கவிதை:
339
அன்றும் இன்றும் அம்மா!

அன்று
நீ
கருவான போது
கடவுளைத் துதித்தேன்...!
நீ
முட்டிய போது
முகமலர்ச்சி அடைந்தேன்...!
நீ
பிறந்த போது
பேரின்பம் கொண்டேன்...!
நீ
அழுத போது
நானும் அழுதேன்...!
நீ
சிரித்த போது
நானும் சிரித்தேன்...!
நீ
தவழ்ந்த போது
நான் நெகிழ்ந்தேன்...!
நீ
எழுந்த போது
நான் ஊன்றுகோலானேன்...!
நீ
அடியெடுத்து வைத்த போது
நான் நடைவண்டியானேன்...!
நீ
உப்புமூடையான போது
நான் பொதிமாடானேன்...!
நீ
காவலனான போது
நான் கள்வனானேன்...!
நீ
அம்மா என்ற போது
ஆனந்தக் கூத்தாடினேன்...!
நீ
பள்ளிக்குச் சென்ற போது
நான் பரிதவித்திருந்தேன்...!
நீ
எழுத முயன்ற போது
நான் கை கொடுத்தேன்...!
நீ
பாடம் கற்றுக் கொள்ள
நான் உன் பாடம் படித்தேன்...!
நீ
பாட முயன்ற போது
நான் பாட்டுப்பாடி பழகினேன்...!
நீ
தூங்க நினைக்கும் போது
நான் கதை படித்தேன்
நீ
பால் சோறு சாப்பிட
நான் பகலில் நிலவைத் தேடினேன்...!
நீ
வளர்ந்து வாலிபனான போது
நான் உளம் மகிழ்ந்தேன்...!
நீ
வாழ்க்கையில் உயர்ந்த போது
நான் கடவுளை வணங்கினேன்...!
நீ
மனைவி மக்கள் என்றான போது
நான் அகம் மகிழ்ந்தேன்
நீ
முதியோர் இல்லத்தில் சேர்த்த போது
நான் கவலை கொண்டேன்...!
இன்று
நீ
பிறந்த நாள் கொண்டாடுவாய்
என்னிடம் ஆசி வாங்க வருவாய்...!
என்னைப் பார்க்க வருவாய்...!
என்று
நீ
வருவதை எதிர்பார்த்திருக்கிறேன்...!
ஏமாற்றத்துடன் காத்திருக்கிறேன்...!
நீ
எப்போது வருவாய்...?
என் அன்பு மகனே...!
-பாளை.சுசி.
|