........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 629

பொய்யென ஓர் போர்!

வீசும் மழை போல் வீசி
அடங்கும் மழை போல் அடங்கி
காணுமிடமெல்லாம் கண்ணீர் தெளித்து
உயிர் கொண்டு போனதடி போர்;
எம் உயிர்கொண்டுப் போனதடிப்போர்!!

கொஞ்சும் மழலை கொன்று
நரை எஞ்சும் பலரை தின்று
பெண்கள் மானம்குடித்து கொலைவெறி தரித்து
தமிழனை அடையாளமின்றி அழிக்க வந்ததடிப் போர்;
அங்கே அழித்துவிட்டேப் போனதடிப் போர்!!

துயிலந்தனை இடித்து
போர்வீரர் பலரை அழித்து
எமை ஊர் ஊராய் அலைகழித்து
போற்குற்றம் புரிந்து விட்டதடிப் போர்;
சூழ்ச்சியோடு சில; நரிகள் செய்திட்ட போர்!

கடல்கோல் குடித்த மிச்சத்தை
பின் - மழைவந்தும் மூழ்காத வீரத்தை
தனித்து வெல்லத் திராணியின்றி - யெம் வீரர்களை
கோழைகள் விஷம் வீசக்; கொன்றுப் போட்டதடிப் போர்;
கொன்று; தலைவிரித்தாடியதந்த போர்!!

எம் காலத்தை பின்னால் தள்ளி
எம் சாபத்தை காலத்திற்கும் சுமந்து
ஒரு இனத்தின் உரத்த அழுகை சப்தத்திற்கிடையே
ஆட்டமாடி பாட்டுப்பாடி வெற்றிக் களிப்பு கொண்டதடிப் போர்;
பேரழிவின் - அரக்கத்தனம் பூண்டதடிப் போர்!

நான் போனாலென்ன
என் பேத்தி யாள்வாள்,

நான் போனாலென்ன
என் மகனேனும் ஆள்வான்,

நான் போனாலென்ன
என் உறவுகளாவது ஆளும்,

நாங்கள் மொத்தம் போனாலென்ன
என் - சந்ததியேனும் வாழும் வாழட்டுமே என்று
உயிர்பல தியாகித்த - என்
வீரர்களின் ரத்தம் பீய்ச்சி,

என் தமிழச்சியின் நிர்வாணத்தை
மரணத்தினால் உரித்து,

என் பிள்ளைகளின் கனவுகளை
உடலோடு எரித்து,

எம் அன்னையவள் -
இறந்துயெரித்த சாம்பலை கூட கொச்சைப்படுத்தி,

உரக்கச் சிரிக்கும் கயவர்களோடு
கூத்தாடிப் போனதடிப் போர்;

பொய்யெனச் சென்று
இன்றும் பின்னால் நின்று -
எமை மறைந்து மறைந்து தாக்குதடி போர்!
தீரா வஞ்சகத்தின் -
பொய்யெனப் போன அந்த போர்!

-வித்யாசாகர்.

 

 

 

 

 

 

 

m

 

வித்யாசாகர் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு