........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 352

தீச்சுவாலை...?

இரகசியம் என்பதே இல்லை.
பரகசியம். இராட்சதக் கம்பீரம்!
இவ்வுலகை அலட்சியம் செய்யும்
இணையற்ற சுயதிடம்.சுயஅதிபதி.

அக்கினி அரவமாய்த் தீண்டும்
அரக்கத் தீக்கொழுந்து. அழுக்ககற்றி.
எண்ணை, விறகு, மின்சாரமென
அன்ன பிற தீனியால் சிறகுயர்த்தும்.

காய்ந்த குச்சிகள் சருகுகளைப்
பாய்ந்து 'கப்' பென்று கபளீகரித்து
ஓய்வின்றிக் கன்னா பின்னாவென
சடசட, படபடவெனப் பரவும்.

காமம், பாசம், பசி, அறிவு,
கலைத் தீச்சுவாலை உயிர்களைக்
கண்டபடி வதைக்கும். உயர்த்தும்.
அண்டத்திலொரு சட்டாம்பிள்ளை தீச்சுவாலை.

குளிருக்கு மரணதண்டனையை விதிக்கும்
குத்தகைக்காரச் சர்வாதிகாரி.
கும்மிருட்டையும் கொத்தடிமையாக்கி
குளறுபடியின்றி எற்றுதல் செய்யும்.

சாம்பல் போர்வையுள் உறங்குமிதன்
சாகச மூச்சுக் காற்று புகை.
சாவிற்கும் உயிர்களைத் தள்ளும்,
சாமர்த்தியப் பயில்வானையும் கலக்கும்.

தீச்சுவாலையின் முன்னால் காட்டும்
தீவிர பத்திரமான நிலையை
தீச்செயல்களோடு மனிதர் காட்டினால்
தீங்கில்லாத உலகம் உருப்பெறுமே!

- வேதா.இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.