........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
குறுந்தகவல்-86 சுவையான சம்பவங்கள்
அன்பின் பலம் ஒரு சமயம் புத்தரும், அவரது சீடர்களும் காட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த ஒரு திருடன், அவர்கள் வைத்திருந்த ஒரு கிண்ணத்தை திருடிச் சென்று விட்டான். தூக்கம் கலைந்த புத்தர் நடந்ததை அறிந்தார். தன் சீடர்களை எழுப்பினார். "அவன் எடுத்துச்சென்ற கிண்ணம் ஓட்டையானது. பாவம்! இந்த நல்ல கிண்ணத்தை கொடுத்துவிட்டு வா!" என்று ஒரு சீடனிடம் கூறி, அந்த கிண்ணத்தைக் கொடுத்தார். அந்த சீடனும், திருடனை ஒருவழியாக தேடிப்பிடித்து அதை ஒப்படைத்தான். இதை எதிர்பார்க்காத அந்த திருடன் மனம் திருந்தி புத்தரின் சீடனாகவே மாறிவிட்டான். இதுதான் அன்பின் பலம். நம்பிக்கையின் வார்த்தைகள் ஒருமுறை சுவாமி விவேகானந்தர் இமயமலையில் நீண்ட மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மலைச்சரிவில், மேற்கொண்டு ஏற முடியாமல் களைத்துப் போய் அமர்ந்திருந்தான் இளைஞன் ஒருவன். அவனைப் பார்த்ததும் அங்கே சென்றார் விவேகானந்தர். "நான் மிகவும் சோர்ந்த போய் விட்டேன். இந்தப் பாதையை இனி எப்படி கடக்கப் போகிறேன்? இனிமேல் என்னால் நடக்க இயலாது. என் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது" என்று அவரிடம் புலம்பினான் அந்த இளைஞன். அதற்கு விவேகானந்தர், "இளைஞனே! சற்று கீழே பார். காலுக்கு கீழே நீண்டு தெரிகின்ற அந்த பாதை முழுவதும் உன்னால் கடக்கப்பட்டதுதான். இன்னும் கொஞ்சம் நடந்தால் போதும். முன்னால் தெரிகின்ற பாதையும் விரைவில் உன் காலுக்கு கீழே வந்துவிடும்" என்றார். அவரது நம்பிக்கையளிக்கின்ற இந்த வார்த்தைகளைக் கேட்டதும், சோர்ந்து போய் இருந்த இளைஞன் துள்ளியெழுந்தான். நடக்க ஆரம்பித்தான். மலையின் உச்சியை அடைந்தான். உருக வைத்த திருவாசகம் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜி.யு.போப். தமிழ்நாட்டுக்கு வந்த இவர் தமிழ் மொழியால் கவரப்பட்டார். தமிழை கற்றுத் தேர்ந்தார். தமிழ் மொழியில் இருந்த திருவள்ளுவரின் திருக்குறளையும், மாணிக்கவாசகரின் திருவாசகத்தையும் கற்றார். கற்றதோடு நின்று விடவில்லை; அவற்றை, அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் செய்தார். மதுரை வைத்தியநாத அய்யர் என்பவர்தான் ஜி.யு.போப்புக்கு குருவாக இருந்தார். இவர் தான் ஜி.யு.போப்புக்கு தமிழை கற்றுக்கொடுத்தார். தமிழ்நாட்டுக்கு வந்த பணி முடிந்ததும் தாய் நாட்டிற்கு திரும்பினார் ஜி.யு.போப். தாய் நாட்டுக்குச் சென்றாலும் அங்கிருந்தபடியே தனது குருவுடன் கடிதத் தொடர்பை தொடர்ந்தார். ஒரு முறை அவர் வைத்தியநாத அய்யருக்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில் ஆங்காங்கே தண்ணீர் துளிகள் சிதறி எழுத்துக்களை கலைத்திருந்தன. அந்தக் கடிதத்தில், திருவாசகத்தின் மீது தனக்கு இருந்த ஈடுபாட்டை உள்ளம் நெகிழ குறிப்பிட்டு இருந்தார். கடிதத்தின் முடிவில், இக்கடிதத்தின் சில இடங்கள் நீர்க்கோலமிட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். அது வேறு ஒன்றுமில்லை. என் கண்ணீர் துளிகள் தான். திருவாசகத்தை நினைத்தாலே என் உள்ளம் கசிந்து உருகுகிறது. என்னால் இந்த நெகிழ்ச்சியை தவிர்க்க முடியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்... என்று எழுதி இருந்தார் ஜி.யு.போப். திருவாசகத்திற்கு உருகாதவர் வேறு எந்த வாசகத்திற்கும் உருக மாட்டார் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த உதாரணம். -நெல்லை விவேகநந்தா.
|
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.