கவிதை: 622
எய்ட்ஸ் எனும் எமன்!

இன்பத்தின் வழியாகத்
துன்பத்தைத் தொடங்கும்
திறவுகோல்!
தூய்மை வாழ்வைத்
துளைக்கின்ற
கொடுங்கருவி!
உதிக்கும் குழந்தைக்கும் நோயை
ஊட்டிவிடும்
மாற்றாந் தாய்!
தான்பெற்ற நோய்
பெறுக இவ்வையகம் என்று
புதுக்கவி தீட்டும்
புற்றுப்பாம்பு!
பேச்சிலும் மூச்சிலும்
நோயின் வீச்சை வீசும்
விடத் தீச்சுடர்!
ஒவ்வாத பெண்ணும் ஒப்பாத ஆணும்
தப்பான வாழ்வின்
தடத்தில் உதித்தது!
உலகை மிரட்டும் ஒருதலைப்பாம்பு
வாழ்வுக் கலையை அழிக்கின்ற
கலவியின் ஆயுதம !
மனிதச் சமுதாயம் மண்வழி செல்ல
புண் வழி அமைக்கும்
புணர்ச்சி நாயகன் !
உடலை அடக்கும் கொடு வண்டு
நம்மைச் சுடலை அனுப்பும்
உயிர் விண்டு!
உடலின் திமிரால்
உடுத்திக் கொண்ட
முள்ளாடை!
புடவைச் சுகத்தால்
பூத்திட்ட புதுநோய்!
மனிதகுலம் அழிக்க வந்த
மாயமாரிசன்!
குணப்பண்பைக் கொன்றிடும்
கொடுங்கோல் வேந்தன்!
எமன் உலகத்தின்
இஷ்டமிக்க ஒருதெய்வம்!
கருவை அழிக்கின்ற
காமத்தின் கரிய அரக்கன்!
தீமைத் தீயின் ஆதித் தெய்வம்
ஊழித் தீயின்
உருவழிக்கும் கோட்டம் !
கூடாச் சேர்க்கையின் நாடாப் பகைவன்
குலத்தைக் கொல்லும்
பலத்த விரோதி !
ஊரில் பழுத்து உலகைக் கெடுக்கும்
வேரில் பழுத்த
நச்சுப்பலா !
ஒழுக்கக் கேட்டின் சறுக்கல் பாட்டு
உயிரைப் போக்கும்
எமனின் சீட்டு !
இருக்கும் உயிரை நறுக்கும் கத்தி
பெருகும் நோய்க்குக்
கொடுக்கும் சக்தி !
வில்லெடுத்த ராமனையும்
சொல்லெடுத்த கம்பனையும்
கல்லெடுத்த (அனுமன்) பக்தனையும்
கலங்க வைக்கும்
சக்தி கொண்டது !
தூயமலர்
மனைவிக்கு மட்டும்
நீ
தேன் வண்டாய்ச் சிறகடி போதும்!
உன்னைக் கண்டு
ஒதுங்கும்! ஓடிவிடும்!
ஒழிந்து விடும்!
-முனைவர். மா. தியாகராஜன்,
சிங்கப்பூர்.
|