இறைவன் ஆதாமைப் படைத்தார். ஆதாமுக்கு இறைவன் அனைத்தும் வழங்கினார். ஈடன்
தோட்டத்தில் உள்ள காய் கனிகளை சிரமமில்லாமல் பறித்து உண்டு வந்தான். அவனுக்குத்
தேவையான, விதவிதமான உணவு வகைகளும் எளிதில் கிடைத்து வந்தன. ஆகவே ஆதாம்
மகிழ்ச்சியாகவே இருந்தான்.
இறைவனின் கட்டளைப்படி தோட்டத்தின் மத்தியில் உள்ள நன்மை மற்றும் தீமை தரக்கூடிய
மரத்தின் கனிகளை மட்டும் அவன் உண்ணுவதில்லை. இதனால், அவனுக்கு நன்மை மற்றும்
தீமை, இன்பம் மற்றும் துன்பம், விறுப்பு மற்றும் வெறுப்பு, நட்பு மற்றும் பகை
என்கிற இரண்டு பகுதிகளில் ஆதாமுக்கு அனுபவம் கிடையாது. அவன் தனி மனிதன். மனைவி,
மக்கள், அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என உறவுகள் எதுவுமே அவனுக்குக் கிடையாது.
உறவுகள் இருந்தால்தானே நட்பு பகையாகவும், பகை நட்பாகவும் மாறி மாறி வரும்;
எவரிடமும் வெறுப்பு கொள்ள முடியும்!.
ஆதாம் ஈடன் தோட்டத்தில் மகிழ்ச்சியுடன் காலமற்ற வாழ்க்கையை நடத்தி வந்தான். ஆகவே
தனது மகிழ்ச்சிக்கு இறைவன்தான் காரணம் என்பதை மறக்கிறான். மகிழ்ச்சியான வாழ்க்கை
நாளடைவில் அவனுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. உழைப்பும் அவனிடம் இல்லை. இதனால்,
அவன் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறான். இறைவன், அவனுக்கு ஏற்படும் நோய்களை
அவ்வப்போது குணப்படுத்தி விடுகிறார். இதனால் நோய்களினால் உண்டாகும் துன்பங்களும்
துயரங்களும் ஆதாமுக்குத் துளி கூட கிடையாது. துயரம், துன்பம் இல்லாததால்
மகிழ்ச்சியான வாழ்க்கைதான். வேறு வாழ்க்கை கிடையாது என்று ஆதாம் நினைத்துக்
கொண்டிருந்தான். அந்த வாழ்க்கையை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்
பட்டிருக்கிறோம் என்ற எண்ணமும் இல்லாதிருந்தான்.
அவனுடைய சலிப்பைப் போக்க அவனுடைய தனிமையை அகற்ற வேண்டும். இதற்கு அவனுடைய வலது
பக்க விலா எலும்பிலிருந்து ஒரு எலும்பை எடுத்து ஏவாள் என்ற பெண்ணைப் படைத்தார்.
ஏவாளிடமும் இறைவன் ஆதாம் மூலமாக நன்மை மற்றும் தீமை தரக்கூடிய மரத்தின் கனிகளை
உண்ணக் கூடாது என்ற கட்டளையை தெரிவிக்கச் செய்தார். அனைத்தும் அவர்களுக்குக்
கிடைத்தாலும், ஆதாமின் தனிமை நீங்கினாலும், இருவருக்கும் எளிதில் கிடைக்கும்
மகிழ்ச்சி சற்று தூரமாகப் போக ஆரம்பித்தது. இறைவன் நேரடியாக வந்து அவர்களுடைய
தேவைகளை நிறைவேற்றும் அருமையையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை, உணரவும் இல்லை.
இறைவன் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தார். அந்த முடிவு இதுதான்.
அவனுக்குண்டான உணவை அவனே தேடிக் கொள்ள வேண்டும்.
அதற்கு அவன் உழைக்க வேண்டும். அவ்வாறு உழைப்பதற்கு அவனுக்கு நல்ல உடலும் மனமும்
இருக்கும்படியாக அவன் உடலை அவன் நன்கு பேணிக் காக்க வேண்டும். அவனுக்கு வரும்
நோய்களை அவனே குணப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் உழைப்பினால் கிடைக்கும்
வருவாயைக் கொண்டு அவனுடைய தேவைகளை அவன் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
அவனுடைய உழைப்புக்குத் தகுந்தவாறு அவனுடைய செல்வம் பெருகும். மகிழ்ச்சி மட்டுமே
கிடைத்து வந்தால், அதன் அருமை அவனுக்குத் தெரியாது. சில நிமிடம், சில மணி நேரம்,
சில நாட்கள் துன்பப்பட்டு மீண்டும் மகிழ்ச்சி கிடைக்கச் செய்தால், அப்பொழுதுதான்
மகிழ்ச்சியின் அருமை அவனுக்குத் தெரியும். அவன், தன்னுடைய இருப்பை உணர வேண்டும்;
தான் அனைத்தையும் நடத்துவதையும் அவன் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், நன்மை மற்றும் தீமை, இன்பம் மற்றும் துன்பம், விறுப்பு மற்றும் வெறுப்பு,
வெயில் மற்றும் நிழல், நட்பு மற்றும் பகை, இரவு மற்றும் பகல் ஆகிய இரட்டைகளின்
அனுபவங்களை அவன் பெற வேண்டும். இதற்கு அவன் நன்மை மற்றும் தீமை தரக்கூடிய
மரத்தின் பழங்களை உண்ணச் செய்ய வேண்டும். இறைவனின் அருமையயும் ஆற்றலையும் அவனை
அறியச் செய்ய வேண்டும். தான் நேரில் தோன்றி காட்சி தருவதையும் நிறுத்திக் கொள்ள
வேண்டும். தன்னுடைய இருப்பிடத்தை அவர்களிடமிருந்து மறைத்து வைக்க வேண்டும்.
அவர்களுடைய வாழ்க்கை நீரோட்டத்தில் அவர்கள் தன்னுடைய இருப்பிடத்தை கண்டுபிடிக்க
வேண்டும். கண்டுபிடித்து வரும் போது, அவர்கள் பூரண உடல் நலத்துடன் இருக்க
வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தன்னை வந்து அடைய முடியாதபடி ஒரு அமைப்பை
அவர்களின் உடலில் அமைக்க வேண்டும். இதன் மூலம், உடல் மன நலம்தான் தன்னை அடையும்
சிறந்த வழிபாடு மற்றும் உயர்ந்த ஆன்மீகம் என்கின்ற உயர்ந்த கோட்பாட்டினை
நிரந்தர ஆன்மீகச் சட்டமாக ஆக்க வேண்டும். இந்தச் சட்டத்தை அவர்களுக்கு ஆக்க
வேண்டும். இந்தச் சட்டத்தை அவர்கள் கடைப்பிடிக்கும் போது அவர்கள் பூரண உடல் மன
நலத்துடன், ஆன்மீகத்தின் சிகரத்தில் இருப்பார்கள்; தன்னுடைய பூரண அருளைப்
பெறுவார்கள். இரட்டைகளின் அனுபவங்களினால் பாதிக்கப்பட மாட்டார்கள். காலமற்ற
வாழ்க்கையின் அனுபவத்தைப் பெறுவார்கள். தன்னால் படைக்கப்பட்ட இயற்கையின் முழு
ஒத்துழைப்பும் கிடைக்கும். தன்னுடைய இருப்பை ஒவ்வொரு நிமிடமும் உணர்வார்கள்.
தனது முடிவை செயலுக்கு கொண்டு வர அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினார். ஆதாம்
தனது கட்டளையை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பான் என்பது இறைவனுக்குத் தெரியும்.
ஆகவே, தனது திட்டத்தைச் செயல்படுத்த ஏவாளே சிறந்தவள்; அவளைக் கொண்டே தனது
திட்டங்களை நிறைவேற்ற முடிவெடுத்தார். தூண்டிவிட ஒரு ஆள் வேண்டுமே!. பளிச்சென்று
ஒரு உருவம் தோன்றி மறைந்தது. விஷமத்தனமான, விஷம் கொண்ட நல்ல பாம்பினைத்
தேர்ந்தெடுத்தார். ஏவாளிடம் பேசுமாறு இறைவன் பாம்பிற்கு கட்டளையிட்டார். ஆனால்
“இறைவன்தான் பாம்பிற்கு கட்டளையிட்டார்” என்பது ஏவாளுக்கு தெரிய வேண்டாம்
என்பதையும் பாம்புவிடம் சூசகமாக தெரிவித்து விட்டார்.
பாம்புவும் ஏவாளிடம், “தோட்டத்தின் மத்தியில் உள்ள நன்மை தீமை தரக்கூடிய
மரத்தின் பழங்களை சாப்பிடுங்கள்! சுவையாக இருக்கும்” என்று சொல்கிறது.
ஆண்டவனின் கட்டளையை நினைவுபடுத்தி, அதை ஏவாள் மறுக்கிறாள்.
“நான் சொல்வதைக் கேள் மகளே! இறைவனுக்குப் பயம்! எங்கே அந்தப் பழங்களை
சாப்பிட்டால் நீங்களும் அவருடைய அறிவைப் பெற்று தேவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று!”
என்று பாம்பு பதில் கூறுகிறது.
ஏவாள் அதிசயத்துடன் “என்ன! இறைவனின் அறிவை நாங்கள் பெற்று விடுவோமா! அவரைப் போல
தேவர்களாக ஆகி விடுவோமா!” என்று வியப்புடன் கேட்கிறாள்.
பாம்பும் ஆமாம் என்று பதில் அளிக்கிறது.
ஏவாள் உடனே தன் கணவன் ஆதாமிடம் சென்று இதைச் சொல்ல, அதற்கு அவன் “இறைவனின்
கட்டளையை மீறலாமா!” என்று ஏவாளிடம் கேட்கிறான். ஏவாளும் “அவருக்கு நாம் ஏன்
பயப்பட வேண்டும்! அவரைப் போல நாமும் ஆகி விடுவோம் என்று பயந்துதான், அவர் இந்த
மரத்தின் கனிகளை சாப்பிட வேண்டாம் என்று கட்டளையிட்டிருக்கிறார்!” என்று
பதிலளிக்கிறாள்.
கையில் பறித்து வைத்திருந்த நன்மை மற்றும் தீமை தரக்கூடிய மரத்தின் கனிகளை
ஆதாமுக்கு சிலவற்றை தந்துவிட்டு சிலவற்றை தானும் உண்ணுகிறாள். ஆதாமும் வேறு
வழியில்லாமல், தயக்கத்துடன் ஏவாள் கொடுத்த கனிகளை உண்ணுகிறான். பிறகுதான்
விபரீதமும் நடக்கிறது, ஆண்டவனின் திட்டமும் நிறைவேறுகிறது.
கனிகளை உண்டவுடன் இருவரின் ஞானக் கண்களும் மூடப்படுகின்றன.
உடனே ஏவாள் முதல் நாள் தன் கணவனுடன் கொண்ட தாம்பத்ய உடலுறவை கற்பனை செய்து
பார்த்து இன்பம் அடைகிறாள்! அப்பொழுதுதான், தான் நிர்வாணமாக இருப்பதை அறிந்து
ஏவாள் ஓடி மரத்தின் பின்னால் தன் நிர்வாண உடலை கணவனிடமிருந்து மறைக்கிறாள்! இதே
நிலைக்கு ஆளான ஆதாமும் ஓடிச் சென்று மரத்தின் பின்னால் தன் நிர்வாண உடலை
மறைத்துக் கொள்கிறான்!
இறைவன் வருகிறார். ஆதாமையும் ஏவாளையும் சத்தம் போட்டு அழைக்கிறார். ஆதாம்,
“இறைவா, நாங்கள் நிர்வாணமாக இருக்கிறோம்!. வெளியே வரமுடியாது!. இதற்குக் காரணம்
நானில்லை!. ஏவாள்தான்! தோட்டத்தின் மத்தியில் உள்ள நன்மை தீமை தரக்கூடிய
மரத்தின் கனிகளை பறித்து உண்ணக் கொடுத்தாள்!”, என்று சொல்லி மனைவி மீது பழியைப்
போட்டு ஆதாம் தப்பிக்கப் பார்த்தான்.
இறைவன் முகத்தில் ஒரு சிறிய புன்முறுவல் பூத்தது. இதைத்தான் எதிர்பார்த்தார்.
இறைவன் இருவர் மீதும் கோபப்படுவது போல நடித்தார். “என்னுடைய கட்டளையை இருவரும்
மீறிவிட்டீர்கள்!. இனி நீங்கள் இந்த ஈடன் தோட்டத்தில் வாழ்வதற்கு
முடியாதவர்களாகி விட்டீர்கள். இத்தோட்டத்தை விட்டு வெளியேறுங்கள்!”, என்று
கோபத்துடன் சத்தம் போட்டார்.
ஏவாளைப் பார்த்து “நீ வலி எடுத்து குழந்தைகளைப் பெற்றெடுப்பாய்!” என்று
சாபமிடுகிறார்.
ஆதாம் “இறைவா! முதல் முறையாக தவறு செய்து விட்டோம்!. எங்களை மன்னித்து ஈடன்
தோட்டத்தில் வாழ விடுங்கள்!”, என்று கெஞ்சுகிறான். முதன் முறையாக துன்பம் என்ன
என்பதை இப்பொழுதுதான் அவன் அறிகிறான். இறைவன் அவர்கள் இருவரையும் ஈடன்
தோட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறுத்து விடுகிறார்.
ஆதாம் அழுதபடி கேட்கிறான் “நாங்கள் எப்படி வாழப் போகிறோம். சாப்பாடு யார்
கொடுப்பார்கள்”. இறைவன் பதிலளிக்கிறார் “இந்தப் பூமியில் உள்ள பரந்த
நிலப்பரப்பைத் தருகிறேன். நீயும் உன் சந்ததியாரும் உழைத்து நெற்றியின் வியர்வை
நிலத்தில் விழப் பாடுபட வேண்டும். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் தான்
சாப்பிட வேண்டும். உங்களது உடல் மன நலத்தை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள
வேண்டும். இன்றையிலிருந்து காலமுள்ள வாழ்க்கையை வாழப் போகிறீர்கள். இரட்டைகளின்
அனுபவத்தை பெறுவீர்கள்”.
ஆதாம் விம்மிக் கொண்டே கேட்கிறான் “இறைவா தங்களை நாங்கள் எங்கே மீண்டும்
பார்க்க முடியும்? தங்களை அடைய வழி சொல்லுங்கள்!. மீண்டும் மகிழ்ச்சி,
எங்களுக்கு எப்பொழுது கிடைக்கும்? நாங்கள் பாவ விமோசனம் பெறுவதற்கு வழி
சொல்லுங்கள்! அதற்கு, இறைவன், “நீங்களும், உங்கள் சந்ததியினரும் பேசிப்
பழகக்கூடிய மொழிகளில் இரண்டு வார்த்தைகளை புழக்கத்தில் விடுகிறேன்!. அந்த
வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவீர்கள்!. ஆனால் அவைகளின் உள் அர்த்தத்தைப்
புரிந்து கொள்ளாமல் தவறுக்கு மேல் தவறு செய்வீர்கள்! அதன் பலன்களை, நன்மை
தீமைகளை, இன்ப துன்பங்களை அனுபவிப்பீர்கள்! என்றைக்கு யார் யார் அந்த
வார்த்தைகளின் சரியான பொருளைப் புரிந்து கொண்டு செயலுக்கு கொண்டு வருகிறார்களோ,
அன்று அவர்களது ஞானக் கண் திறந்து கொள்ளும்! அவர்களெல்லாம் என்னுடைய
இருப்பிடத்தை அறிந்து என்னிடம் வந்து சேர்வார்கள்! இந்த ஈடன் தோட்டத்திற்குள்
நுழையலாம்! மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடரலாம்!” என்று சொல்லி அவர்களை
வழி அனுப்பி வைத்தார்.
இதைப் படிக்கும் வாசகர்கள் இறைவன் அருளிய அந்த இரண்டு வார்த்தைகளை கண்டு
பிடியுங்கள்! அந்த வார்த்தைகளின் உள் அர்த்தங்களை புரிந்து கொண்டு செயலுக்குக்
கொண்டு வாருங்கள்! அந்த நாளில் உங்களது ஞானக் கண் திறந்து கொள்ளும்; இறைவன்
இருக்கும் இடத்தையும் அறிவீர்கள்! அவரிடம் தஞ்சம் புகுவீர்கள்! இழந்த
மகிழ்ச்சியான வாழ்க்கையை மீண்டும் பெறுவீர்கள்!

ஆர்.ஏ.பரமன்
(அரோமணி) அவர்களின் பிற படைப்புகள்

முந்தைய மனம் திறந்து பார்க்க
