கவிதை:
340
அந்த நாட்கள்!

நூல் இணைப்பில்
சார்ஜ் செய்யப்படாத
தீப்பெட்டி செல்போன்கள்
எப்போதும்
டிரவுசர் பைக்குள்..
‘ஹலோ’ பேசிய
அந்த நாட்கள்..!
மண்போட்ட
புல்போட்ட
தீப்பெட்டியில்
சிகப்பு வெல்வெட்
பட்டுப் பூச்சிகளை
தொட்டுத் தடவி
முத்தமிட்டு கொஞ்சி..
குஷ்டம் வந்தாலும்
பரவாயில்லை
என தூக்கி சுமந்த
இனிய அந்த நாட்கள்..!
பதுங்கியிருந்து
குறிவைத்து
பறக்காட்டும்
குருவி பிடித்து...
அதை மரம் நட்ட
நீர் வைத்த
அரிசி போட்ட
கூண்டுக்குள்
சிறை வைத்துப்
பார்த்து ரசித்து
பரவசப்பட்டு...
மறுநாள்
குச்சி எடுத்து
குழி தோண்டி
அடக்கம் செய்து
அருகில் அமர்ந்து
கண்ணீர் சிந்திய
அந்த நாட்கள்..!
திறமையாய் தும்பி பிடித்து
இறக்கையை இணைத்துப்
பிடித்து சிறுகல்
தூக்கச் சொல்லி
துன்புறுத்தி
இன்பம் கண்ட
அந்த நாட்கள்..!
கோடை மழையால்
குளமான தேங்கிய நீரில்
மீன் பிடித்து
அரைத்தவளை பிடித்து..
சளி பிடித்து
காய்ச்சல் வந்து
தவித்துப்போன
அந்த நாட்கள்..!
காலணாவுக்கு
கடலை மிட்டாயும்
கமர்கட்டும் வாங்கி
காக்காய் கடிகடித்து
பெரிய துண்டு
சின்ன துண்டு - இப்படி
சண்டை போட்டு
பகிர்ந்து உண்ட
அந்த நாட்கள்..!
அண்ணனுக்கத் தெரியாமல்
அவன் பீடி திருடி
முட்செடி பின்னால்
மூவராய் அமர்ந்து
பற்ற வைத்த
பீடிப் புகை உறிஞ்சி
‘லொக்’ ‘லொக்’ - இருமி
ஓசி வெற்றிலை
கடையில் வாங்கி;
நாற்றம் போக்கிய
அந்த நல் நாட்கள்..!
கண்ணிபோட்டு
ஓணான் பிடித்து
மூக்குப் பொடி
முகத்தில் தூவி
நண்பர்களாய்
சுற்றி நின்று
கைதட்டி சிரித்து
பேயாட்டம் ரசித்த
அந்த நாட்கள்..!
அடுத்த வீட்டு
ரோஜா செடியில்
அழகான பூக்கள்..!
ஆசையாய்
ஓசி குச்சி
ஒன்று வாங்கி
தொட்டியில்
மண் போட்டு
எரு இட்டு
நீர் விட்டு
குச்சி நட்டு..
நாட்கள் நான்காகியும்
துளிர் இல்லை..
சந்தேகம் வலுத்ததால்
கள்வனாய்
குச்சி பிடுங்கி
வேர்பார்த்த
அந்த நாள்..!
பெட்டிக்கடை பக்கம்
காலைச் சுற்றிய
நாய்க் குட்டி - அதை
யாருக்கும் தெரியாமல்
வீட்டு கொல்லைப் புறத்து
மரப்பெட்டியில்
சாக்கு போட்டு
துணி விரித்து
பாத்திரம் வைத்து
பால் ஊற்றி
‘டைகர்’ - பெயர் சூட்டி
குடியேற்றி...
‘அங்கே என்னடா செய்கிறாய்?’
‘ஒன்னுமில்லம்மா..’
டைகருக்குக் கோபமாம்..
‘வள்’ ‘வள்’ என குரைக்க
வந்தது வினை..
மறுபடியும் தெருவில் ‘டைகர்’...!
பிடித்தமான மீன் குழம்பு
உண்ணப் பிடிக்காத
அந்த நாள்..!
கோடை விடுமுறை..!
காய்த்துக் குலுங்கும்
மாந்தோப்பு..
பகல் கொள்ளையர் நாங்கள்;
கல்லெறிந்து
மாங்காய் திருடி
தோட்டக்காரன் கைக்குத் தப்பி
‘பொட்லர்’ கிணற்றில்
முற்றுகையிட்டு
கல்லெடுத்து
மாங்காய் உடைத்து
உப்பு தடவி
எச்சில் ஊற உண்ட
அந்த இனிய நாட்கள்..!
எருக்கஞ்செடி இலையை
புழுவோடு பறித்து
காற்றோட்ட டப்பாவில்
கவனமாய் பராமறித்து
கூட்டுப் புழுவாய் உருவாக்கி
வண்ணத்துப் பூச்சியாய் உருமாற்றி
உவ்வகையில் உலாவ விட்ட
அந்த நாட்கள்..!
தேங்காய் சிரட்டையில்
ஈரமண் நிரப்பி
தட்டி, கொட்டி
கருப்பட்டி செய்த
அந்த நாட்கள்..!
வீட்டுச்சுவர் ஓரம்
‘புனல்’ வடிவ குழிகளில்
புதைந்திருக்கும்
குள்ள நரிகளை
தோண்டி எடுத்து
உள்ளங்கையில் வைத்து
விளையாடிய
அந்த நாட்கள்..!
கோடையில்
இடி மின்னலோடு
கூரையில்
‘தட தட’ என
ஒலி எழுப்பும்
ஆலங்கட்டி மழை..!
‘குடு குடு’ என
மழையில் ஓடி
பொறுக்கி எடுத்த
ஜஸ் கட்டிகள்
கணப் பொழுதில்
வாயில் உருகி மறைந்த
அந்த நாட்கள்..!
பள்ளிக்குப் பாதை
அன்று ‘பைபாஸ்’..
பார்த்து விட்டேன்
‘அண்ணனையும்’
‘அக்காவையும்’
பேசிக் கொண்டிருந்தார்கள்..
சிரித்தேன்..
கூட்டிச் சென்றான் அண்ணன்.
புளிப்பு மிட்டாய்
வாங்கித் தந்தான்.
‘சொல்லாதே’ - சொன்னான்.
இன்றுவரை
சொல்லவில்லை
மிட்டாய் சாப்பிட்டதை..!
-பாளை.சுசி.
|
|