடன்
இன்னொருவனுக்கு
உன் கழுத்தை நீட்டுகிறாயே...
இதனை
நான் என்னவென்று சொல்வேன்?
மணற்பரப்பில்
மணிக்கணக்காய்
மணலை எண்ணினோம்...
காதல் என்றாய்!
இன்று
உன் மணவிழாவிற்கு
வந்த வாழ்த்துக்களை
எண்ணிக் கொண்டிருக்கிறாய்...
இதனை
நான் என்னவென்று சொல்வேன்?
தினமும்
மல்லிகைப்பூ கேட்டாய்
வாங்கித் தந்தேன்...
காதல் என்றாய்!
இன்று
இன்னொருவன் சூட்டிய
மாலையுடன்
என்னை ஏளனமாய்ப்
பார்க்கிறாய்...
இதனை
நான் என்னவென்று சொல்வேன்?
ஒரு இளநீரை
ஒரே குழலில் இருவரும்
சேர்ந்து பருகினோம்
இருவர் மூச்சும்
ஒன்றாய்க் கலந்தன...
காதல் என்றாய்!
இன்று
உன் கரத்துடன்
இன்னொருவன் கரமும்
இணைந்து உறவாட
மணமேடையை
வலம் வருகிறாய்...
இதனை
நான் என்னவென்று சொல்வேன்?
வீசும் காற்றில்
விளையாடும்
உன் கூந்தலை
ஆசையுடன் வருடினேன்...
காதல் என்றாய்!
இன்று
உன் விரலில்
மோதிரம் அணிவித்து
இன்னொருவன் வருடுகிறான்...
இதனை
நான் என்னவென்று சொல்வேன்?
கோழையாகிக்
கோலம் மாறினாயோ...?
இல்லை
உன் கோலத்தில்
இதுவும் ஒன்றா...?
ஒன்றுமே புரியவில்லை
எனக்கு
ஒன்றுமே தெரியவில்லை
காதல் வேறு!
கல்யாணம் வேறு!
என்று உணர்ந்து விட்டேன்
நீ என்னிடம்
சொன்னதெல்லாம்
காதல் மட்டும் தானே...!
-ஆர்.கனகராஜ்.
|