கவிதை: 481
எல்லாம்
சாத்தியமே!!

விழி இரண்டும் மூடி உறங்கும் போது வரும் கனவு
வழி மூடிய பிரச்சனைக்கும் தீர்வு தரலாம் நல் கனவு
தாழிக்குள் பொருளாய் மனதுக்குள் வரும் பல கனவு - முன்
மொழியாமல் தானாய் வந்து புதிராய் நிற்கும் கனவு
குழவி முதல் கிழம் வரை காண்பர் பல வண்ணக் கனவு
புரவியில் வரும் அரசன் முதல் ஆண்டிவரை பேதம் இல்லை
குருடனும் ராஷவிழிக் கொண்டு தன் தர்பாரை கனவில் நடத்தலாம்
கூனனும் நேரநிமிர்ந்து படைவீரனாய் கனவில் போராடலாம்
ஆண்டியின் கனவில் அரண்மனை கட்டி அரசனாகலாம்
நொண்டியின் கனவில் கொம்புத்தேனைப் பெற்று மகிழலாம்
ஊமையும் கனவில் சுகராகம் ஆலாபனை செய்யலாம்
ஆமையும் கனவில் ஆகாயத்தில் பறக்கலாம்
அன்னை கனவில் காண்பாள் தன் மகன் நல்வளர்ச்சிக்கு
தன்னை மிஞ்சி பேர் வாங்க தந்தை கனவு காண்பான்
ஏர்பிடித்தவன் கனவில் நல்பயிர் விளைய மழை பெய்யும்
நேர்மை விரும்புபவன் கனவிலும் நாட்டின் நன்மையை விரும்புவான்
விட்டதைப் பிடிக்க சூதாடி காண்பான் கனவு
எட்டாததை அடைய பேராசைக்காரன் காண்பான் கனவு
தெவிட்டாத அமுதைக் கனவில் கூட பகிர்ந்தளிப்பான் பரோபகாரி
கெட்டாலும் பெரியோர் கனவிலும் பிறர் நலம் காண்பர்
வாலிபனின் கனவில் வரும் நாளைய நிகழ்ச்சி
முதியவரின் கனவில் வரும் மலரும் நினைவும்
மங்கையின் கனவில் கணவருடன்ஒளியும் ஒலியும்
பக்தனின் கனவில் வரும் உலாவரும் ஒளிக்கதிர்
முதலாளியின் கனவில் போட்ட முதல் பலமடங்காகக் காண்பர்
தொழிலாளி பணி நேரத்து கனவை ஒழிக்க வேண்டும்
தொட்டிலில் குழந்தை கனவுக்காக தாய் துயில்மறப்பாள்
நாட்டில் உள்ளோர் கனவுக்காக எல்லை வீரன் துயில் நீப்பான்
புவி தன்னிறைவு பெற கனவு காண்பான் சுதேசி
கவி கனவை நினைவாக்குவான் கர்மயோகி
அடிமை வாழ்வு கனவாகி சுதந்திரம் பெற தலைவன் மகிழ்வான்
மடமை நீங்கி கல்வி வளம் பெற கனவு காண்பான் ஞானி.
- பெயரில்லை.
|