அவசரமாக ராக்கெட் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும்
இந்த உலகத்தினிலே மனங்களுடன் ஓர் ஜந்து நிமிடம் மனம் திறக்க விரும்புகின்றேன்.
மனது கொஞ்சம் இலேசாகின்றது.எம்மைச் சுற்றியுள்ள இந்தச் சமுதாயத்திற்காக நாம்
வாழ்கின்றோமா? அன்றி எமக்காக இந்தச் சமுதாயாமா? இது மனதினிலே விடையின்றி
தொங்கிக் கொண்டிருக்கும் ஓர் வினா.
நாம் புரியும் காரியங்களிலோ அன்றி அவற்றிற்கான காரணங்களிலோ சமுதாயத்தின்
தாக்கங்கள் நிச்சயமாய் நிதர்சனமாகிக் கொண்டுதான் இருக்கின்றது. இது தவிர்க்க
முடியாத ஓர் நிகழ்வாகின்றது. நாம் எம்மை அறியாமலே எல்லாவற்றையும் ஒப்பிட்டு
பார்க்கும் ஓர் மன நிலையை எய்துகின்றோம். பல சமயங்களில் எமது தராசுத்தட்டு நாம்
எதனோடு அன்றி எவரோடு ஒப்பிட்டு பார்க்கின்றொமோ அந்தத் தட்டை விட மேலேயே
நிற்கின்றது. இது எமது எதிர்பார்ப்புக்கு ஏமாற்றத்தையே அளிக்கின்றது.
ஓர் சிறிய உதாரணத்தை எடுத்தோமானால் ஓர் நகைக்கடைக்குப் போகின்றோம். உள்ளே
நுழையும் போது என்ன வாங்கப் போகின்றோம் என்ற ஓர் தீர்மானத்துடன் தான் போவதாக
எண்ணுகின்றோம். ஆனால் அந்தக் கடையை விட்டு வெளியேறும் போது முற்றிலும் வேறுபட்ட
ஓர் பொருளுடன் வருகின்றோம்.உள்ளெ சென்றதற்கும், வெளியே வருவதற்கும் இடைப்பட்ட
அந்த நேரத்தினிலே எமது மனத்தினிலே எதிர்பார்ப்பு, ஏமாற்றம், ஒப்பிடுகை ஆகிய
உணர்ச்சிகளுக்கிடையே ஓர் போராட்டம் நடக்கின்றது. இந்த உணர்ச்சிகளில் எது வெற்றி
பெறுகின்றதோ அதன் விளைவே எமது கைகளில் இறுதியாய் தவழும் அந்தப் பொருள்.
வாழ்க்கையிலே ஓர் கொள்கையைக் கொண்டிருப்பதாக எண்ணுகின்றோம். இது ஓர் போலியான
நம்பிக்கையே. மிகவும் எளிமையாக எனது வாழ்க்கையை நடத்துவேன் என கொள்கையுடைய ஓர்
இளைஞன் இல்லற வாழ்வில் நுழைகின்றான். அவனது கொள்கை இரயில் சமுதாயம் எனும்
தண்டவாளத்தின் சீரற்ற நிலையினால் தடம் புரளுகின்றது. அவனச் சுற்றி அவனால்
பிணக்கப்பட்ட குடும்பம் எனும் அன்பு வலை சமுதாயம் எனும் புயல் காற்றின்
உதவியுடன் அவனை இறுகப் பின்னி விடுகின்றது.
எளிமையான வாழ்க்கை எனும் அவனது கொள்கை தொலைவில் நின்று அவனைப் பார்த்து ஏளனச்
சிரிப்பொன்றை உதிர்க்கின்றது. அவனைச் சுற்றியுள்ள அவனால் தேடப்பட்ட சொந்தங்களின்
தாக்கங்களினால் அவனது வாழ்க்கை முறை மாறுகின்றது. எதை அவசியமற்ற வீணான செலவுகள்
என்று எண்ணினானோ அவை அத்தியாவசியமாகின்றன.
அப்போதுதான் மனத்தினிலே உறங்கிக் கொண்டிருந்த உண்மைகள் விழித்துக் கொள்கின்றன.
சமுதாயத்தின் தாக்கத்தின் விளைவுகள் வாழ்வின் பாதையை மாற்றும் வித்தையை
மெத்தெனக் கற்றுக் கொள்கின்றோம். கொள்கை கண்ணாடி அலமாரியில் காட்சிக்காக வைத்து
அழகு பார்க்கும் ஓர் பொருள் எனும் உண்மை விளங்குகின்றது.
சமுதாயமின்றி நாமில்லை, நாமின்றி சமுதாயமில்லை ஆனால் யார் யாரை நடத்திச்
செல்கின்றார்கள் என்பது இன்றுவரை பலரின் மனதினில் விடையற்ற வினாவாகவே
இருக்கின்றது என்பது தான் உண்மை.
மனத்தினிலே தூக்கி வந்த சுமையில் ஓர் பங்கை இறக்கி விட்டேன், பாரம் குறைந்த
மனத்துடன் என் பயணத்தை மீண்டும் தொடர்கின்றேன்.

சக்தி
சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள்

முந்தைய மனம் திறந்து பார்க்க
