கவிதை: 641
நம் காதலுக்காய்...?

உனைத்தேடி ஓடும் போது
தேங்கிப் போகிறாய் நினைவுகளாய்!
நான் தேங்கிப் போகும்போது
ஓடிக்கொண்டிருக்கிறாய்
கனவுகளாய்!
என் மடிப்பு களைந்த சட்டைகூட
பிடிப்பதில்லை உனக்கு;
எப்படி ஏற்றுக் கொள்வாயோ?
என் படுக்கையில்
கட்டிப்புரண்டு கசங்கிப்போன
புத்தகப் பக்கங்களை!
நான் நிலவை ரசிப்பதில் கூட
உடன்பாடில்லை உனக்கு;
என் நிலாச்சோறு ஆசை
நீ பாஸ்ட் புட் கடை
படியேறும்போது
கலைந்து போகிறது பாதியில்!
செடியில் சிரிக்கும் மலர்களைத்தான்
பிடிக்கும் என் மனதிற்கு;
உன் கூந்தலில் வாடிய
மல்லிகைச் சரத்திற்கு
எப்படிசொல்வேன்
என் வருத்தங்களை!
பின்னிரவின் நட்சத்திரம் வரும்வரை
கதை பேசிவிட்டு
படுக்கைக்கு அழைக்கும்
என் தூக்கம்,
எட்டு மணிக்கேத் தூங்கி வழியும்
உன் இரவின் வெறுமையை
எப்படி சகிக்கும்!
நீ கோலம்போட்டு பாதுகாக்கும்
நோட்டு புத்தகப் பக்கங்களை
நான் கிறுக்கிக் கிழித்துக்
கசக்கி எறியக் கடன்தர
சம்மதமா?
எனக்கு எழுதப் பிடிக்கிறது!
உனக்கு ரசிக்கப் பிடிக்கிறது:
நான் வாசிக்கும் போது
கேட்டுக் கொண்டிருக்கப் பிடிக்குமா?
.................
............
.........
இன்னும் ஏதோதோ முரண்பாடுகள்!
காதலிக்கச் சொல்லிவிட்டு
கட்டுப்பாடுகள் இடுகிறோம்!
இதுதான்
நிபந்தனையற்ற நேசமா?
இவற்றையெல்லாம்
உடன்பாடு செய்திடமாட்டேன்
உனக்காய்!;
சமரசம் செய்துகொள்ள
முயற்சிக்கிறேன்
நம் காதலுக்காய்...!
- தோழன் சபரிநாதன்.
|
|