........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 678

நான் யார் தெரியுமா?

முத்தமிழில் அறிஞனில்லை
முழுமைப்பெற்ற கவிஞனில்லை
மூலையிலே முடங்கிவிட - நான்
மூடர்களின் தலைவனில்லை!!!

நீரிருந்தால் யாவரும்
நிறைவுடனே வாழலாம்
நீரில்லாமல் போயினும் - நான்
நிலைத்துநிற்கும் தாவரம்!!!

சொர்க்கமின்றிப் போயினும்
சோகமின்றி வாழுவேன்
கற்குகையில் சிக்கினும் - நான்
கண்டிடுவேன் சொர்க்கமே!!!

நேர்நிறை சீர் தெரியாது
நிறைகுடம் நான் கிடையாது
காரிருளில் கதிர்தேடும்
மூடனும் நான் கிடையாது!!!

இலக்கணங்கள் கற்றதில்லை
இலக்கியங்கள் கற்றதில்லை
இருந்தபோதும் இன்றுநானும்
இளமைத்தமிழ் பெற்ற பிள்ளை!!!

கற்சிலையைக் கடவுளெனும்
அற்பர்களை வெறுக்கிறேன்
கற்சிலையை கடவுளாக்கும்
சிற்பக்கலையை மதிக்கிறேன்!!!

சட்டங்களைச் சீர்குலைக்கும்
திட்டங்களை வெறுக்கிறேன் - சிறு
வட்டத்துக்குள் வாழ எண்ணும்
வாலிபத்தை மிதிக்கிறேன்!!!

கொள்கைகொண்ட நெஞ்சங்களை
கோயிலாக மதிக்கிறேன்
கொள்கையற்ற மனிதன்மீது-நான்
கோபப்பார்வை பதிக்கிறேன்!!!

காசின்கடவுள் எந்தன்கீழே
காத்துக்கிடப்பான் நாளை - நான்
எழைகளற்ற இனியதோருலகை
எழும்பச்செய்யும் வேளை

வறுமையென்ற பேயைக்கொல்ல
ஆயுதம் செய்யும் ஆலை - நான்
திறமைகொண்ட தூயவருக்கு
சூட்டுவேன் வெற்றிமாலை!!!

உலகின்தலைவன் பதவிக்கூட
எனக்குமிகவும் சிறிது
உணவும்வேண்டாம் உறவும்வேண்டாம் - என்
உணர்வுகளுலகில் பெரிது!!!

கடலும்மலையும் பாலைவனமும்
எந்தன் பிறப்பிடமாகும்
களங்கமில்லாக் காளையர் உள்ளம்
எந்தன் இருப்பிடமாகும்

கல்லும்முள்ளும் நிறைந்திடும் சாலை
எந்தன் வழித்தடமாகும்
எந்தன்வாழ்க்கை என்றோ ஒருநாள்
முரட்டு சரித்திரமாகும்

இவ்வாறெல்லாம் எந்தனுள்ளம்
இடைவிடாது முழக்கும் - நான்
அப்போதெல்லாம் கவிதையெழுதிக்
கட்டுப்படுத்துதல் வழக்கம்!!!

நிச்சயமாக நாளையோர்நாள்
விண்மீனாவேன் நானும்
அப்போதெந்தன் அருகினிலிருக்கும் - நான்
அடைந்திடஎண்ணும் வானும்!!!

-ஆனந்தன்.

 

 

 

 

 

 

 

m

 

ஆனந்தன் அவர்களின் இதர படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு