........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 676

அமைதியாய் வாழ்ந்திட!!

அன்பின் அடையாளத்தை
அறைந்தனர் சிலுவையில்
அறியாமல் செய்கின்றார்
ஆண்டவனே! குழந்தைகள்
அவர்களை மன்னியும்

எத்தனை பெரிய மகத்துவம்
இத்தரைதனில் ஏசு புகட்டினார்
முத்திரை அன்புதான் அறிவீரோ?
சித்திரம் தான் வாழ்க்கை

த‌லையினில் முட்கிரீடம்
கைகளில் ஏற்றிய ஆணி
கால்களும் சிலுவையில்
கண்களில் கனிவு அவர்தம்
வதனத்தில் அமைதி! அமைதி!

அத்தனை மாந்தரின் பாபங்கள்
அனைத்தையும் சிலுவையாய்
அவரே சுமந்திட்டார் அறிவோம்
அவனியில் அன்பே சிவம் எனும்
அரிய தத்துவம் பகன்றிட்டார்

இறைவனின் குழந்தையாய் வந்து
இறந்தது உலகிற்கு பாடம்
உயிர்த்தது மூன்றே நாட்களில்
உலகத்தின் கண்களை திறந்தது
தூக்கத்தில் நடக்கும் மானிடரே
துல்லிய அறிவின் மகிமையால்
தூய தேவபாலகன் கூறிய‌
அன்பை உயிரென போற்றிடுவோம்,

பெரியதோர் வெள்ளியென இன்று
பிரமித்து வியந்திடும் நாளிலே
அன்பிற்காய் உயிரீந்த அண்ணலின்
அடையாளமாய் நாம் வாழுவோம்

எம்மதம் ஆயினும் மதித்திட்டு
அம்மதப் பெருமைகளை அறிந்திட்டு
அனைவரும் தெய்வத்தின் குழந்தைகளென‌
அமைதியுடன் வாழ்ந்திட வழி சமைப்போம்
இது ஒன்றே இப்பெரிய வெள்ளியில்
இறைவனின் மைந்தன் ஏசுவின்
உன்னத நினைவுகளைத் துதித்திட‌
உயர்ந்ததோர் எண்ணம் என்றிடுவோம்.

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 

 

 

 

 

 

 

m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு