........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-19

எல்லாம் அவன் பார்த்துக்குவான்!

                                                                                                  -தாமரைச்செல்வி.

என் குழந்தையை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப பள்ளிப் பேருந்து நிற்கும் முக்கியச் சாலைக்குச் சென்ற பொழுது என் காதில் வந்து விழுந்தது அந்த வாசகம்.

எல்லாம் அவன் பார்த்துக்குவான்.

அங்கே, தனக்கு மட்டும் தொடர்ந்து கஷ்டங்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தனக்கு மட்டும் ஏன் இப்படி வருகிறது? என்றும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த ஒருவருக்கு அவருடன் இருந்த நண்பர்,  "கவலைப்படாதே, இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும். எல்லாம் அவன் பார்த்துக்குவான்..." என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் சொன்ன அந்த வாசகம் அவருக்கு நம்பிக்கையைத் தந்திருக்க வேண்டும்.

"நானும் அவனைத்தான் நம்பியிருக்கேன்..." என்று சொன்ன அவர் முகத்திலும் இலேசான மகிழ்ச்சியுடன் நம்பிக்கையும் தெரிந்தது.

இந்த வாசகம் சாதாரணமாகத் தோன்றினாலும் கவலையைப் போக்கி ஆறுதல் அளிக்கும் ஒரு நல்ல வாசகமாகத்தான் தெரிகிறது. இறைவன் இருக்கிறானோ இல்லையோ, அவனைக் குறிப்பிட்டு அவன் பார்த்துக்குவான் என்கிற எண்ணத்தில் அதிகப்படியான நம்பிக்கையையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தி விடுகிறது.

இந்த வாசகம் ஆன்மீக ஈடுபாடுடையவர்கள் மத்தியில் கவலையைப் போக்கி இப்படியொரு நம்பிக்கையைத் தோற்றுவித்தாலும் ஒரு சில இடங்களில் அவர்களுடைய இயலாமையையும் வெளிப்படுத்தவும் செய்கிறது.

இதே வாசகம் வலிமையானவர்களிடம் தன்னுடைய சொல்லோ, செயலோ தாழ்ந்து விடும் நிலையில்  "எல்லாம் அவன் பார்த்துக்குவான்..." என்று தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தி ஒதுங்கி விடும் நிலைக்கு அவர்களைக் கொண்டு போய் விட்டு விடுகிறது.

இதே வாசகம் சிலரை தன்னம்பிக்கையுடன் நாம் எந்தவொரு செயலிலும், எளிதில் வெற்றி கொள்ள முடியும் என்கிற எண்ணத்துடன் செயல்படவும் வைக்கிறது. அவர்களும் "எல்லாம் அவன் பார்த்துக்குவான்..."என்று மிகப் பெரிய செயலைக் கூட இலகுவாக நினைத்து இறங்கி அதில் வெற்றியும் பெற்று விடுகின்றனர்.

அறியாமையில் இருப்பவர்களிடம் "உன்னால் எந்த காரியத்திலும் வெற்றி பெற்று விட முடியும், பயப்படாதே...எல்லாம் அவன் பார்த்துக்குவான்..." என்று அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி அவர்களுக்கு தொடர்பில்லாத செயல்களில் இறக்கி விட்டுத் தோல்விக்கு வழி வகுத்து விடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சிலர் தானாகவே கண்மூடித்தனமாக, தன்னைப் பற்றி மிகவும் உயர்வாக நினைத்துக் கொண்டு "எல்லாம் அவன் பார்த்துக்குவான்..." என்றபடி தெரியாத செயல்களில் இறங்கி அந்த செயல்பாட்டில் அரை குறையாக நின்று கொண்டிருப்பதும் உண்டு.

ஒரு சிலர் தவறான பாதைகளில் சென்று கொண்டிருப்பவர்களை நல்வழிப்படுத்துவதற்காக "நல்லது நினை! நல்லது செய்! நல்லது தானாகவே நடக்கும்! எல்லாம் அவன் பார்த்துக்குவான்..."என்று சொல்லி அவர்களது வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி விடுவதும் உண்டு.

இப்படி
ஒவ்வொருவருக்கும இந்த வாசகத்தைப் பயன்படுத்தி பல வழிகளைச் சொன்னாலும், இந்த வழிகாட்டுதல்கள் எல்லாம் உண்மையில் நடைமுறைக்குச் சாத்தியமானதா?

"எல்லாம் அவன் பார்த்துக்குவான்..." என்று சும்மாயிருந்தால் நாம் நினைத்த செயல்கள் எல்லாம் நடந்து விடுமா? இது ஆறுதல் அளிக்கும் அல்லது நம்பிக்கை அளிக்கும் வெற்று வாசகம் மட்டுமே... ஆறுதலோ அல்லது நம்பிக்கையோ மட்டுமே நமக்கு வெற்றியைத் தேடித் தந்து விடுவதில்லை.

எந்த ஒரு செயலுக்கும் சரியான திட்டமிடுதலும், திட்டமிட்டதை விட கூடுதலான செயல்பாடுகளும்தான் தேவையாக இருக்கிறது. நாம் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே எந்தக் காரியத்திலும் வெற்றியைப் பெறமுடியும்.
முயற்சியும் பயிற்சியும் சேர்ந்த செயல்பாடுகள் தராத வெற்றிகளா?

"எல்லாம் அவன் பார்த்துக்குவான்..." என்பது நம்பிக்கை!

"எல்லாம் அவனவன் பார்த்துக் கொள்ள வேண்டும்..." இதுதான் வாழ்க்கை!!

 

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.