........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-21

மீதமாகும் சாப்பாட்டை வீணாக்கலாமா?

                                                                                                  -மணிகண்டன், லண்டன்.

நான் தற்பொழுது லண்டனில் பணி புரிந்து கொண்டு இருக்கிறேன்.

தினமும் மதிய உணவை வீட்டில் இருந்து கொண்டு வந்து அலுவலகத்தில் இருக்கும் உணவு கூடத்தில் உண்பது வழக்கம். சில நேரம் நான் சில உணவுகளை விலை கொடுத்து வாங்கி உண்பதும் உண்டு.

தினமும் மதியம் இரண்டு மணிக்குத் தான் நான் உணவு உண்ணச் செல்வது வழக்கம். இந்த நேரத்தில் பலரும் உணவு கூடத்தில் உள்ள மிஞ்சிய உணவுகளைக் குப்பையில் கொட்டுவார்கள். இதைப் பார்க்கும் எனக்குக் கோபம் அதிகமாக வரும். பல முறை நான் அவர்களிடம் ஏன் இவ்வாறு செய்கிறிர்கள் என்று சண்டை போட்டதும் உண்டு.

பல நாடுகளில் பசி, போர், பஞ்சம், இயற்கை சீற்றம் போன்ற பல காரணங்களால் உணவுத் தட்டுப்பாடு உண்டாகி பலருக்கும் ஒரு வேளை உணவு கிடைப்பதே பகல் கனவாகி இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் இருப்பவர்கள் இப்படி உணவை வீணாக்குவது கண்டு என் மனம் பல முறை வேதனைப்பட்டு இருக்கிறது.

இது நான் பணியாற்றும் இந்த இடத்தில் மட்டுமில்லை. உலகம் முழுவதும் உள்ள பல உணவு கூடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான உணவு உடலுக்கு நல்லது தான். அதே நேரம் நமக்குத் தேவையான உணவை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அளவை மட்டும்  நாம் உண்ணலாம். அளவுக்கு அதிகமாகக் கொண்டு சென்று அதை வீணாகக் குப்பைக் கூடைகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டிலிருப்பவர்கள் எந்த உணவை எந்த அளவில் எடுத்துக் கொள்வார்கள் என்பதை அனுமானித்து அந்த  விகிதத்தில் உணவைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர்த்து அளவிற்கு அதிகமாகச் சமைத்து மீதமாக்கி உணவை வீணாக்குவதை நிறுத்த வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் உணவு மீதமாகும் போது மிஞ்சிய உணவுகளை பிற உயிர் இனங்களுக்குக் கொடுக்கலாம்.

அந்தக் காலத்தில் மண்தரையாக இருக்கும் வீடுகளில் உணவுத்தட்டில் இருந்து சிதறிய சோற்றுப் பருக்கைகள் மண்ணாகி விடும் போது அந்த சோற்றுப் பருக்கைகளைக் கூட அந்தக்காலப் பெரியவர்கள் வீணாக்க விரும்புவதில்லை.  கீழே விழுந்த சோற்றுப் பருக்கைகளை அதற்காக வைத்திருக்கும் முள்ளைக் கொண்டு குத்தி நீரில் கழுவி அதையும் உண்டு விடுவார்கள் என்று எங்கள் வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

உணவை வீண் செய்யாத அந்தப் பெரியவர்களை இன்றைய நிலையில் மீதமாகும் உணவை வெறும் குப்பை பையில் கொட்டும் இளம் வயதினருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மனதிற்குள் ஏதோ ஒன்று அழுத்துகிறது. அது மிகவும் வேதனை அளிக்கிறது.

முடிந்தவரை உணவை தூக்கி எரியாமல் உண்ணப் பழகுங்கள்... உலகிற்கு நாம் செய்யும் மிக பெரிய நன்மைகளுள் இதுவும் ஒன்றாக இருக்கட்டும்.

  மணிகண்டன் அவர்களது மற்ற படைப்புகள

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.