கவிதை: 487
பேரொளி
பிறந்தது...!

மண்ணின் மைந்தர்களின்
கரங்களனைத்தும் ஒன்று சேர்ந்தது
வலிமை பிறந்தது; வனவாசம் முடிந்தது.
சிறிய அலைகளெல்லாம் ஒன்று சேர்ந்தது
ஓர் நாளில் ஆழிப்பேரலையாய்ப் பாய்ந்து
பரங்கியர்களை கப்பலேறிப் பயந்தோடச் செய்தது.
எண்ண அலைகளெல்லாம் ஒன்றில் குவிந்தது
விடுதலை அடைவதற்கு முன்னமே
அந்நிகழ்வைக் கனவு கண்டு இன்புற்று
ஆடிப்பாடும் பாடலாய் புனைந்த
கவிஞன் உள்ளத்திலிருந்து
தமிழ் ஊற்று பெருக்கெடுத்து
தேசத்தை நனைத்தது.
பலரின் செங்குருதி பாரத மண்ணில் கலந்தது
இனிவரும் தலைமுறையாவது
சுதந்திரப்பறவையாய் ஆகாயத்தில் சிறகுவிரிக்க...
அடக்குமுறைகளை எதிர்த்து நின்ற
மக்களின் எழுச்சி உச்சகட்டத்தை அடைந்தது
அதன் அதிர்வு தாங்காமல்
அடிமைக் கூண்டு உடைந்தது.
விடுதலை...விடுதலை...விடுதலை-
என்ற ஆனந்தக் குரல்
எங்கும் ஒலித்தது
எங்கள் மண்ணில் ஒலித்தது.
காந்தியின் கதராடையும், கைத்தடியும் ஜெயித்தது
பகட்டும், பீரங்கியும் கொண்டு யுத்தம் பல செய்து
மனித மாமிசத்தை ருசித்த குள்ளநரிக் கூட்டம் தோற்றது.
சரித்திரமானது சகலமும் சரித்திரமானது
அப்பக்கங்களைப் புரட்டிப்பார்க்குது
அகிலமே ஆச்சர்யத்துடன் இன்று புரட்டிப்பார்க்குது.
- ப.மதியழகன், மன்னார்குடி.
|