கவிதை:
338
தள்ளியிருக்கும் தமிழர்களே...!

தம்நாட்டை விட்டுத்
தள்ளியிருக்கும் தமிழர்களே...!
உங்களுக்கு நம்
கிராமம் ஞாபகத்திற்கு வருகிறதா?
பாட்டியோட ஓட்டு
வீடு;
பழங்கதை பேசும் திண்ணை;
காற்று வாங்கிட தாழ்வாரம்;
படுத்து உறங்கிடக் கூடம்;
அதில் தொங்கும் ஊஞ்சல்;
அத்துடன் ஆடும் கிளிஞ்சல்கள்;
அடுத்தடுத்து இரண்டு அறைகள்;
பின்புற வராண்டாவில்
கல்லுரல் அம்மி;
சமையலறை;
சாப்பாட்டுக் கூடம்;
அடங்கிய கிராமத்து வீடு!
அதன் நினைப்பே ஆனந்தம்!!
பாட்டி, தாத்தா, பெரியப்பா
சித்தப்பா, அத்தை என
அத்தனையும் உறவுகள்!
அன்புடன்
பழகும் மனங்கள்!!
நினைவுகள் ஓடஓட
பள்ளிப்பருவம் ஞாபகத்திற்கு வருகிறதா?
அலுமினிய பெட்டி
அதில் புத்தகம்
அத்துடன் ஓடும் ஓட்டம்
அடித்த கொட்டம்
ஆசிரியரிடம் வாங்கிய அடி
அத்தனையும் நினவுகள்!!
ஊரின் திருவிழாக்கள்
பட்டாடை,பொன் நகைகள்
பூவலங்காரத்தோடு
தேரில் வந்த பகவான்
கோயிலின் நெய் மணக்கும்
வெண் பொங்கல்! சர்க்கரைக் பொங்கல்!!
இன்றும் நாவில் எச்சில்!!!
பொங்கலன்று கூவிய
பொங்கலோ பொங்கல்
நவராத்திரி சுண்டல்
தீபாவளி இனிப்புகள்
என எத்தனையோ
மனதிற்குள் நீங்காமல்!!!
இதையெல்லாம் மறந்து
இனிய உறவுகளைத் துறந்து
எல்லைகளைக் கடந்து
எங்கோ பிரிந்து
இருக்கும் கஷ்டம்
எல்லோருக்குள்ளும் இருக்கும்!
எப்படி இந்த வாழ்க்கை ஓட்டம்?
நினைவுகள் மட்டும் நீங்காமல்
உள்ளுக்குள் ஊரை நினைத்தபடி
உறவுகளை நினைத்தபடி...
உள்ளுக்குள் புகைந்தபடி...
வாழ்க்கை ஓடுது!
தம்நாட்டை விட்டுத்
தள்ளியிருக்கும் தமிழர்களே...!
உங்களுக்கு எப்படி இருக்கு?
-சந்தியா கிரிதர், புது தில்லி.
|