........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-14          

 இன்னொரு ஜென்மம் இருந்தால்...?

                                                                                                -கனிஷ்கா, தென்காசி.

நாளைய விடியல் நமக்குண்டா? என்பது தெரியாத மனிதனின் மனதில் மட்டும் பல நூறு வருடங்கள் வாழப்போகும் கனவுகள். கையளவு இதயத்தில் கடலளவு ஆசைகள். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலங்களில் மனிதனின் வாழ்க்கையில் எத்தனை நிகழ்வுகள்! இந்த மனிதர்களிடம்தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள்! இறைவன் வகுத்த பாதையை மாற்றி தனக்கென புதுப் பாதையை வகுத்துக் கொண்டான்.

ஒரு மனிதன் எந்த சாதியைச் சேர்ந்தவனாக, எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், குடிசை வீட்டுக் கோவிந்தனாகவோ, கோடீஸ்வரன் என்ற கொம்பனாகவோ இருந்தாலும் அவன் தனது தாயின் கருவறையில் இருந்து மண்ணில் விழும்போது குழந்தை பிறந்திருக்கிறது என்றுதான் சொல்வோம். ஒரு பார்ப்பனன் பிறந்திருக்கிறான். ஒரு இஸ்லாமியன் பிறந்திருக்கிறான் ஒரு கிறிஸ்தவன் பிறந்திருக்கிறான் ஒரு தலித் பிறந்திருக்கிறான். இல்லை ஒரு கோடீஸ்வரன் பிறந்திருக்கிறான் என்று யாரும் சொல்வதில்லை.

ஆம். முதலில் மனிதனுக்குக் கடவுள் வைத்த பெயர் குழந்தை இந்தக் குழந்தை வளரும்போது பெற்றோரால் பெயரிடப்பட்டு பின்பு அதற்கு சாதிப் பெயரைச் சொல்லி சமூகத்தில் அடையாளம் காட்டப்படுகிறது. சாதி, மதம், பொருளாதாரம் இவற்றால் மனிதர்களே மனிதர்களை வேற்றுமைப் படுத்துகிறார்கள். ஆனால் விதியின் மீது பழியையும் இறைவன் மீது பொறுப்பையும் சுமத்துகிறார்கள்.

இந்த உலகமே தனக்குச் சொந்தமாகி விடாதா? என்ற மண்ணாசை கொண்ட மனிதன் விண்ணிலும் பட்டா போட பத்திரத்தோடு படையெடுக்க ஆரம்பித்த விட்டான். (செவ்வாயில் நிலம் விற்கப் போவதாகச் சொல்கிறார்கள். முந்துபவர்களுக்கு நிலாவுக்குச் சென்றுவர இலவச பயணச் சீட்டுக் கிடைக்கலாம். பதிவு செயயுங்கள்.)

இப்படி ஆடாத ஆட்டமெல்லாம் போட்டுவிட்டு பிறரையும் ஆடவைத்து விட்டு இறுதியில் ஆறடி குழிக்குள் அதாவது பூமித்தாயின் கருவறையில் விழும்போது அவனை பிணம் என்றோ சவம் என்றோதான் சொல்கிறோம்.

ஆக ஒரு மனிதனுக்கு பிறக்கும்போது குழந்தை என்றும் வாழும்போது மனிதன் என்றும் இறந்தபின் பிணம் என்றும் சொல்லப்படும் மூன்று நிலைகளை இறைவன் நிர்ணயித்துள்ளான். ஆனால் இவன் மனிதன் என்ற நிலையில் நிர்ணயித்துக் கொண்ட வேறுபாடுகள் பாகுபாடுகள் எத்தனை? எத்தனை?

இன்றைய காலகட்டத்தில் பொதுவாக நல்லவர்கள் சோதிக்கப் (பாதிக்கப்) படுவதையும் தீயன செய்பவர்கள் நல்ல விதமாக வாழ்வதையும் நாம் கண்கூடாகக் காண முடிகிறது. இதையெல்லாம் பார்க்கும் பொழுது நல்லதுக்கே காலமில்லை என்று பொதுவாகச் சொல்வதுண்டு. இல்லை ரஜினி டயலாக்கை நினைவு படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

இப்படி அயோக்கியத்தனம் செய்பவர்களெல்லாம் அடுத்த ஜென்மத்தில் அனுபவிப்பார்கள். என்ற சபித்தல்களை அன்றாடம் ஆங்காங்கே கேட்கலாம். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்குக் கணவனாக வரவேண்டும். (இங்கே கணவனின் மனநிலை எப்படி இருக்கும்? என்று அவரவர் அனுபவத்தைப் பொறுத்தது)

இதுபோன்ற வேண்டுதல்களை உறவுகளிடையே கூட நாம் கேட்க முடியும். நமது கடந்த கால, நிகழ்கால நினைவுகளை சற்று அசைபோட்டுப் பார்த்தால் நம் அனைவரது நெஞ்சிலும் யாராவது ஒருத்தர் நிலைத்திருப்பார்கள். அவர்கள் அடுத்த ஜென்மத்தில் ஒரு சகோதரனாக, சகோதரியாக, நண்பனாக, தாயாக, தந்தையாக நமக்கு அமைய வேண்டும் என்ற எண்ணம் நம்மை அறியாமலேயே கூட நம் மனதில் எழக்கூடும்.

அதே போல் நாம் யாரையாவது எதிர்பாராமல் சந்தித்து அவருடன் அதிக நட்பு கொள்வது, எதிர்பாராத உறவுகள் இவையெல்லாம் நிகழும்போதுகூட இது முன் ஜென்மத்து உறவு என்று சொல்கிறோம்...  ஆனால் முன் ஜென்மம் அடுத்த ஜென்மம் இவையெல்லாம் நிஜமா?

நிஜம்தான். அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? இன்னும் படியுங்கள். உங்களுக்கும் அந்த நம்பிக்கை வரலாம்.

இன்னொரு ஜென்மம் இல்லையென்றால் வெண்மேகமாக, விடிவெள்ளியாக என்றெல்லாம் வானத்தில் பிறக்கப் போவதாகப் பாட வேண்டாம். கண்டிப்பாக மறு ஜென்மம் எடுத்து மனதிற்குப் பிடித்தவர்களைச் சந்திக்கலாம்.

ஆனால் இந்த மறு ஜென்மப் பிறவி நமது முன் ஜென்ம வாழ்வின் பலன் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இறைவன் வகுத்த வழியில் மனிதன் என்ற நிலை தவறாது வாழ்ந்தால் நமக்கும் அடுத்த ஜென்மம் நற்பிறவியாக அமையும். இல்லையென்றால் முன் ஜென்மத்தில் அவரவர் விதைத்த விதையை அடுத்த ஜென்மத்தில் அறுவடை செய்ய நேரிடும்.

அப்பொழுதுதான் தெரியும் நமது வாழ்க்கை வரம் பெற்றதா? இல்லை சாபம் பெற்றதா? என்பது. இந்த மறு ஜென்மம் என்பது நமக்கு இந்த யுகத்திலும் கிடைக்கலாம் அல்லது அடுத்த யுகத்திலும் கிடைக்கலாம்.

இந்த யுகங்கள் என்புது ஒன்றா? இரண்டா? யுகங்கள் மொத்தம் நான்கு. அவை

1. கிரேதயுகம் (34,56,000 வருடங்கள்)
2. திரேதயுகம் (17,28,000 வருடங்கள்)
3. துவாபரயுகம் (8,64,000 வருடங்கள்)
4. கலியுகம் (4,32,000 வருடங்கள்)
இந்த நான்கு யுகங்கள் கொண்டது ஒரு மகாயுகம்.
71 மகாயுகம் கொண்டது ஒரு மனு.
14 மனு கொண்டது ஒரு கற்பம்.

ஒரு கற்பம் என்பது 429,40,80,000 ஆண்டுகள். இந்தக் கணக்குப்படி உலகம் தோன்றி 644,71,73,000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

இப்படி முப்பது கற்பங்கள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. முதலாவது கற்பமான வாமதேவ கற்பம் முடிந்து இரண்டாவது கற்பமான சுவதேவராக கற்பம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதிலும் மூன்று யுகங்கள் முடிந்து நாலாவது யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.

8 யுகங்கள் சேர்ந்த நாட்கள் பிரம்மாவுக்கு ஒரு நாள்
பிரம்மாவின் ஆயுள் 100 ஆண்டுகள் (2,92,000 யுகங்கள்)
விஷ்ணு - 5,84,000 யுகங்கள்

உலகம் ஒருபோதும் முழுமையாக அழிந்து போவதில்லை. ஒவ்வொரு யுகம் முடியும் போதும் அவை மீண்டும் மறு சுழற்சி முறையில் புதுப்பிக்கப் படுகிறது. மீண்டும் கற்காலம், பொற்காலம், கணினிகாலம் என்று காலச்சக்கரம் சுழல ஆரம்பிக்கிறது.

ஒரு யுகத்தில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மறு யுகத்திலும் நடக்கும் என்று சொல்லப் படுகிறது. நாஸ்டர்டாம் போல் அடுத்த நூற்றாண்டில் என்ன நடக்கும்? என்று சொல்லும் ஆரூட வல்லுநர்களுக்கு தனது முந்தைய ஜென்மத்தில் நடந்த நிகழ்ச்சிகளை அவர்களது உறங்கிக் கிடக்கும் மூளையின் மறுபகுதி விழித்தெழுந்து படம் போட்டுக் காட்டி விடுகிறதாம்.

இந்த ஜென்மத்தில் நடந்த நிகழ்வுகளை நாமும் நன்கு நினைவு வைத்துக் கொள்வோம். ஒருவேளை அடுத்த யுகத்தில் நமக்கு மறுபிறவி ஏற்பட்டால் ஆருடம் சொல்லப் பயன்படும். (மனிதனாகப் பிறந்தால் மட்டும்.)

முப்பது கற்ப காலங்கள்

1.வாமதேவ கற்பம்
2.சுவதேவராக கற்பம்
3.நீல லோகித கற்பம்
4.ரந்தர கற்பம்
5.ரௌரவ கற்பம்
6.தேவ கற்பம்
7.விரக கிருஷ்ண கற்பம்
8.கந்தற்ப கற்பம்
9.சத்திய கற்பம்
10.ஈசான கற்பம்
11.தமம் கற்பம்
12.சாரஸ்வத கற்பம்
13.உதான கற்பம்
14.காருட கற்பம்
15.கௌரம கற்பம்
16 நரசிம்ம கற்பம்
17 சமான கற்பம்
18 ஆக்நேய கற்பம்
19 சோம கற்பம்
20. மானவ கற்பம்
21.தத்புருஷ கற்பம்
22. வைகுண்ட கற்பம்
23. லெச்சுமி கற்பம்
24. சாவித்திரி கற்பம்
25. கோரம் கற்பம்
26. வராக கற்பம்
27. வைராஜ கற்பம்
28. கௌரி கற்பம்
29. மகோத்வர கற்பம்
30 பிதிர் கற்பம்

நமக்கு இன்னொரு ஜென்மம் இருக்கிறது. அப்பொழுதும் நாம் பிறந்து அனைவரிடமும் அன்போடு இருப்போம்.

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.