|
கவிதை:
387
அது மட்டும் வேண்டாம்..!!

வல்லரசுகளே..!
உமது மருந்துகளுக்கு எம்உடல்
ஆய்வுக்கூட எலியானது..
மரபணு மாற்ற விதைகளுக்கு
எம் விளைநிலங்கள் பலியானது..
கழிவு நீரொத்த பானமும்,
காய்ந்த வரட்டி உணவும்
கவர்ச்சி, நடிகை விளம்பரத்தால்
மலைக்க வைக்கும் விலையானது..
சின்னப்பிள்ளைகள் வரை
வெண்சுருட்டு விரலிடுக்கில்,
கள்குடித்தக் “குடிகாரர்கள்”
உம்நாட்டு மதுகுடித்து
“கணவான்கள்” ஆனார்கள்..
திடுமென சிலதேசப் பெண்கள்
பலமுறை உலகஅழகியானதும்,
உம் ஒப்பனைப் பொருட்களின்
விற்பனை எகிறியதும்,
எத்தைகைய தந்திரம்..!
இவையெல்லாம் போகட்டும்..
அதிகார போதையில் - இன
அழிப்புத் தீவிரவாதிகள் - எமைக்
கோரமாய்க் கொன்றெரிக்கின்றார்
உம் பேரழிவு ஆயுதத்தால்..
வளமான நாடென்றால், - பணம்
வருமானமென்றால்,
நிறம்மாறும் உம் நியாயங்கள்.
இறப்பு விழுங்கிக் கொண்டிருக்க,
இறுதிக் குரலாய் கேட்கின்றேன்..
களைத்த உயிரோடு,
இழக்க ஏதுமின்றி
கலங்கி நிற்கும் - எம்
அடுத்தத் தலைமுறையாவது
அமைதியாக வாழட்டும்..
அழிவு ஆயுத விற்பனை
அது மட்டும் வேண்டாம்..!!!
-பனசை நடராஜன், சிங்கப்பூர்.
|
|