........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
மனம் திறந்து-15 தமிழ் வளர்ச்சித் துறையாவது முன் வருமா?
-சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
இன்று உலக அளவில் இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழ்
வலைப்பதிவுகள் இணைய இதழ்களாகவும், வலைப்பூக்களாகவும் ஒவ்வொரு நாளும்
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த இணைய இதழ்களும், வலைப்பூக்களும்
வணிக நோக்கமின்றி, தமிழ்
மொழிமேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாகவும், அதன் வளர்ச்சியில்
கொண்ட அக்கறையின்
காரணமாகவும்
எந்தவிதமான எதிர்பார்ப்புகளுமில்லாமல்
இயங்கிக் கொண்டிருக்கின்றன.
அச்சு இதழ்கள் குறிப்பிட்ட சிலரை மட்டும்
முன்னிலைப்படுத்தி வரும் நிலையில், இணைய இதழ்கள் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின்
முகம் தெரியாமலேயே
அவர்களின் கருத்துக்களையும், படைப்புகளையும் முன்னிலைப்படுத்தி வருகின்றன. இதன்
மூலம்
அச்சு இதழ்களில் வரும் படைப்புகளை விட இணைய இதழில் வெளியாகும் படைப்புகள் உலகம்
முழுவதும் உள்ள தமிழர்களின் வாழ்வியல் நிலைகளையும், அவர்களது பண்பாடுகளையும்
வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
இந்த தமிழ் இணைய இதழ்களும், வலைப்பூக்களும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து
உருவாக்கப்பட்டு இணையத்தில் ஏராளமாகக் காணக் கிடக்கின்றன. தமிழ் மொழியில்
வெளியிடப்படும் வலைப்பதிவுகளை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான
தமிழர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்கு தமிழ் வலைப்பதிவுகள்
நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே நாம்
உதாரணமாகக் கொள்ளலாம்.
இந்த தமிழ் இணைய இதழ்களுக்கு வணிக வழியிலான விளம்பரங்கள் வழங்க
எந்த நிறுவனமும் அமைப்புகளும் முன் வருவதில்லை. ஆங்கில இணைய தளங்களில் விளம்பரம் தரும் இங்குள்ள பல நிறுவனங்கள்
தமிழ் இணைய தளங்களுக்கு விளம்பரக் கட்டணம் குறைவாக இருந்தாலும் கூட விளம்பரம்
தருவதில்லை.
தமிழ் மொழியைக் காட்டிலும் குறைவான பயன்பாட்டிலுள்ள சில மொழிகளுக்குக்
கிடைத்திருக்கும் அங்கீகாரம் கூட தமிழுக்கு இல்லை என்பதை கூக்ளி நிறுவனத்தின்
ஆட்சென்ஸ் (Google Adsense) மூலம் விளம்பரம்
கொடுக்கப்படாததை இங்கே சுட்டிக்காட்டலாம். இந்நிறுவனம் சீனா, குரோசியன், செக்,
டானிஷ், டட்ச், ஆங்கிலம், பின்னிஷ், பிரெஞ்ச்,
ஜெர்மன், கிரீக், ஹெப்ரூ, ஹங்கேரியன், இத்தாலி, ஜப்பானிஷ், கொரியன், நார்வே,
போலிஷ், போர்ச்சுகீஷ், ரோமானியா, ரஷ்யா, சுலோவக், ஸ்பானிஷ், சுவேதிஷ், துர்கிஷ்
போன்ற மொழிகளுக்கு மட்டும் விளம்பரங்கள் வழங்குகின்றன.
தமிழுக்காகப் போராடும் அமைப்புகளும் சரி, தமிழ் வளர்ச்சிக்காகப்
பாடுபடுபவர்களும் சரி இந்நிறுவனத்திடம் இது குறித்து கருத்து கேட்டதாகக் கூடத்
தெரியவில்லை. தமிழ் இணைய இதழ்கள் நடத்துபவர்களும் இதைக் கண்டு கொள்ளவேயில்லை.
வணிக நோக்கமில்லாமல் இருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் கையிலிருக்கும்
பணத்தைச் செலவழித்து எவ்வளவு காலம் இந்த இணைய இதழ்களை நடத்திச் செல்வார்கள்? காலப்போக்கில் வெறுப்பு
ஏற்பட்டு இடையில் நிறுத்தி விட மாட்டார்களா?
விளம்பரம் எனும் வணிக வாய்ப்பை விட்டுத் தள்ளுங்கள். இந்த தமிழ் இணைய
இதழ்களுக்கு ஏதாவது சிறப்பு விருது, சிறப்புப் பரிசு என்று உலகிலுள்ள எந்தவொரு
தமிழ் வளர்ச்சி அமைப்போ, தமிழ் ஆர்வலர்களோ வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்களா?
என்றால் அதுவும் இல்லை. எந்தவொரு பயனுமில்லாமல் இந்த இணைய இதழ்கள், வலைப்பூக்கள்
நடத்திக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு என்ன பயன்?
சமீபத்தில் தமிழில்
சிறந்த மென்பொருளை உருவாக்கியவரை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, "கணியன்
பூங்குன்றனார்" பெயரில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழக
அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு மகிழ்ச்சிக்குரியதாக
இருக்கிறது. இத்துடன் தமிழ் வளர்ச்சியில் உண்மையாகவே ஆர்வம் காட்டி
வரும் இந்த இணைய இதழ்கள், வலைப்பூக்கள் போன்றவற்றில் சிறப்பானவைகளைத் தேர்வு
செய்து பாராட்டி பரிசுகள் வழங்கா விட்டாலும் பாராட்டுச் சான்றிதழ்களாவது வழங்கி
சிறப்பிக்கலாமே...?
இந்த பாராட்டுச் சான்றிதழ்கள் அவர்களுக்கு ஊக்கமளிக்கும்
என்பதுடன் அவர்களிடையே ஒரு ஆரோக்கியமான போட்டியையும் ஏற்படுத்தும். கூடுதலாக
தமிழ் வளர்ச்சிக்குத் தகுந்த படைப்புகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால்
உருவாக்கும் வாய்ப்பும் வரும். இதைச் செயல்படுத்த தமிழக அரசின் தமிழ்
வளர்ச்சித்துறையாவது முன் வருமா?
____________
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.