........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-20

அட நமக்குத் தெரியாமப் போச்சே...

                                                                                                  -தாமரைச்செல்வி.

"அட நமக்குத் தெரியாமப் போச்சே..." என்று பலரும் சில நேரங்களில் வருத்தப்பட்டுக் கொள்கிறார்கள். உண்மையில் இந்த வருத்தத்தில் நியாயம் இருக்கிறதா?

சோம்பலாயிருக்கும் பலர் தான் இந்த வாசகத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். தன்னிடம் ஏதாவது வேலையைக் கொடுத்து அதை நாம் செய்ய வேண்டியதாகி விடுமோ என்கிற எண்ணத்தில் சோம்பலுடையவர்கள், முதலில் எந்த விதமான தகவல்களையும் தெரிந்து கொள்ள முன் வருவதில்லை. பின்னால் "அட நமக்குத் தெரியாமப் போச்சே..." என்று சொல்லி தங்கள் சோம்பலை மறைத்து வருத்தப்பட்டுக் கொள்கிறார்கள்.

தன்னைப் பற்றி தானாகவே உயர்வாக நினைத்துத் தற்பெருமை கொள்ளும் சிலர் தனக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணத்தில் எந்த தகவல்களையும் முழுமையாகக் காதில் வாங்கிக் கொள்ளாமல் எனக்கு அதைப் பற்றித் தெரியும் என்று சொல்லிக் கொண்டு மேலோட்டமாக இருந்து விடுகிறார்கள். பின்பு தனக்கு அது கிடைக்காமல் போகும் போது தங்கள் நிலையை மறைத்து "அட நமக்குத் தெரியாமப் போச்சே..." என்று சொல்லித் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்கிறார்கள்.

சிலர்,
தனக்கு முதலிலேயே விஷயம் தெரிந்திருந்த போதிலும் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு பின்னால் அந்த விஷயம் முதன்மை பெற்றதாகத் தெரிய வரும்போது "அட நமக்குத் தெரியாமப் போச்சே..." என்று சொல்லி தனக்கு அதைப் பற்றியே தெரியாதது போல் நடித்துக் கொண்டு தன்னை நல்லவர் போல் அந்த இடத்தில் காண்பித்துக் கொண்டு இந்த வாசகத்தைச் சொல்லி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

தன்னால் அந்த வேலையை முடிக்க முடியாது என்று எண்ணும் சிலர் அந்த வேலையை உதறிவிட்டு விடுகிறார்கள். அந்த வேலை முடிந்த பிறகு "அட நமக்குத் தெரியாமப் போச்சே... எனக்குத் தெரிந்திருந்தால் நான் முன்கூட்டியே முடித்திருப்பேன்" என்று தன்னுடைய இயலாமையை மறைத்து தன்னை உயர்வாகக் காட்டிக் கொள்வதும் உண்டு.

ஆனால் உண்மையிலேயே சிலர் விபரம் கிடைக்கப் பெறாமல் இருந்து பின்பு தெரிய வரும் போது "அட நமக்குத் தெரியாமப் போச்சே..." என்று வருத்தப்படும் நிலையும் வந்து விடுவது உண்டு.

எது எப்படியோ "அட நமக்குத் தெரியாமப் போச்சே..." என்று நாம் வருத்தப்படுவதை விட எந்த விஷயத்தையும் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் புதுப் புதுத் தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும். புதியவைகளைக் கற்றுக்கொள்ள முடியும்.

புதுப்புதுத் தகவல்கள் நமக்கு நிறைய விபரங்களை அள்ளித் தருகிறது. நிறைய நண்பர்களைத் தேடித் தருகிறது. இதனால் நம்முடைய திறமைகளை வெளிப்படுத்த முடிகிறது. நம்முடைய திறமைக்கேற்ற மதிப்பும் பலனும் கிடைக்கிறது. நம்முடைய மதிப்பு உயரும் போது நம்மையறியாமலே நாமும் உயர்த்தப்படுகிறோம்.

இந்த விபரம் தெரியாமல் "அட நமக்குத் தெரியாமப் போச்சே..." என்று புலம்பிக் கொண்டிருக்காமல் புதுப்புது விஷயங்களை நாம் தேடிப்போக வேண்டும்.

"அட நமக்குத் தெரியாமப் போச்சே..." என்று நினைப்பதே முட்டாள்தனம்.

"அட நாம் தெரிந்து கொள்ளாமல் போய் விட்டோமே..." என்று நினைப்பதும் செயல்படுவதும்தான் புத்திசாலித்தனம்.

 

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.