........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-23

வாழ்க்கையைச் சுவையாக மாற்றிக் கொள்ள...

                                                                                                  -சக்தி சக்திதாசன், லண்டன்.

எமது செயல்களே எம்மை நிர்ணயிக்கின்றன என்கிற வாசகத்தை நான் படித்துவுடனேயே அது எனது மனதில் பதிந்து கொண்டு ஒரு சத்தமில்லா யுத்தத்திற்கு வித்திட்டது. எத்தனை உண்மையான வாக்கியம்?. நாம் எதை நிர்ணயிக்கிறோமோ அவையே எம்மை நிர்ணயிக்கும் காரணிகளாக மாறுகின்றன. 

எம்மை செதுக்கி எடுக்கும் பணியில் எமது கையில் இருக்கும் உளியாக நாம் நிர்ணயிப்பவைகளே செயற்படுகின்றன. ஆக மொத்தம் ஒவ்வொருவரும் தம்முடைய எதிர்காலத்தை ஆக்குவதோ சிதைப்பதோ அவர்களின் வாழ்க்கையை நோக்கிய பார்வையில் தான் இருக்கிறது. 

இந்தப் பார்வையின் கோணத்தைப் பாதிப்பதற்குப் பல காரணிகள் இருக்கலாம். அதிலே முக்கியமாக அவர்களது இளம்பிராயத்து வளர்ப்பு முறை பெரும் பங்கு வகிக்கிறது எனலாம். ஆனால் தமது செய்கைகளே தம்மை நிர்ணயிக்கின்றன என்பதை உணர முடியாமல், தன்னிலை புரியாமல் நடக்கும் மாந்தர்கள் பலரையே இம்மண்ணில் காண வேண்டியிருக்கிறது. 

உண்மை என்னும் விளக்கொளியில் உள்ளம் என்னும் திரைச்சீலையில் இருக்கும் ஓட்டைகளைப் பார்க்கப் பயந்து, மண்ணில் தலையைப் புதைத்துக் கொள்ளும் வான்கோழி போல வாழ்ந்து கொண்டிருப்பவர்களே பெரும்பான்மையாக உள்ளது போலத் தோன்றுகிறது. 

நாமே எம்மைச் சுற்றிப் பல விலங்குகளைப் போட்டு எம்மைப் பிணைத்துக் கொள்கின்றோம், பின்பு அதிலிருந்து விடுபட முடியாதவர்களாய் சமுதாயம், சமயம், சந்தர்ப்பம் என்று பல காரணிகளை துணையாக இழுத்துக் கொள்கின்றோம்.

எனது நண்பன் ஒருவன் திருமணமாகி பல வருடங்களின் பின்னால் தனது திருமண வாழ்க்கையின்றும் விடுத்துக் கொண்டான். அவனது மணமுறிவுக்கான காரணங்களை  நான் ஆராய முற்படவில்லை, ஆனால் அந்த மணமுறிவில் அவனுக்கிருந்த பங்கை அவன் உளசுத்தியுடன் ஏற்றுக் கொண்டானா ? என்பதே பெரிய கேள்வியாக என் முன்னே தொங்கிக் கொண்டிருக்கிறது. 

குழந்தை வளர்ப்பிலே எது சரி? எது பிழை? என்று மற்றவர்களுக்கு விளக்கம் கொடுத்து வருபவர்களின் சொந்த வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்வுகளைப் பார்க்கும் போது, அதிலே துல்லியமாகத் துலங்கும் உண்மை நெஞ்சில் ஆழமான தடயங்களை ஏற்படுத்தி விடுகிறது. 

சத்தமில்லா யுத்தமாக என்னுள்ளத்தில் எழும் ஓலங்கள் கால நீரோட்டத்தில் காணும் உண்மைகள் எழுத்தில் பதிக்கப்படவேண்டும் என்னும் அளவிலா ஆதங்கத்தின் வழி பிறந்ததேயாகும். 

என்னடா! இவன் ஞானி போல ஏதோ தான் உண்மைகளைப் பேசுவது போல பேசுகிறான் என்று என்னைப் பார்த்து எண்ணாதீர்கள். இந்த யுத்ததின் வழி என் மனதையும் நான் கீறிப்பார்க்கிறேன்.  என்னையும் நான் கேள்விக்கணைகளால் துளைக்கின்றேன். 

"எங்கே வாழ்க்கை தொடங்கும்?அது எங்கே எவ்விதம் முடியும்?"எனக் கேள்விக்கணை தொடுத்த கவியரசர் கண்ணதாசன் வாழ்க்கை சிறுகூடல் பட்டியில் தொடங்கி சிக்காகோ நகரில் முடிந்தது. 

இதுவே உண்மை! இதுவே யதார்த்தம்!! 

ஒரு மனிதனுடைய கேள்வி தன்னில் ஆரம்பித்து தன்னில் முடியும் போதுதான் அது முற்றுப்பெறுகிறது. வாழ்க்கையின் தேடல்கள் கூட அப்படித்தான். 

நாம் செய்யும் அனைத்துச் செயல்களிலும், நினைக்கும் அனைத்து நினைப்புகளிலும் தூயவர்களாக இருந்து விட முடியாது. அப்படிப்பட்ட மனம் மனித மனமாக இருக்க முடியாது. 

ஆனால் உண்மைகளின் வழி நின்று கண்களில் தெரியும் சில தப்புக் கணக்குகளைத் தவறான எண்ணங்களை உள சுத்தியோடு ஏற்றுக் கொண்டு அதற்கான நிவாரணத்தை தேடும் வழியைக் கடைப்பிடிக்க முற்பட்டால் பாதி மனிதாபிமான மிக்கவர்களாகி விடுவோம். 

தவறுகளின் மீது ஏறி நின்று கொண்டு தப்புகளின் துணையோடு வாழ்க்கையின் நிகழ்வுகளை நியாயப்படுத்த முற்பட்டால் அங்கே மனிதாபிமானம் கைகாட்டிக் கொண்டு விடைபெற்று விடுகிறது. 

எனது சொந்த வாழ்க்கையில் நானடைந்த பல கசப்பான அனுபவங்கள் நானே எனது செயல்களால் ஏற்படுத்திக் கொண்டவையே... அந்தக் கசப்பான உணர்ச்சிகளை, அனுபவங்களை எனக்கு அளிக்கக் காரணமாயிருந்தவர்கள் மீது எனக்கு மனவருத்தம் இருந்தாலும் கூட அது நிகழ்வதற்கு ஏதுவாக இருந்த எனது செய்கைகளை கணக்கிலெடுக்காமல் கண்மூடித்தனமாக நான் நடந்த தருணங்கள் பலவுண்டு. 

இந்த சத்தமில்லா யுத்தம் கூட என் மனதின் அழுக்குகளை வெளுக்கும் ஒரு முயற்சிதான்... உள்ளத்தில் ஓயாமல் எழும் ஓலங்களுக்கு, கேள்விகளுக்கு ஒரு வடிகால் அமைத்து அதனை கருத்து என்னும் தோட்டத்தை நோக்கிப் பாய்ச்சப் பழகிக் கொண்டால் எந்தச் சபலத்தையும் சமாளிக்கும் மன தைரியம் உண்டாகும். 

"பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் 
பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் 
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் ? 
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் 
உள்ளம் கேட்பேன்..."

ஆமாம், இது கவியரசர் கண்ணதாசன் அவர்களின் அற்புதமான வரிகள். செய்யும் செயல்களுக்கு கிடைக்கும் பலன் பல சமயங்களில் யாருடைய மனதிலும் தென்படுவதில்லை. ஆனால் அந்தச் செயலைப் புரியும் போது பலனை எதிர்பார்த்தா செய்கிறோம்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, உதவியைப் பெற்றுக் கொண்டோர் உதைக்கும் போது மனது பதைக்கத்தான் செய்யும். அப்போது ஏற்படும் காயத்துக்கு மருந்துதான் கவியரசரின் இந்த அற்புதமான வரிகள். உள்ளத்தின் ஒவ்வொரு ஏக்கத்திற்கும், வாழ்க்கையில் ஒவ்வொரு நோக்கத்திற்கும் சரியான விளக்கத்தை நமக்கு நாமே வழங்கிக் கொள்ளப் பழகிக் கொள்வது அவசியம். 

அப்போதுதான் சூழ்நிலைகளால் நமது வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளை விளங்கிக் கொள்ள முடியும். வாழ்க்கையைச் சுவையாக மாற்றிக் கொள்ள முடியும். 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.