கவிதை:
345
பாரதி
வருவானா?

பரங்கியர் பவனி வர
பாமரர் முணுமுணுக்க
படிப்பினர் இதை ரசிக்க
பாரதி பதைபதைத்தார்.
பதைபதைப்பில் உதிர்ந்த சொற்கள்
பாமரரைக் கிளறிவிட
படிப்பினரும் உணர்வு பெற்று
பாரதிபின் நடந்தார்.
பின்நகர்ந்த கூட்டம் பார்த்த
பரங்கியர் தம்நிலை குலைய
விண்ணதிரும் என பயந்து
பாரதி வெகுண்டெழ விரைந்துவிட்டார்.
பாரதியின் பாரதம்
படித்தோர் பதவி வெறியோர்
பங்கு போட்டு நடிக்குமிடம்
பண்பினர் எண்ணிக்கை
படபடவெனக் குறைய
பார் இகழ நசிக்கும் இடம்.
பாரதி வருவானா?- மீண்டும்
பாரதி வருவானா?
சொந்து சுகம்காணும்
சொர்க்க வாசல் தரகர்களை
மெல்ல அகற்றி மேன்மை வழிநடத்தி
உண்மையாக உயரவழி
உயர் உழைப்பு என்பானா?
வேண்டாம்!
வர வேண்டாம்!!
சாக்கடையில் உதிக்கும் மலர்
தத்துவம் சொல்லுமானால்
சாக்கடையே அதைக் கிடத்தி இதனது
தற்பெருமைக் கதைக்கும் நேரம்.
வரவேண்டாம்!
வரவே வேண்டாம்!!
சந்திரனை சிவப்பென்று
சாட்சியோடு நிலைநிறுத்தி
வெண்சாமரம் வீசிக்கொண்டே
வேள்விபூசை செய்யும் நேரம்.
வரவே வேண்டாம்!
அய்யோ வரவே வேண்டாம்!!
கயமைதனை முதலாக்கி
கடமைதனை கேள்வியாக்கி
கல்லுக்குள் அமைதி தேடும்
கலியுக காலமிது.
அய்யோ வரவே வேண்டாம்!
வேண்டவே வேண்டாம்!!
இன்னல் பல சுமந்த
இயற்கையும் மனமுடைந்து
தன்னையும் கரைத்து - பின்
தன்னுருவை அடையும் அன்று
மனிதமாண்பு விதைவிதைக்க - அவன்
மண்மீது தோன்றிடட்டும்.
- பொன்பரப்பியான்.
|