கவிதை:
334
தாத்தாவின் இறுதிப் பயணம்...!

அதிகாலை விடியலில்
அபசுரமாய் சத்தமிட்டு
அறிவிப்புச் செய்தி சொன்ன
அந்த
சாவுக் குருவியின் சாசனம்
சடுதியில் நிகழ்ந்தது...!
அருகிலிருந்தோர்
இயந்திரமாய் இயங்க
தொலைத் தொடர்பு
சொந்த பந்தங்களுக்கு
தொலை பேசியில்...!
பறந்து சென்றன
பாஸ்போர்ட் போட்டோவும்
பயோடேட்டாவும்
பத்திரிகை விளம்பரத்திற்கு...!
நாலுமறிந்த
நல்ல நண்பர்கள்
நல்லெண்ணெய் ஊற்றி
நல்லபடி குளிப்பாட்டி
கோடி உடுத்தி
நாடி கட்டி
கால் கட்டைவிரல்
சேர்த்துக் கட்டி
நயமாய்த் தூக்கி
தலை வடக்காய்
மரக்கட்டில் மேல்
மல்லாக்கக் கிடத்தி
அரளி மாலையை
அமங்கலமாய்
அணிவித்து
தற்கொலைக் கொள்ளிகள்
ஊதுபத்தியை
தலையருதில் வைத்தனர்...!
அன்று விரிந்தது
வீட்டின் முன்
ஐம்பது நாற்காலிகளுடன்
ஒரு சிறு பந்தல்..!
அளவெடுத்தான்
நூலால் ஒருவன்
பெட்டி செய்ய...!
குழி வெட்ட
குத்து மதிப்பாய்
கண்ணால் கண்டு சென்றான்
பிறிதொருவன்...!
தலைமாட்டில் சிலர்
கால்மாட்டில் சிலர்
நிரந்தர பிரஜைகள்...!
வந்து போனவர்கள
மாலை போட்டவர் சிலர்
மாலை போடாதவர் சிலர்
கண் கலங்கினவர் சிலர்
கண் கலங்காதவர் சிலர்
காலைத் தொட்டு
கண்களில் ஒற்றிக் கொண்டவர் சிலர்
கடமைக்குக் கண்டு சென்றவர் சிலர்...!
உரிமையோடு
உறவு முறை கூறி
ஒப்பாரி வைத்த
பெண்கள் சிலர்...!
பணத்தைப் பற்றி
சொத்தைப் பற்றி
பந்தலில் அமர்ந்து
பரிவர்த்தனம்
பகிர்ந்து கொண்ட
பந்தங்கள்- பெரிசுகள்...!
சவம் சுமக்கும்
நாலுசக்கர வண்டி
வந்த மகிழ்ச்சியில்
அதிசயமாய்
அதைச் சுற்றி சுற்றி
ஓடிப்பிடித்து விளையாடும்
சின்னஞ் சிறுசுகள்
ரத்த பந்தங்கள்-
தாத்தாவுக்கு
பேரன்களும், பேத்திகளும்...!
கண்ணாடி
கைத்தடி
பொடி டப்பாவுடன்
சவப்பெட்டிக்குள்
கூடு பாய்ந்தார் தாத்தா...!
நாலு பேர் தயவால்
வீடு வாசல் துறந்து
வீதிக்கு வந்த தாத்தா
இனி
வீடு திரும்ப மாட்டார்
இது சத்தியம்...!
-பாளை.சுசி.
|