........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 688

தமிழே! எந்தன் உயிரே!!!

முன்னோர்கள் உரைத்த தமிழ்
இன்னோர்க்கு உரைக்கவில்லை
இன்னோர்கள் உரைக்கும் தமிழ் - நம்
பின்னோர்க்கு உரைத்திடும்?

இந்நிலையே நீடிப்பின் - நாளை
தமிழின் நிலையென்ன?
கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே முன்தோன்றிய - நம்
தாய்மொழியின் எதிர்காலம் யாது?

நினைத்துப் பார்த்திடவும்
நெஞ்சம் வலிக்கிறது - தமிழ்
இனி மெல்லச்சாகுமென்ற
கவிஞனின் வாக்கு பலிக்கிறது...

தமிழ்மொழியை மறந்துவிட்ட
மதிகெட்ட மானிடர்க்கு
தமிழ்வாழும் நல்லுலகில்
இனிமேலும் இடமெதற்கு?

உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
உயிமெய்யும் ஆயுதமும் - நம்
உதட்டோடு உறவாடும்
உணர்வன்றோ சொர்க்கம்...
இன்னபிற மொழியெல்லாம் - நம்
தமிழின்முன் அற்பம்...

கடைந்தெடுத்த அமிர்தம் போல் - காதல்
கவிதைகளுண்டு...
உடைந்துவிட்ட அணையைப்போல் - உணர்ச்சிக்
காவியமுண்டு...
அடைந்திருக்கும் குகைக்கூட
தமிழ்க்கவியால் திறக்கும் - வானைக்
குடைந்து நாளை தமிழ்க்கொடிதான்
விண்ணுயரப் பறக்கும்...

செவ்வாய் கிரகத்தில்
மனிதன் குடியேறினாலும் - யாரும்
செல்லாக் கிரகங்கள்
இன்னும் பல தோன்றினாலும்

பாதாள உலகம் செல்ல
படிகள் பல கண்டாலும் - எங்கும்
பூபாளம் இசைக்கும் வரம்
பெற்றதோர் மொழியொன்றே - அது
நாடாளும் திறன்கொண்ட
நம்தமிழின் புகழன்றோ!

தமிழ்நாட்டில் பிறந்து விட்டால்
தமிழரினியில்லை
தரணிபோற்ற தாய்மொழியை - தழைக்கச்
செய்பவன் தமிழ்பிள்ளை!

தாய்மொழியை மதிக்காத
தரங்கெட்ட மனிதரெல்லாம் - பெற்ற
தாய்விழியைக் குருடாக்கும்
வித்தையிலே வித்தகராம்...

வள்ளுவரைத் தெரியவில்லை
பாரதி யார் புரியவில்லை
சொல்லுதமிழ் தவிர யார்க்கும் - இலக்கணம்
உள்ளதமிழ் உரைக்கவில்லை...

பள்ளியிலே தொடங்கிடுதே - இந்த
பாதகக் கொடுமையெல்லாம்
தமிழிலேப் பேசிவிட்டால் - உடனே
தண்டனை கிடைத்திடுமாம்!

வேரிலே வெந்நீர் ஊற்றி
கிளையிலேக் கனிகள்தேடும்
நிலையிலே நாமிருந்தால் - இந்த
வேதனை தானே மிஞ்சும் - எங்கள்
வேரிலே வெந்நீர் ஊற்றும்
வீணரே! வெறிநாய் இனமே! - உங்கள்
வேலையை நிறுத்திடுங்கள் - இல்லையேல்
வேதனை உமக்கு மிஞ்சும்!!!

எழுத்திலே எதிர்ப்பதெல்லாம்
இன்னும்சில நாளைக்குதான்- உங்கள்
கழுத்திலே மிதிப்பதற்குள்
காணாமல் போய்விடுங்கள்!

-ஆனந்தன்.

 

 

 

 

 

 

 

m

 

ஆனந்தன் அவர்களின் இதர படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு