கவிதை:
526
புத்தரான பிள்ளையார்!

வந்த வழி தெரிந்தது
போகும் வழிதான்
எதுவென்று தெரியவில்லை
ஆனால் வந்த வலியால்தான்
போகிறேன்
வந்தவழியில்.....
எத்தனையோ மனிதர்கள்
காற்றைப்போல் ஓய்வெடுக்காமல்
காரியங்களைக் கவனித்துக்
கொண்டிருக்கிறார்கள்
அந்த வழியால் வரும்போதுமட்டும்
பயம் பொடிப் பொடியானது
ஆலயங்களில் மணியோசை
கடைக்காரர்களின் கூவல்
எந்தமிழில் நூறு வசனங்கள்
எங்கேயும் என் இனங்கள்
எங்கேயும் என்சனங்கள்
அச்சமற்ற வழியில் பேருந்தின் நகர்வு
எங்கேயும் சனங்களின் வீரத்துடன்
பயங்களைத் துரத்தி விட்டு
சங்கத் தமிழர்க்கு பிறகு
சோழத் தமிழர்க்குப் பிறகு
என் நிலத்தில்தான்
அந்த வீரம்
மண்புழுவுக்கு வீரம்
உருவேரியிருக்கும் போல்
உணர்வு கொண்ட செயல்கள்
இத்தனையும் கண்ட மண்ணில்....
தடயங்களற்ற சிதைப்பு
காணும் கண்களில் வெப்பக்கண்ணீர்
மனிதரற்ற நிலம் பயிர்களற்ற வயல்கள்
கிளைகளற்ற மரமாய் என் தாய் நிலம்
இருக்க கிளையில்லாத மரமாய் எம் சனம்
அடையாளம் இழந்த தாய் நிலத்தில்
கோயில் கல் மட்டும் தான்
அதுகூட பாது காப்பு
வலையமாய் முள் வெளிக்குள்
தெருக்களில் விளங்காத மொழிகள்....
திடீரென அரசமர பிள்ளையார்
புத்த அவதாரம் எடுத்து விட்டார்
கரடு முரடான பார்வையுடனும்
வார்த்தைகளுடனும்
விளங்காத பாசையுடன் பல பேர்
கோழிக்குஞ்சைக் கண்ட
பருந்துகள் போல்
எங்களை கண்டு
எந்தாய் நிலத்தில்
நான் நுழைய சாரிடமோ
அனுமதி கேட்க வேண்டிய நிலை
வீடு வந்தது ....
--கிருஷ்ணா, யாழ்ப்பாணம்.
|
|