கவிதை: 402
அவள் கடல்...!

ரத்தமே உடலாய்
அவள் கடல்...
சதா அலையடித்து
வேர்ப்பதினால் தானோ
அவள் உப்புக்கரிக்கிறாள்...
உலகெங்கிலும் காதல்களை
கரையோரங்களில்
வளர வைப்பதிலும,
காதலர்கள்
தோற்கையில் சுவீகரித்து
காதல்களை வாழவைப்பதிலும்,
ரத்தமே உடலாய்
அவள் கடல்...
வாழ்க்கை என்பது
அமிழ்த்தும்...
அலை மீண்டும்
கடல் கொள்ள
கால்கள் அமிழ்வதுபோல...
போராடி அடுத்த
அடியெடுத்து வைத்தால்
மட்டுமே வாழ்வது
மீண்டும் தொடருமென்று
மெளனமாய் வாழ்க்கைப்பாடம்
கற்றுத்தருவாள்,
ரத்தமே உடலாய்
அவள் கடல்...
சாய்ந்து விழும் அந்திவானத்தை
ஏந்திக்கொள்ளும் தூரத்தில்
நங்கூரமிட்டிருக்கும்
மிதக்கும் உலோகத்தீவுகளின்
பயணங்களின் வாழ்வாதாரமாய்
ரத்தமே உடலாய்
அவள் கடல்...
காற்றின் பிறப்பிடம்
அலை...
அலையின் பிறப்பிடம்
காற்று...
இவ்விரண்டின் பிறப்பிடம்
ரத்தமே உடலாய்
அவள் கடல்...
அண்டவெளி தன்னுடலை
பார்த்துவிடுமோவென
வெட்கம் கொண்டே
வானம் கொண்டு
போர்த்திக்கொள்ளும்
ரத்தமே உடலாய்
அவள் கடல்...!
-ராம்ப்ரசாத்.
|
|